இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. அடுத்தடுத்து ஏற்படும் அதிர்வுகள்.. அச்சத்தில் மக்கள்!
வாஷிங்டன்: இந்தோனாசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவான நிலநடுக்கத்தால் இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள மலுகு மாகாணம் குலுங்கியது.
துருக்கி - சிரிய எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் கடந்த 6 ஆம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
நிலநடுக்கத்தால் 41 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். இன்னமும் கூட அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த அளவுக்கு நிலநடுக்கம் கடும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டு சென்றது.

ரிக்டர் அளவில் 6.1 ஆக..
இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து பசிபிக் கடல் பகுதியை ஒட்டியுள்ள தீவுகளில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதேபோல், நேற்று அதிகாலை பிலிப்பைன்ஸில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு இருந்தது. ரிக்டர் அளவில் 6.1 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியிருந்தது. எனினும், இந்த நிலநடுக்கங்களால் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை.

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்
இந்த நிலையில் இன்று இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள மலுகு மாகாணத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவான நிலநடுக்கத்தால் அங்குள்ள பகுதிகள் குலுங்கின. இந்திய நேரப்படி பிற்பகல் 3.07 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியா தீவுகளை ஒட்டியுள்ள பகுதியில்தான் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடலுக்கு அடியில் 39 கி.மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து உடனடியாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

பல நாடுகளில் அடுத்தடுத்து..
துருக்கியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு பிறகு உலக அளவில் பல நாடுகளில் தொடர் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. நேற்று முன் தினம் நியூசிலாந்தில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. நியூசிலாந்து வெலிங்டன் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் 6.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இதனால் சில கட்டிடங்கள், வீடுகள் இடிந்தன. எனினும் பெரிய உயிரிழப்புகள் ஏற்படவில்லை. அதேபோல், நேற்று முன் தினம் ரோமானியாவில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நேற்று கொலம்பியாவில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

சிரியா - துருக்கி நிலநடுக்கத்திற்கு பின்..
நேற்று முன் தினம் அமெரிக்காவின் ஓசன் வியூ பகுதியில் 4.8 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. டாங்கோவில் 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது. அந்த வரிசையில் இன்று இந்தோனேசியாவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது கொஞ்சம் சக்தி வாய்ந்த நிலநடுக்கமாக பதிவானாலும் பாதிப்பு எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. சிரியா - துருக்கி நிலநடுக்கத்திற்கு பின் வரிசையாக அடுத்தடுத்த நாட்களில் பல்வேறு நாடுகளில் நிலநடுக்கங்கள் ஏற்படுவது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications