கனடாவின் விசாரணைக்கு இந்தியா ஒத்துழைக்கவில்லை.. அமெரிக்கா பரபர கருத்து!
வாஷிங்டன்: நிஜ்ஜார் விவகாரத்தில் இந்தியா கனடா உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், அமெரிக்கா இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளது. அதில், "நிஜ்ஜார் விவகாரத்தில் கனடாவின் விசாரணைக்கு இந்தியா முறையாக ஒத்துழைக்கும் என்றும் நம்பியதாகவும், ஆனால் இந்த விவகாரத்தில் இந்தியா ஒத்துழைக்காமல் வேறு வழியை தேடுகிறது" என்று அமெரிக்காவின் செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் சர்ரே நகரில் காலிஸ்தான் பயங்கரவாதியான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார். ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டோ குற்றம் சாட்டினார்.

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் இந்தியாவில் சீக்கியர்களுக்கு தனி நாடு கோரி போராடும் காலிஸ்தான் அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவர் ஆவார். இந்தியாவில் பல நாச வேலைகளில் இவருக்கு தொடர்புடையதாக கூறப்படுவதால், இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாக நிஜ்ஜார் அறிவிக்கப்பட்டிருந்தார். இதற்கிடையே தான் கனடாவில் குடியுரிமை பெற்று அங்கு வசித்து வந்த நிஜ்ஜார் கடந்த ஆண்டு ஜூன் மாதம் மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார்.
இது தொடர்பாக ஜஸ்டின் ட்ரூட்டோ கூறுகையில், "நிஜ்ஜார் கொலையில் இந்திய உளவாளிகளுக்கு தொடர்பு இருக்க வாய்ப்பு உள்ளது என்று நம்பகமான குற்றச்சாட்டுகள் வருகின்றன. எனவே இது தொடர்பாக கனடா பாதுகாப்பு முகமைகள் விசாரித்து வருகிறார்கள்" என்று கூறினார். இந்த குற்றச்சாட்டை மத்திய வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்தது. இதனால் இருநாட்டு உறவில் லேசான விரிசல் ஏற்பட்டது.
இதற்கிடையே தான் கடந்த திங்கட்கிழமை மேலும் ஒரு குற்றச்சாட்டை கனடா சுமத்தியது. அதாவது, கனடாவுக்கான இந்திய தூதர் சஞ்சய் வர்மா மற்றும் மேலும் சில தூதரக அதிகாரிகளிடம் நிஜ்ஜார் கொலை தொடர்பாக சில முக்கிய தகவல்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது என்று கனடா அரசு குற்றச்சாட்டை சுமத்தியது. ஆதாரமில்லா இந்த குற்றச்சாட்டுகளால் மத்திய அரசு கடும் அதிருப்தியடைந்தது.
இதையடுத்து தான் இந்தியாவில் உள்ள கனடா தூதர், அந்நாட்டிற்கான் 5 தூதர்களை வெளியேற உத்தரவிட்டது. மேலும் அந்நாட்டில் உள்ள இந்திய தூதர் சஞ்சய் வர்மா உள்ளிட்ட மேலும் 5 தூதர்களை இந்தியா திரும்புமாறு அழைத்தது. இது இந்தியா மற்றும் கனடா உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தியது. இருநாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டதால், கனடாவில் உள்ள இந்தியர்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது.
தொடர்ந்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருட்டோ கூறுகையில், "இந்தியா மிகப்பெரிய தவறை செய்திருக்கிறது. இதனை ஏற்க முடியாது. கனடா மக்கள் வன்முறையால் பாதிக்கக் கூடாது, அதே சமயத்தில் இந்தியாவுடனான உறவிலும் விரிசல் ஏற்படக் கூடாது என்பதே எங்களது விருப்பம். இந்தியாவுடனான பேச்சுவார்த்தைக்கு தயார். பேச்சுவார்த்தையின் மூலமே இந்த பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும்" என்று கூறினார்.
ஆனால் நிஜ்ஜார் கொலை தொடர்பாக நம்பகமான ஆதாரங்களை இந்தியாவிடம் வழங்கியிருப்பதாக கனடா கூறுவது உண்மையல்ல என்று மத்திய அமைச்சகம் மறுத்துள்ளது. இதனால் இந்தியா - கனடா உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் இது தொடர்பாக அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறியதாவது:-
சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதி நிஜ்ஜார் விசாரணையில், இந்தியா கனடாவுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இந்தியா மீது கனடா வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் மிகவும் தீவிரமானதாகும். எனவே இதனை எளிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்று நாங்கள் ஏற்கனவே கூறியிருந்தோம். கனடாவின் விசாரணைக்கு இந்தியா ஒத்துழைக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் இந்தியா ஒத்துழைப்பு அளிக்கவில்லை. அதற்கு பதிலாக அவர்கள் வேறு வழியினை தேர்ந்தெடுக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications