கடைசி நொடியில் குழப்பம்.. நிலவில் தரையிறங்கியே ஏதீனா லேண்டருக்கு என்னாச்சு! எதிர்காலத்திற்கே சிக்கல்
வாஷிங்டன்: நிலவில் தங்கி ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளத் தொடக்கப் புள்ளியாகக் கருதப்பட்ட ஏதீனா லேண்டர் சந்திரனில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. இருப்பினும், கடைசி நிமிடத்தில் அதில் சிறு குழப்பம் ஏற்பட்ட நிலையில், ஏதீனா லேண்டர் தற்போது என்ன நிலையில் இருக்கிறது என்பதே தெரியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
சமீப ஆண்டுகளாகவே மீண்டும் நிலவு குறித்த ஆய்வுகள் தீவிரமடைந்துள்ளன. அதிலும் குறிப்பாக இப்போது தனியார் நிறுவனங்களே நிலவு குறித்த ஆய்வுகளை நாசா உடன் இணைந்து மேற்கொண்டு வருகிறது.

ஏதீனா லேண்டர்
அதன்படி இன்டியூட்டிவ் மெஷின் என்ற நிறுவனம் உருவாக்கிய ஏதீனா என்ற லேண்டரை நாசா நிலவுக்கு அனுப்பியிருந்தது. இது இப்போது வெற்றிகரமாகச் சந்திரனின் மேற்பரப்பைத் தொட்டுள்ளது. இருப்பினும், அது இப்போது ஓர்க் ஆகும் நிலையில் உள்ளதா.. இல்லை கடைசி நேரத்தில் எதாவது சிக்கல் ஏற்பட்டதா என்பதில் தெளிவில்லாத சூழல் நிலவுகிறது.
அந்த லேண்டர் தரையிறங்கிய சில நிமிடங்களுக்குப் பிறகு அதன் என்ஜின் முழுமையாக அணைக்கப்பட்டது. மேலும், மற்ற கட்டளைகளுக்கும் ரெஸ்பாண்ட் செய்தது. இருப்பினும், அந்த லேண்டரின் தற்போதைய நிலை என்ன என்பதில் தெளிவில்லாத சூழல் நிலவுகிறது.
தரையிறங்கும் திட்டம்
தனியார் நிறுவனங்களை விண்வெளிக்கு அனுப்பும் நாசாவின் CLPS திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த ஏதீனா லேண்டர் சந்திரனுக்கு அனுப்பப்பட்டது. இது நிலவில் பெரியளவில் ஆய்வுகள் நடத்தப்படாத தென் துருவத்திற்கு அருகில் தரையிறங்கும் வகையில் திட்டமிடப்பட்டு இருந்தது. இது சந்திரனின் தென் துருவத்திலிருந்து சுமார் 160 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இதுவரை நிலவில் தரையிறங்கிய எந்தவொரு சாட்டிலைட்டும் தென் துருவத்திற்கு இவ்வளவு அருகே தரையிறங்கியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடைசி நிமிடத்தில் குழப்பம்
தரையிறங்கும் போது எல்லாம் திட்டமிட்டபடியே நடந்துள்ளது. இதை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்ட நிலையில், சந்திர மேற்பரப்பில் லேண்டர் இறங்குவது உறுதி செய்யப்பட்டது. ஆனால், அதன் பிறகு என்ன ஆனது என்பதிலேயே தெளிவற்ற சூழல் இருக்கிறது. இன்டியூட்டிவ் மெஷின் நிறுவனத்தின் முந்தைய லேண்டரான IM-1க்கு நேர்ந்த அதே சிக்கல் ஏற்பட்டு இருக்குமோ என அஞ்சப்படுகிறது.
அதாவது IM-1 தரையிறங்கும் போது லேண்டரின் கால்களில் ஒன்று உடைந்து, அது 30 டிகிரி கோணத்தில் சாய்ந்துவிட்டது. அதன் பிறகு IM-1 லேண்டரால் செயல்படவே முடியாமல் போய்விட்டது. சந்திரனில் தங்கி ஆய்வு செய்ய ஆர்ட்டெமிஸ் என்ற திட்டத்தை நாசா முன்னெடுத்துள்ள நிலையில், அதற்கு ஏதீனாவின் பணி மிகவும் முக்கியமானதாக இருக்கிறது.
எதிர்காலத்திற்கே சிக்கல்
ஏனென்றால் இந்த ஏதீனாவில் ஆழமான தோண்டும் இயந்திரம் மற்றும் ஸ்பெக்ட்ரோமீட்டர் உள்ளிட்ட மேம்பட்ட ஆய்வு கருவிகள் உள்ளன. எதிர்கால சந்திரனில் தங்கி ஆய்வு செய்ய அங்கு நீர் இருக்கிறதா என்பதைக் கண்டறியும் முயற்சியில் இது ஈடுபட இருந்தது. ஏதீனா வெற்றிகரமாகத் தரையிறங்கி இருந்தால் அது நிலவு குறித்த ஆய்வில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக இருந்திருக்கும்.
வரும் மார்ச் 14 ஆம் தேதி சந்திர கிரகணம் நிகழும் சூழலில் அதை நிலவில் இருந்தபடியே எடுக்கவும் ஏதீனா திட்டமிட்டிருந்தது. மேலும், அந்த லேண்டரில் 4G/LTE செல்லுலார் நெட்வொர்க் தொழில்நுட்பமும் இருக்கிறது. இதன் மூலம் அதிநவீன அனைத்து தொழில்நுட்பங்களும் சாத்தியப்படுவதாகவே இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் ஏற்பட்ட சிக்கலால் அதன் எதிர்காலமே எப்படி இருக்கும் என்பது தெரியாமல் உள்ளது.












Click it and Unblock the Notifications