டிரம்ப்புக்கு தொலைபேசியில் மோடி வாழ்த்து..பதிலுக்கு அவர் சொன்னதை பாருங்க..இதுதான் உண்மையான நட்பாம்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்புக்கு முதலில் பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்தார். அதன்பிறகு தொலைபேசியில் டொனால்ட் டிரம்பை தொடர்பு கொண்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். இந்த வேளையில் பிரதமர் மோடி, இந்தியா பற்றி டொனால்ட் டிரம்ப் கூறிய தகவல் அனைவரையும் கவர்ந்துள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் கமலா ஹாரிஸ் தோல்வியடைந்துள்ளார். குடியரசு கட்சியின் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் 2வது முறையாக பொறுப்பேற்க உள்ளார்.

டொனால்ட் டிரம்ப் 2025 ஜனவரி மாதம் 20ம் தேதி முதல் அமெரிக்க அதிபராக செயல்படுவார். இந்நிலையில் தான் டொனால்ட் டிரம்ப் வெற்றியை தொடர்ந்து பல்வேறு நாட்டு தலைவர்கள் அவருக்கு சமூக வலைதளங்கள் மூலமாகவும், தொலைபேசி வழியாகவும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்பை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அப்போது பிரதமர் மோடி, வரலாற்று சிறப்பு வெற்றியை பெற்றுள்ளீர்கள். உங்களுக்கும், உங்களின் கட்சிக்கும் வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.
அதனை கேட்ட டொனால்ட் டிரம்ப், பிரதமர் மோடி மற்றும் இந்தியாவை உண்மையான நண்பனாக கருதுகிறேன். பிரதமர் மோடி பிரமாண்டமான தலைவர். இந்தியாவும் பிரமாண்டமான நாடு. இந்தியாவுடன் மீண்டும் சேர்ந்து செயல்பட ஆவலாக உள்ளேன் என கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் வரும் நாட்களில் இருவரும் சேர்ந்து செயல்படுவது பற்றியும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இன்று டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்ற பிறகு அவர் சில நாட்டு தலைவர்களுடன் மட்டுமே தொலைபேசியில் பேசியுள்ளார். அதில் பிரதமர் மோடியும் ஒருவர். முன்னதாக பிரதமர் மோடி டொனால்ட் டிரம்ப்புக்கு எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து இருந்தார். அதில், ‛‛ வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெற்றுள்ள எனது நண்பர் டொனால்ட் டிரம்புக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
முந்தைய பதவிக் காலத்தின் வெற்றிகளை நீங்கள் தொடர்ந்து கட்டமைக்கும்போது இந்தியா பக்கபலமாக இருக்கும். இந்தியா-அமெரிக்கா இடையேயான விரிவான உலகளாவிய மற்றும் வியூக கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கான ஒத்துழைப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். நம் மக்களின் நலனுக்காகவும், உலக அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் புகழை மேம்படுத்துவதற்கும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம்'' என கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications