இன்ஸ்டாகிராமில் விரைவில் வரப்போகும் புதிய வசதி.. கொதிக்கும் நெட்டிசன்கள்! என்னாச்சு?
வாஷிங்டன்: சமூக ஊடகங்களில் தனி ஆதிக்கம் செலுத்தி வரும் இன்ஸ்டாகிராம் விரைவில் புதிய அம்சம் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது. ஒருவரின் பதிவுக்கு கீழ் வரும் கமெண்டில் டிஸ்லைக் ஆப்ஷனை சோதனை முறையில் கொண்டு வந்துள்ளது. இந்த வசதி பலருக்கும் தற்போது காட்டுகிறது. இன்ஸ்டாவின் இந்த புதிய அப்டேட்டிற்கு நெட்டிசன்கள் மத்தியில் விமர்சனமும் எழுந்துள்ளது.
தகவல் தொழில் நுட்பம் பெருகிவிட்ட இந்த காலத்தில் இணைய உலகில் சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் பெருமளவு அதிகரித்துள்ளது. வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்தாதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் என்று சொல்லும் அளவுக்கு ஸ்மார்ட் போன்கள் வைத்து இருக்கும் அனைவரும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துகிறார்கள்.

அதிலும் தற்போது இன்ஸ்டாகிராம் அசுர வளர்ச்சி பெற்று வருகிறது. இன்ஸ்டாகிராமில் சில வினாடிகள் மட்டுமே ஓடக்கூடிய ரீல்ஸ் வீடியோக்களை பயனர்கள் விரும்பி பார்ப்பதால் தற்போது சர்வதேச அளவில் இன்ஸ்டாகிராம் பயனர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உலகம் முழுவதும் 2 பில்லியனுக்கும் அதிகமானோர் இன்ஸ்டாகிராம் பயன்படுத்துகிறார்கள். பயனர்களை கவரும் விதமாக பல்வேறு புதுப்புது அப்டேட்களை இன்ஸ்டாகிராம் வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் விரைவில் இன்ஸ்டாகிராமில் கமெண்ட்டுகளுக்கு டிஸ்லைக் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளதாம். தற்போது கமெண்ட்டுகளுக்கு லைக் செய்யும் வகையில் ஹார்ட் குறியீடு மட்டுமே இருக்கும். பயனர்களுக்கு ஒரு கமெண்ட் பிடிக்கவில்லை என்றால் அதை டிஸ்லைக் செய்யும் ஆப்ஷன் இல்லாமல் இருக்கிறது. இந்த நிலையில்தான் வரைவில் டிஸ்லைக் ஆப்ஷன் கொண்டு வரப்படுகிறதாம்.
பல பயனர்களுக்கும் தற்போது இந்த ஆப்ஷன் காட்டுகிறது. டிஸ்லைக் செய்யும் விதமாக கீழ்நோக்கிய அம்புக்குறி கொடுக்கப்பட்டுள்ளது. ஹார்ட் சிம்பளுக்கு அடுத்தாற்போல் இந்த ஆப்ஷன் இடம் பெற்றுள்ளது. இன்ஸ்டாகிரமின் தாய் நிறுவனமான மெட்டா இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கவில்லை. அதேவேளையில் பல பயனர்களுக்கு இந்த ஆப்ஷன் காட்டுவதாக நெட்டிசன்கள் இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.
அதே நேரத்தில் இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்துள்ள இந்த புதிய வசதி வெறுப்புணர்வை தூண்டும் விதமாக இருப்பதாக நெட்டிசன்கள் பலரும் விமர்சித்துள்ளனர். இது தொடர்பாக நெட்டிசன் ஒருவர் கூறுகையில், "எதிர்மறை எண்ணத்தை பரப்புவதற்கான மற்றொரு வழி இது. பயனர்கள் ஒருவொருக்கொருவர் வாதம் செய்யும் விதமாகவும் வெறுப்பை ஏற்படுத்தும் விதமாகவும் இந்த ஆப்ஷன் இருக்கும்" என பதிவிட்டுள்ளார்.
மற்றொரு நெட்டிசன் கூறுகையில், 'இந்த ஆப்ஷன் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இது பயனர்களை வருத்தத்திற்குள்ளும் பாதுகாப்பற்றவர்களாகவும் உணர வைக்கும். பிடிக்கவில்லை என்பதை வெளிப்படுத்துவதற்கு ஆப்ஷன் இருக்கக் கூடாது" என்று கூறியுள்ளார். மற்றொரு நெட்டிசன் கூறுகையில், "சைபர்கேலியை இது அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும். ஒருவரின் மனநிலையை மேலும் பாதிக்கும் வகையில் இருக்கும்" என பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications