எப்படி இருக்கு பாருங்க! நிலவில் ரஷ்யாவின் லூனா 25 விண்கலம் விழுந்து நொறுங்கிய இடம் இதுதான் - நாசா
வாஷிங்டன்: இந்தியாவை முந்தி நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய சென்ற ரஷ்யாவின் லூனா 25 விண்கலம் எதிர்பாராத விதமாக நிலவில் விழுந்து நொறுங்கியது. இந்நிலையில் தான் லூனா 25 விண்கலம் நிலவில் விழுந்து நொறுங்கிய இடத்தை நாசாவின் ஆர்ப்பிட்டர் கண்டுபிடித்துள்ளது.
நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய இந்தியா சார்பில் சந்திரயான் 3 திட்டம் வகுக்கப்பட்டது. ஜூலை மாதம் 14ம் தேதி சந்திரயான் 3 விண்ணில் செலுத்தப்பட்டது. கடந்த மாதம் 23ம் தேதி சந்திரயான் - 3 விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. அதன்பிறகு விக்ரம் லேண்டரில் இருந்து வெளிவந்த பிரக்யான் ரோவர் நிலவில் கால்பதித்தது.

தற்போது விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் உள்ளிட்டவை நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்து வருகின்றன.
இந்த வெற்றியின் மூலம் நிலவில் கால்பதித்த நாடுகளின் பட்டியலில் ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா 4 வது இடத்தையும், நிலவின் தென்துருவத்தில் இறங்கிய முதல் நாடு என்ற பெருமையையும் இந்தியா பெற்றுள்ளது.
முன்னதாக ரஷ்யாவும் நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய லூனா-25 என்ற விண்கலத்தை அனுப்பியது. கடந்த மாதம் 10ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட இந்த விண்கலம் நேரடியாக நிலவை நோக்கி பயணித்தது. இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலத்துக்கு முன்பாக ஆகஸ்ட் 21ம் தேதி நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கும் என தெரிவிக்கப்பட்டது. இதன்மூலம் நிலவின் தென்துருவத்தில் கால்பதிக்கும் முதல் நாடு என்ற பெருமையை இந்தியாவிடம் இருந்து தட்டிப்பறிக்க ரஷ்யா முயற்சித்தது.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக நிலவில் தரையிறங்குவதற்கு முன்பு லூனா -25 விண்கலத்தின் நிலவின் கடைசி சுற்றுவட்டபாதையில் வேகத்தை குறைக்கும்போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் தரைக்கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து லூனா -25 விண்கலம் தொலைதொடர்பை இழந்தது. அதோடு லூனா-25 விண்கலம் நிலவில் மோதி நொறுங்கியது. இதனை ரஷ்யா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ராஸ்கோஸ்மோஸ் உறுதி செய்துள்ளது.
இதனால் ரஷ்யாவின் லூனா 25 திட்டம் தோல்வியடைந்தது. மேலம் லூனா 25 விண்கலம் நிலவின் மேற்பரப்பில் விழுந்து நொறுங்கியதற்கு முக்கிய காரணம் என்பது அதில் இருந்த சில கருவிகள் சரியாக செயல்படாதது தான் என கூறப்படுகிறது. இந்நிலையில் தான் ரஷ்யாவின் லூனா 25 விண்கலம் நிலவில் விழுந்து நொறுங்கிய இடத்தை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் லூனார் ரீகனைசென்ஸ் ஆர்பிட்டர் கண்டுபிடித்துள்ளது.
நாசாவின் கோடார்ட் ஸ்பேஸ் ஃப்ளைட் மையத்தின் மூலம் லூனார் ரீகனைசென்ஸ் ஆர்ப்பிட்டர். இது கடந்த 2009 ஜூன் மாதம் 18 ம் தேதி முதல் நிலவு ஆய்வில் ஈடுபட்டு வருகிறது. இது 2025ம் ஆண்டு வரை செயல்பட உள்ளது. இந்த ஆர்ப்பிட்டர் தற்போது நிலவின் சுற்றுவட்டபாதையில் வலம் வந்து நிலவின் மேற்பரப்பை போட்டோ எடுத்து நாசாவுக்கு அனுப்பி வருகிறது.

இந்நிலையில் தான் நிலவின் ஒருபகுதியில் கடந்த 2022 ஜூன் மாதம் இந்த ஆர்ப்பிட்டர் போட்டோ எடுத்து அனுப்பி இருந்தது. ஆனால் தற்போது அந்த இடத்தை மீண்டும் போட்டோ எடுத்து அனுப்பியது. அதில் புதிதாக பள்ளம் உருவாகி இருப்பது தெரியவந்தது.இந்த பள்ளம் 10 மீட்டர் விட்டத்தில் உள்ளது. மேலும் நிலவின் 57.865 டிகிரி தெற்கு அட்சரேகை மற்றுமு் 61.360 டிகிரி கிழக்கு தீர்க்கரேகை பகுதியில் இந்த பள்ளம் ஏற்பட்டுள்ளது. அதோடு லூனா - 25 விண்கலம் தரையிறங்கும் இடத்திலிருந்து சுமார் 400 கிலோமீட்டர் தொலைவில் இந்த இடம் அமைந்துள்ளது.
இதனால் இந்த பள்ளம் என்பது ரஷ்யாவின் லூனா 25 விண்கலம் நிலவின் மேற்பரப்பில் விழுந்தததால் இந்த பள்ளம் உருவாகி இருக்கலாம் என நாசா நம்புகிறது. அதோடு இந்த பள்ளம் இயற்கையானதாக உருவாக வாய்ப்பில்லை எனவும் நாசா கூறுகிறது. இருப்பினும் இதுபற்றி ரஷ்யா தரப்பில் இன்னும் எந்த தகவலும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications