கண்ணா நீ தூங்குடா.. ஆட்டம் காணும் அமெரிக்க பங்கு சந்தை! விழி பிதுங்கிய டிரம்ப்
நியூயார்க்: அமெரிக்காவின் கெத்தான நிறுவனமாக இருந்த NVIDIA-வின் பங்குகள் தற்போது மளமளவென சரிய தொடங்கியுள்ளது. இன்றைய தேதியில் காஃபி விற்பனை நிறுவனமான ஸ்டார்பக்ஸின் பங்குகளை விட இதன் பங்கு சரிந்திருக்கிறது. எனவே அந்நாட்டு பங்கு சந்தை ஆட்டம் காண தொடங்கியுள்ளது.
இப்படியே முக்கியமான நிறுவனங்களின் பங்குகள் சரிந்தால் அது அமெரிக்காவின் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

அமெரிக்கா தொழில்நுட்ப துறையில் கெட்டிக்காரன். இதற்கு அடி போட்டது NVIDIA நிறுவனத்தின் சிப்தான். Nvidia A100, H100, மற்றும் V100 GPU ஆகியவை மிகவும் சக்திவாய்ந்த சிப்களாகும். கூகுள், பேஸ்புக் போன்ற பெரிய நிறுவனங்கள் இந்த சிப்களைதான் பயன்படுத்தி வருகிறது. அவ்வளவு ஏன், Chat GPT போன்ற ஏஐ தொழில்நுட்பத்திலும் கூட இதுதான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆக, இந்த சிப்கள் இல்லையெனில் தொழில்நுட்ப துறையில் அமெரிக்கா டம்மியாகிவிடும்.
சரி இவ்வளவு பயங்கரனமான ஆளாக இருக்கும் NVIDIA நிறுவத்தின் பங்குகள் ஏன் சரிவடைந்துள்ளன? என்று கேள்வியை பலரும் எழுப்பியுள்ளனர். இதற்கு டிரம்ப்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. அவர் அதிபராக வந்தவுடன் பக்கத்து அக்கத்து நாடுகளிடம் வம்பிழுத்து வைத்திருக்கிறார். கனடாவுக்கு, மெக்சிகோவுக்கு, சீனாவுக்கு என எந்த பக்கம் பார்த்தாலும் வரியாக போட்டு தள்ளியிருக்கிறார். இவர் போட்ட வரி காரணமாக பதிலுக்கு இந்த நாடுகளும் அமெரிக்கா மேலே வரியை போட்டிருக்கிறது. இதனால் முதலீட்டாளர்கள் அச்சமடைந்திருக்கிறார்கள்.
சரக்கு (ஆல்கஹால்), பெட்ரோல், AI இவைகள்தான் முதலீட்டாளர்களின் விருப்பமான துறை. அதாவது இந்த மூன்று துறையில்தான் அதிக முதலீடுகள் வரும். உலகம் முழுவதும் சரக்கு விற்பனையாகிறது. எனவே கல்லா கட்டிவிடலாம். பெட்ரோலும் அப்படித்தான். இதற்கிடையில் AI புதியதாக நுழைந்தது. இனி உலகமே AI சொல்வதைதான் கேட்கப்போகிறது என்று பேசி, பேசி AI பற்றி பரபரப்பை சிலர் கிளப்பிவிட்டனர். எனவே இந்த துறையில் ஏராளமானோர் முதலீடுகளை செய்திருந்தனர்.
AI வேண்டுமெனில், NVIDIA நிறுவனத்தின் சிப் தேவை. அதை வைத்துதான் AI தொழில்நுட்பத்தை உருவாக்க முடியும். ஆனால், டிரம்ப் போட்ட வரி காரணமாக இந்த சிப்களை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் NIVIDIA நிறுவனத்திற்கு சிக்கல் ஏற்பட்டுவிட்டது. மட்டுமல்லாது வெடித்து கிளம்பிய AI கருத்துக்கள் நீர் குமிழி போல கொஞ்சம் கொஞ்சமாக வெடிக்க தொடங்கின. AI என்றால் அவ்வளவுதானா? என்கிற நிலைக்கு தொழில்நுட்ப நிறுவனங்கள் வந்துவிட்டன. எனவே இதன் மீதான முதலீடு குறைந்துவிட்டது.
ஏற்கனவே போனி ஆகாமல் சிப்கள் ஒரு பக்கம் குவிந்து கிடக்கையில், மறுபுறம் AI துறையில் முதலீடு குறைந்தது NVIDIA நிறுவனத்தை பலமாக பதம் பார்த்துவிட்டது.
தற்போது அமெரிக்க ஸ்டாக் மார்க்கெட்டில் 23.3 மடங்கு விலையில் NVIDIA நிறுவனத்தின் பங்குகள் விற்பனையாகி வருகின்றன. கொடுமை என்னவெனில் Accenture, Broadcom, Intel, Texas Instruments, Netflix, Palo Alto Networks, CrowdStrike Holdings போன்ற நிறுவனங்களில் பங்குகளை விட NVIDIA பங்குகளின் மதிப்பு மிக குறைவு.
"ஒரு டைம்ல இன்னா மாதிரி ஆளு தெரியுமா அவரு?" என்று மெட்ராஸ் படத்தில் வரும் ஜானியை போல தற்போது NVIDIA நிலைமை மாறியிருக்கிறது. கடந்த ஜனவரி மாதம் 4ம் தேதி இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு 3.54 ட்ரில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இது தற்போது 2.82 ட்ரில்லியன் டாலராக சரிந்திருக்கிறது. இப்படியே போனால் அமெரிக்க பொருளாதாரத்தில் பெரிய பள்ளம் விழும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications