அப்படியே பூமி மாதிரியே புது கிரகம் கண்டுபிடிப்பு! சூரியன் அழியும்போது மனித குலத்திற்கு கை கொடுக்கும்
வாஷிங்டன்: சுமார் 4000 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் ஒரு கிரகத்தை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சூரியன் எப்படியும் ஒரு காலத்தில் அழிந்து தான் போகும்.. அந்த நேரத்தில் மனிதர்கள் சூரியக் குடும்பத்தைத் தாண்டி வெளியே செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த கண்டுபிடிப்பு முக்கியமானதாக இருக்கும்.
இந்த விண்வெளியில் நம்மால் எண்ணி முடிக்கவே முடியாத அளவுக்கு ஏகப்பட்ட நட்சத்திரங்கள் உள்ளன. அவை தொடர்பாக ஆய்வாளர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்கள். இதற்கிடையே விண்வெளியில் ஆய்வாளர்கள் இப்போது மிக முக்கிய கண்டுபிடிப்பை மேற்கொண்டுள்ளனர்.

4000 ஒளி ஆண்டுகள்: அதாவது சூரியக் குடும்பத்திலிருந்து சுமார் 4,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் ஒரு கிரகத்தை ஆய்வாளர்கள் கண்டித்துள்ளனர். ஒளி ஆண்டுகளாக அப்படி என்றால் என்ன என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம்.. ஒளியின் வேகத்தில் ஓராண்டு பயணித்தால் எவ்வளவு தூரத்தை அடைய முடியுமோ.. அதுதான் ஒளி ஆண்டு என்று அழைக்கப்படுகிறது. அதன்படி ஒளியின் வேகத்தில் சுமார் 4000 ஆண்டுகள் பயணித்தால் இந்த கிரகத்திற்குச் சென்றடைய முடியும்.
இந்த கிரகம் நமது பூமியைப் போலவே இருப்பதாகவும் பூமியைப் போலவே அதுவும் ஒரு நட்சத்திரத்தைச் சுற்றி வருவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கிரகம் பாறைகள் நிரம்பியதாக இருக்கலாம் என்றும் இது கிட்டதட்ட பூமியின் எடை கொண்டதாகவே இருப்பதாகவும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அந்த கிரகம் white dwarf நட்சத்திரமான சாகிட்டாரிஸை சுற்றி வருவதாக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.
ஏன் முக்கியம்: இந்த கண்டுபிடிப்பு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. பூமிக்கு வரும் காலத்தில் என்ன நடக்கும் என அறிந்து கொள்ள இது உதவும். ஏனென்றால் சூரியன் அதன் இறுதிக் கட்டத்தை எட்டும் போது, அதைச் சுற்றி வரும் பூமி உள்ளிட்ட அனைத்து கிரகங்களும் அழியும் ஆபத்து இருக்கிறது. அந்த காலகட்டத்தில் மனிதர்கள் சூரியக் குடும்பத்தை விட்டே ஒரு கிரகத்திற்குச் செல்லலாம்.
சரி white dwarf என்றால் என்ன.. ஒரு நட்சத்திரத்தில் உள்ள எரிபொருள் முழுமையாகத் தீர்ந்து அதன் வெளிப்புற அடுக்கு உதிர்த்த பிறகு இருக்கும் எச்சத்தை தான் white dwarf என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். அப்படி இருக்கும் ஒரு நட்சத்திரத்தைத் தான் இப்போது கண்டுபிடிக்கப்பட்ட கிரகம் சுற்றி வருகிறது. சூரியனின் எரிபொருளும் மொத்தமாக காலியாகி இதுபோலத் தான் மாறும் என்றே ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.
என்ன நடக்கலாம்: சூரியனில் உள்ள எரிபொருள் தீரும் சமயம் அது மிகப் பெரிய சிவப்பு ராட்சத நட்சத்திரமாக வளரும்.. அருகே இருக்கும் கிரகங்களை எல்லாம் தனக்குள் ஈர்த்துவிட்டு, கடைசியில் மாண்டு போகும். அதேநேரம் இந்த நிகழ்வில் பூமி தப்பிக்கவும் வாய்ப்பு இருப்பதாக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். அதாவது சூரியனின் எரிபொருள் தீரும் போது, அதன் நிறை குறைந்து புவி ஈர்ப்பு விசை குறையும். எனவே, பூமி சூரியனில் இருந்து தள்ளி நகரத் தொடங்கும். இதனால் பூமியைச் சூரியன் இழுக்காமல் விட வாய்ப்பு உள்ளது.
அதுபோன்ற சூழல் ஏற்படும் போது பூமி எப்படி இருக்கும் என்பதைக் கண்டறியவே புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட இந்த கிரகம் உதவும் என ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். வரும் நாட்களில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட கிரகம் குறித்து ஆய்வுகள் அதிகரிக்கும் என்றும் இது பூமியின் இறுதிக் காலம் எப்படி இருக்கப் போகிறது என்பதைத் தெரிந்து கொள்ள உதவும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அதற்கேற்ப மனித குலம் திட்டமிட்டு கொள்ள இது கை கொடுக்கும்.
கவலை தேவையில்லை: அதேநேரம் ஆய்வாளர்கள் வேறு சில பாயிண்டுகளையும் முன்வைக்கிறார்கள். வானிலை ஆய்வாளர் கெமிங் ஜாங் கூறுகையில், "சூரியனில் எரிபொருள் தீரும் போது என்ன நடக்கும் என்பது குறித்து ஆய்வாளர்களிடையே இப்போது ஒருமித்த கருத்து இல்லை. ஆனால், அது பற்றி பெரிதாகக் கவலைப்படத் தேவையில்லை.
ஏனென்றால் அது 600 கோடி ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கப் போகும் விஷயம்.. பூமியில் 100 கோடி ஆண்டுகளுக்குப் பிறகு மனிதர்கள் உயிர் வாழவே முடியாது. அப்போது க்ரீன் ஹவுஸ் வாயுக்களால் தண்ணீர் அனைத்துமே ஆவியாகிவிடும். இதனால் அப்போதே மனிதர்களால் பூமியில் வாழ முடியாது" என்கிறார்












Click it and Unblock the Notifications