விண்வெளியில் இருந்து பார்த்தபோது இந்தியா எப்படி இருந்தது? சுனிதா வில்லியம்ஸ் அடடே பதில்.. செம
வாஷிங்டன்: கடந்த 8 மாதங்களாக விண்வெளியில் இருந்த சுனிதா வில்லியம்ஸ் சமீபத்தில் தான் பூமி திரும்பியிருந்தார். இதற்கிடையே அவர் செய்தியாளர்களைச் சந்தித்து தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். அப்போது விண்வெளியில் இருந்து பார்த்தால் இந்தியா எப்படி இருந்தது என்ற கேள்விக்கு அவர் சுவாரசியமான பதிலைப் பகிர்ந்து கொண்டார்.
கடந்தாண்டு ஜூலை மாதம் வெறும் ஏழு நாள் பயணமாக விண்வெளிக்குச் சென்றவர் சுனிதா வில்லியம்ஸ். இருப்பினும், அங்கு எதிர்பார்க்காத வகையில் நடந்த சில சம்பவங்களால் 7 நாள் பயணம் என்பது 8 மாத பயணமாக மாறியது. இத்தனை காலம் அவர் சர்வதேச விண்வெளி மையத்திலேயே இருந்து தொடர்ச்சியாக ஆய்வுப் பணிகளைச் செய்து கொண்டு இருந்தார்.

சுனிதா வில்லியம்ஸ்
இந்தச் சூழலில் தான் சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் உள்ளிட்டோரைப் பத்திரமாகப் பூமிக்கு அழைத்து வர அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் மூலம் அவர்கள் கடந்த மாதம் 19ம் தேதி பூமிக்கு அழைத்து வரப்பட்டனர். பூமி திரும்பிய அவர்களுக்கு மருத்துவச் சிகிச்சை செய்யப்பட்டது. மேலும், அவர்கள் இத்தனை காலம் ஓய்வில் இருந்தனர்.
இதற்கிடையே செய்தியாளர்களைச் சந்தித்த சுனிதா வில்லியம்ஸ், விண்வெளியில் இருந்து தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். அப்போது அவர் விண்வெளியில் இருந்து பார்த்தபோது இந்தியா எப்படித் தோன்றியது என்று கேள்விக்கு, மிகவும் அற்புதமாக இருந்ததாக அவர் குறிப்பிட்டார். அமெரிக்காவைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவர். கடந்த காலங்களிலும் அவர் பல முறை தனது இந்திய வேர்களைப் பற்றிப் பேசியுள்ளார்.
இந்தியா அற்புதமானது
அவர் மேலும் கூறுகையில்,"இந்தியா அற்புதமானது. நாங்கள் இமயமலையைக் கடந்து செல்லும் ஒவ்வொரு முறையும் புட்ச் வில்மோர் உட்பட சக விண்வெளி வீரர்கள் நம்பமுடியாத அளவுக்கு அழகான போட்டோக்களை எடுத்தனர். அது மிகவும் அற்புதமாக இருந்தது" என்றார். மேலும், இந்தியாவின் கடற்கரைகள் முதல் பிரமாண்டமான இமயமலை வரை எல்லாமே அழகாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
எப்படி இருந்தது
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "இந்தியா பல்வேறு வண்ணங்களைக் கொண்ட ஒரு நாடாக இருந்தது. நீங்கள் கிழக்கிலிருந்து குஜராத் மற்றும் மும்பை மேலே செல்லும்போது பார்த்தால் அழகிய கடற்கரை தெரியும். இரவு நேரங்களில் இந்தியா பெரிய நகரங்களிலிருந்து சிறிய நகரங்கள் ஒளிரும். அதேநேரம் இரவிலும் சரி பகலிலும் சரி என்னை எப்போதும் பிரமிக்க வைப்பது இமயமலை தான். அது எப்போதும் நம்பமுடியாததாக இருக்கும்" என்றார்.
விண்வெளிக்கு செல்லும் இந்தியர்
இந்தாண்டின் பிற்பகுதியில் நான்கு விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் நாசாவின் ஆக்ஸியம் பணி குறித்தும் உற்சாகமாக இருப்பதாக சுனிதா வில்லியம்ஸ் கூறினார். இந்த ஆக்ஸியம் பயணத்தில் இந்திய விமானப்படை சோதனை விமானியும் இஸ்ரோ விண்வெளி வீரருமான சுபான்ஷு சுக்லாவும் பயணிப்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக சுனிதா வில்லியம்ஸ் மேலும் கூறுகையில், "இந்த பயணம் அருமையாக இருக்கும். சுபான்ஷு சுக்லா மூலம் அவர்களுக்கு ஒரு உள்ளூர் ஹீரோ கிடைப்பார்கள். விண்வெளியில் இருந்து பார்த்தால் இந்தியா எப்படி இருந்தது என்பதை அவரும் சொல்வார்" என்றார்.
இந்தியாவுக்கு நிச்சயம் உதவுவேன்
இந்தியாவின் விண்வெளி திட்டத்திற்கு உதவுவீர்களா என்ற கேள்விக்கு அவர், "எனது விண்வெளி அனுபவத்தைத் தகவல்களை இந்தியர்களுடன் பகிர்ந்து கொள்ள நான் ஆர்வமாக இருக்கிறேன். அது ஒரு நாள் நிச்சயம் நடக்கும் என நம்புகிறேன். இந்தியா ஒரு சிறந்த நாடு.. மேலும், அற்புதமான ஜனநாயகம்.. இந்தியா நீண்ட காலமாக விண்வெளியில் கால் பதிக்க முயல்கிறது. அவர்களுக்கு உதவ விரும்புகிறேன்" என்றார்.












Click it and Unblock the Notifications