ஜெகஜால திருடன் தான்.. அமெரிக்காவில் ஹெலிகாப்டரையே ஆட்டைய போட்ட நபர்.. கடைசியில் நடந்த சோகம்!
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஹெலிகாப்டர் ஒன்றை திருடிச்செல்ல முயன்ற போது விபத்தில் சிக்கியுள்ளது.
வாஷிங்டன்: அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஹெலிகாப்டர் ஒன்றை திருடிச்செல்ல முயன்ற போது விபத்தில் சிக்கியுள்ளது. சக்ரமெண்டோ எக்ஸிகியூட்டிவ் விமான நிலையத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. ஹெலிகாப்டரை திருட முயன்று விபத்தில் சிக்க வைத்த நபரை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
கார்களையும் பைக்குகளையும் திருடிச்செல்வதை கேட்டு இருக்கிறோம்.. ஏன் சில நேரங்களில் பேருந்துகளைக் கூட திருடிய செய்திகளை நாம் கேள்வி பட்டு இருக்கலாம்..
இந்தியாவில் எல்லாம் இதுபோன்ற செய்திகளில் வியப்பதற்கு எதுவும் இல்லை... ஆனால் வெளிநாடுகளில் சில சமயங்களில் வினோதமான பல திருட்டு சம்பவங்கள் நடப்பதுண்டு. அந்த வகையில் தான் அமெரிக்காவில் ஒரு திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது.

ஹெலிகாப்டர் திருட்டு
அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் ஹெலிகாப்டர் ஒன்றையே திருடன் ஒருவன் திருடிச்சென்றுள்ளான். ஆனால், சிறிது நேரத்தில் திருடனின் எண்ணம் எல்லாம் தவிடுபொடியாகிவிட்டது.. இந்த திருட்டு சம்பவம் குறித்த விவரங்களை பார்ப்போம்:- அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சாக்ரமெண்டோ காவல் நிலையத்திற்கு உள்பட்ட ஒரு இடத்தில் 4 ஹெலிகாப்டர்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. ஹெலிகாப்டர் நிறுத்தப்பட்டு இருந்த டார்மாக் பகுதிக்குள் அத்துமீறி அதிகாலை 4 மணி முதல் 6 மணிக்குள் நுழைந்து இருக்கிறான்.

ஹெலிகாப்டரை இயக்க தெரியாததால்
அதில் ஒரு ஹெலிகாப்டரை எப்படியோ ஸ்டார்ட் செய்து விட்டான். ஹெலிகாப்டர் ஸ்டார்ட் ஆன சந்தோஷத்தில் இதை எடுத்துக்கொண்டு தப்பி பறந்து விட வேண்டியதுதான்.. என்ற எண்ணத்தில் இயக்க முயற்சித்து இருக்கிறான். ஹெலிகாப்டரை இயக்க தெரியாததால் சில நிமிடங்களிலேயே ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியிருக்கிறது. இந்த தகவல் உடனடியாக உள்ளூர் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐக்கும் தகவல் கொடுத்து விட்டனர்.

ஹெலிகாப்டர் திருடப்பட்டது
அதற்குள் விபத்தை ஏற்படுத்திய திருடன் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்ததோடு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். இந்த ஹெலிகாப்டர் விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லையென்றாலும், திருடனை பிடிக்க முழு வீச்சில் எப்.பி.ஐ அதிகாரிகள் தேடுதல் வேட்டையில் இறங்கினர். சிறிது நேரத்தில் திருடன் சுற்றி வளைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஹெலிகாப்டர் திருடப்பட்டது தொடர்பான வீடியோ காட்சிகளையும் உள்ளிட்டவற்றையும் எப்.பி.ஐ அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.

அனைத்து கோணங்களிலும் விசாரணை
திருடனின் உண்மையான நோக்கம் என்பது குறித்தும் எப்.பி.ஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜாலியான பயணத்திற்காக ஹெலிகாப்டரை சிலர் எடுத்துச்செல்லலாம், ஒரு சிலரோ குற்ற செயல்களை அரங்கேற்ற எடுத்துச்செல்லலாம், அல்லது பயங்கரவாத செயலாக இது நடக்கக் கூடும் எனவே அனைத்து கோணங்களிலும் விசாரணை நடப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

யாரும் காயம் அடையவில்லை?
ஹெலிகாப்டர் திருடப்பட்டு விபத்துக்குள்ளானது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள ஹெலிகாப்டர் நிறுவனம், தங்கள் நிறுவனத்திற்கு சொந்தமான Bell 429- என்ற ஹெலிகாப்டர் தனி நபர் ஒருவரால் திருடப்பட்டதாகவும் விபத்தில் சிக்கியதில் கடுமையாக சேதம் அடைந்தது. எங்கள் ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். இந்த விபத்து தொடர்பாக யாரும் காயம் அடையவில்லை என்று நம்புகிறோம்" என தெரிவித்துள்ளது. ஹெலிகாப்டர் திருடு போன சம்பவம் மிகவும் தீவிரமான பிரச்சினை என்பதால் அமெரிக்காவின் விமான போக்குவரத்து அமைப்பும் விசாரணையை தொடங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications