அப்படியே பார்க்க ஏலியன் மாதிரி.. 200 கால்களுடன் கூடிய வினோத உயிரினம் தான்சானியாவில் கண்டுபிடிப்பு!
வாஷிங்டன்:ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் சிலர் அப்படியே பார்க்க ஏலியன் போலவே இருக்கும் ஒரு வகை உயிரினத்தைக் கண்டுபிடித்துள்ளனர். இந்தத் தகவல்கள் இணையத்தில் பெரும் புயலைக் கிளப்பி இருக்கிறது.
இந்த உலகம் பல்வேறு மர்மங்களைக் கொண்டதாகவே இருக்கிறது. நாம் ஒரு மர்மத்திற்கான விடையைக் கண்டுபிடித்தால் அடுத்த ஒரு மர்மம் தானாக உருவாகும். ஆனால் அதற்கான விடையைத் தேடும் பயணத்தை மனிதக் குலம் தொடர்ந்து மேற்கொள்ளும்.

மனிதர்கள் இந்தளவுக்குப் பூமியை ஆதிக்கம் செலுத்த இந்த தேடுதல் குணமே காரணமாகும். அப்படி தான் இப்போது ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஏலியன் போலவே இருக்கும் ஒரு வகை உயிரினத்தைக் கண்டுபிடித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புது உயிரினம்: இதற்கிடையே தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள தான்சானியா நாட்டில் உள்ள தொலைதூரக் காடுகளில் ஒரு புதிய வகை உயிரினத்தைக் கண்டுபிடித்துள்ளனர். அதன் கீழ் ஐந்து புதிய வகை மில்லிபீட்களை (முதுகெலும்பு இல்லாத ஒரு வகை ஊர்வன ஜந்து) ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது தொடர்பாக ஆய்வு இதழ் ஒன்றிலும் ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டுள்ளனர்.
தான்சானியா மலைக் காடுகளில் காடுகளைப் பாதுகாப்பது மற்றும் காலநிலை மாற்றம் குறித்து ஆஸ்திரேலியாவில் உள்ள சன்ஷைன் கோஸ்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்துள்ளனர். தான்சானியாவில் உள்ள உட்சுங்வா மலைகளில் உள்ள மரங்கள் மற்றும் செடிகளில் ஆய்வு நடத்திய போது தான் மில்லிபீட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அந்த ஆய்வு இதழில் கூறப்பட்டுள்ளது.
ஏலியன்: இது தொடர்பாகப் பேராசிரியர் ஆண்டி மார்ஷல் கூறுகையில், "எனது டீம் தான் இந்த மில்லிபீட்களைக் கண்டுபிடித்தது. இது பார்க்க அப்படியே ஏலியன் படங்களில் வரும் உயிரினம் போலவே இருந்தது. பிரபல ஹாலிவுட் படங்களில் வருவதைப் போலவே அதன் தலை இருந்தது. இது பார்க்க அப்படியே ஏலியன் போலவே இருந்தது என்று நாம் தாராளமாகச் சொல்லலாம்.
இந்த புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட மில்லிபீட்கள் சில சென்டிமீட்டர் நீளத்திற்கு மட்டுமே இருக்கிறது. இந்த ஒவ்வொரு மில்லிபீட்களுக்கும் 200 கால்கள் உள்ளன. இந்த மில்லிபீட் மாதிரிகள் டென்மார்க்கில் உள்ள கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பினோம். இந்த மில்லிபீட்கள் அனைத்து சைஸ்களிலும் இருந்தன. இவை காடுகள் மிகவும் ஆரோக்கியமாக இருப்பதையே காட்டுகிறது.
புது வகை என்று தெரியாது: இவை உலகில் கண்டறியப்பட்ட புதிய வகை மில்லிபீட்கள் என்பது எங்களுக்குத் தெரியாது. ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட மில்லிபீட்கள் என்றே நினைத்தோம். மைரியாபோடாலஜிஸ்டுகள் நாங்கள் அனுப்பிய மில்லிபீட்கள் சோதனை செய்த போதுதான் இவை புது வகையான மில்லிபீட்கள் என்பது தெரிய வந்தது" என்று அவர் தெரிவித்தார்.
மில்லிபீட்கள் எனப்படும் இந்த ஊர்வன உயிரினங்களில் மிகப் பெரியது ஆப்பிரிக்காவில் தான் கண்டறியப்படுகிறது. அது அதிகபட்சமாக 35 சென்டிமீட்டர் வரை வளரும். அதேநேரம் அமெரிக்காவில் கண்டறியப்படும் மில்லிபீட்கள் அதிகபட்சம் 15 செமீ தான் வளரக்கூடியது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள தான்சானியா நாட்டில் தான் ஆய்வாளர்கள் இதைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த நாட்டின் மக்கள் தொகை வெறும் 6.34 கோடி தான். பல இயற்கை வளங்கள் கொட்டி கிடந்தாலும் கூட ஊழல் உள்ளிட்ட பல காரணங்களால் இன்னும் தான்சானியா பின்தங்கிய நாடுகளில் ஒன்றாகவே இருக்கிறது.












Click it and Unblock the Notifications