டிரம்பை சந்திக்க வெள்ளை மாளிகைக்கு ஓடிய பாக். தலைவர்கள்! உடனே வந்த புதிய வரி அறிவிப்பு.. எங்கோ இடிக்குதே
வாஷிங்டன்: இந்தியா அமெரிக்கா உறவில் கடந்த சில காலமாகவே பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அதேநேரம் மறுபுறம் அமெரிக்கா பாகிஸ்தான் மெல்ல நெருக்கமாகி வருகிறது. இதற்கிடையே வெள்ளை மாளிகைக்குச் சென்ற பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அங்கு வைத்து அதிபர் டிரம்ப்பை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்தச் சந்திப்பு நடந்த சில மணி நேரத்தில் புதிய வரி குறித்த அறிவிப்பும் வெளியாகி இருப்பது சந்தேகத்தைக் கிளப்புவதாக இருக்கிறது.
கடந்த சில காலமாகவே உலக அரசியல் மெல்ல மாறி வருகிறது. இத்தனை காலமாக இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நல்லுறவு இருந்த சூழலில், சில மாதங்களாக இரு நாட்டு உறவில் மோதல் போக்கு நிலவுகிறது. மறுபுறம் அமெரிக்காவும் பாகிஸ்தானும் நெருக்கம் காட்டி வருகிறது. இரு தரப்பு தலைவர்களும் தொடர்ச்சியாகச் சந்தித்துப் பேசி வருகிறார்கள்.

ஷெபாஸ் ஷெரீப்
இதற்கிடையே மீண்டும் அமெரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஓவல் அலுவலகத்தில் வைத்து டிரம்ப்பை சந்தித்து பேசியுள்ளார். இந்தச் சந்திப்பின் போது அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவும் உடனிருந்தார். பாகிஸ்தான் ராணுவத் தலைமை தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் இந்தச் சந்திப்பின்போது ஷெரீப்புடன் வந்திருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே ஷெரீப்பை தான் அழைத்து டிரம்ப் விருந்து கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சந்திப்பிற்கு முன்பு, பாகிஸ்தான் தலைவர்களை "சிறந்த தலைவர்கள்" என்று குறிப்பிட்ட டிரம்ப், இந்தச் சந்திப்பு அமெரிக்கா- பாகிஸ்தான் உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிப்பதாகவும் கூறினார்.
சிறந்த தலைவர்களாம்
இது தொடர்பாக டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசும்போது, "பாகிஸ்தான் பிரதமர் மற்றும் ஃபீல்ட் மார்ஷல் இருவரும் சிறந்த தலைவர்கள். அவர்களை இப்போது என்னைச் சந்திக்க வந்துள்ளனர்" என்றார். முன்னதாக அமெரிக்காவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகி இருந்தது. அதைத் தொடர்ந்தே இந்தச் சந்திப்பு நடந்த நிலையில், பாகிஸ்தான் தலைவர்களை டிரம்ப் பாராட்டி தள்ளி இருந்தார்.
மேலும், நியூயார்க்கில் செவ்வாய்க்கிழமை நடந்த ஐ.நா. பொதுச் சபையில் டிரம்ப் மற்றும் ஷெரீப் இருவரும் சந்தித்துப் பேசியிருந்தனர். அப்போது, அரபு நாடுகள் மற்றும் எகிப்து, இந்தோனேசியா, பாகிஸ்தான், கத்தார், சவுதி அரேபியா மற்றும் துருக்கி உட்படப் பல நாடுகளின் தலைவர்களுடன் ஒரு பல தரப்பு கூட்டத்தை டிரம்ப் நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஒரு மணி நேரம் காக்க வைத்த டிரம்ப்
உள்ளூர் நேரப்படி மாலை 4:52 மணியளவில் ஷெரீப் வெள்ளை மாளிகைக்குச் சென்றுள்ளார். அங்கு அவரை மூத்த நிர்வாக அதிகாரிகள் வரவேற்றனர். அப்போது டிரம்ப் மூத்த நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டுக் கொண்டிருந்தார், மேலும் ஷெரீப் மற்றும் முனீர் வெள்ளை மாளிகைக்கு வந்தபோது டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். இதனால் பாகிஸ்தான் தலைவர்கள் சுமார் ஒரு மணி நேரம் வரை காத்திருக்க வேண்டி இருந்துள்ளது. பிறகு இருதரப்பு சந்திப்பு முடிந்ததும் பாகிஸ்தான் பிரதமர் மாலை 6:18 மணியளவில் வெள்ளை மாளிகையில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.
எங்கோ இடிக்குதே
இந்தச் சந்திப்பு முடிந்து சில மணி நேரத்தில் டிரம்ப் புதிய வரி அறிவிப்பை வெளியிட்டார். வரும் அக்டோபர் 1 முதல் முதல் மருந்துப் பொருட்களின் இறக்குமதிக்கு 100 சதவீதம் வரி, சமையலறை, கழிவறை உபகரணங்களுக்கு 50%, பர்னிச்சருக்கு 30 சதவீத வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்தார். இதில் மருத்துவப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரி நேரடியாகவே பல இந்திய நிறுவனங்களைப் பாதிக்கும். ஏனென்றால் ஜெனரிக் மருந்துகள் பிரிவில் இந்திய நிறுவனங்களே அமெரிக்காவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
பாகிஸ்தான் தலைவர்கள் சந்தித்துச் சென்ற பிறகு இந்த வரி அறிவிப்பு வந்துள்ளது இணையத்தில் பல விதச் சந்தேகங்களையும் விவாதத்தையும் எழுப்புவதாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications