ஹாலிவுட் படத்தை கண்முன் ஓட்டிய டிரம்ப்.. ஈரானில் எடுக்கப்பட்ட மீட்பு நடவடிக்கை குறித்து விளக்கம்
வாஷிங்டன்: ஈரான் எல்லையில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க விமானியை, எப்படி காப்பாற்றினோம் என்பது குறித்து டிரம்ப் மற்றும் பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் பகிர்ந்திருக்கும் தகவல்கள், ஹாலிவுட் படத்தையே மிஞ்சும் தொணியில் இருக்கிறது.
புனித வெள்ளியன்று, ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க விமானி, ஒரு குகையில் சனிக்கிழமை முழுவதும் பதுங்கியிருந்தார். ஈஸ்டர் ஞாயிறு அதிகாலையில் அவர் பத்திரமாக மீட்கப்பட்டார். இதை ஈஸ்டர் மறுபிறப்பு என பாதுகாப்புச் செயலர் வர்ணித்துள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது, "படுகாயமடைந்த அந்த விமானி, ரத்தம் சொட்டச் சொட்ட செங்குத்தான மலைப்பாறைகளில் ஏறி, எதிரிகளிடம் சிக்காமல் தனது இருப்பிடத்தை அமெரிக்கப் படைகளுக்குத் தெரிவித்துள்ளார். இந்த மீட்புப் பணியில் 155 விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டன. தங்களின் ரகசியத் தொழில்நுட்பம் எதிரிகளிடம் சிக்கக் கூடாது என்பதற்காக, மீட்க முடியாத நிலையில் இருந்த இரண்டு அமெரிக்க விமானங்களை அமெரிக்கப் படைகளே வெடிவைத்துத் தகர்த்தன" என்று கூறியிருக்கிறார்.
டிரம்ப் இது குறித்து கூறுகையில், "செவ்வாய்க்கிழமை இரவுதான் ஈரானுக்கான இறுதி அவகாசம். ஒரே இரவில் ஈரானை அழித்துவிட முடியும். எனவே விஷயத்தை நினைவில் வைத்து ஈரான் செயல்பட வேண்டும்.
ஈரான் ஆட்சியாளர்கள் விலங்குகள். அவர்கள் மனிதர்கள் கிடையாது. கடந்த ஒரு மாதத்தில் அவர்கள் 45,000 மக்களைக் கொன்றுள்ளனர். ஈரான் மக்கள் தங்களது ஆட்சிக்கு எதிராகக் கிளர்ந்தெழ வேண்டும். ஈரான் தற்போது அழிக்கப்பட்டு வருவதால் போர்நிறுத்தம் கேட்கிறது. ஆனால், நான் இன்னும் எதற்கும் சம்மதிக்கவில்லை" என டிரம்ப் கூறியிருக்கிறார்.
கடந்த 37 நாட்களில் அமெரிக்கா 10,000 போர் விமானப் பயணங்களை மேற்கொண்டு, ஈரானின் 13,000 இலக்குகளைத் தாக்கியுள்ளது. இதுவரை இல்லாத அளவிலான மிகப்பெரிய வான்வழித் தாக்குதல்கள் இனிவரும் நாட்களில் இருக்கும் என பாதுகாப்புச் செயலர் ஹெக்செத் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications