வெள்ளை இனப் பெருமிதம்.. கறுப்பர் ஒடுக்குமுறை- 'பேரினவாத' நாடாகிறதா அமெரிக்கா?
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளில் டொனால்ட் டிரம்ப் பெற்றிருக்கும் வாக்குகள் அந்த தேசமும் பேரினவாத நாடாக விஸ்வரூபம் எடுத்து நிற்கிறதோ? என்பதையே வெளிப்படுத்துகின்றன.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப்-க்கு எதிரான பிரசாரங்களில் கறுப்பர்கள் மீதான இனவெறி தாக்குதல், குடியேற்ற அகதிகள் விவகாரம், எல்லையில் குடும்பங்களைப் பிரித்தல்... இவற்றுடன் கொரோனா, பொருளாதார பிரச்சனை ஆகியவை முன்வைக்கப்பட்டன. இதனை அடிப்படையாக வைத்து ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் பிரசாரம் செய்தார்.
இருந்தபோதும் டிரம்ப்பை ஜோ பிடனின் இந்த பிரசாரங்கள் வீழ்த்திவிடவில்லை என்பதைத்தான் தேர்தல் முடிவுகளும் அதை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரைகளும் சுட்டிக்காட்டப்படுகின்றன. அமெரிக்காவைப் பொறுத்தவரை தங்களது வெள்ளை இனத்தின் மறுமலர்ச்சி கர்த்தாவாக டொனால்ட் டிரம்ப்பை பார்க்கிறார்களோ என்கிற கேள்வியை இந்த தேர்தல் முடிவுகள் எழுப்புகின்றன.

வாக்குகள் ஒருமுகம்
ஜோ பிடன் முன்வைத்த அத்தனை பிரச்சனைகளும் வெள்ளை இனத்தவரால் சசிக்க முடியாதவை; மாறாக வெள்ளை இன மக்களின் வாக்குகளை டிரம்ப்-க்கு ஆதரவாக ஒருமுகப்படுத்தி இருப்பதாகவே புரிந்து கொள்ள முடிகிறது. இதனை இலங்கையை வைத்து இப்படியும் கூட ஒப்பிட்டு சொல்லலாம் என நினைக்கிறேன்.

இலங்கை- அமெரிக்கா ஒப்பீடு
அதாவது இலங்கை தேர்தல்களில் ஈழத் தமிழர் இனப்படுகொலை, அதிகாரப் பறிப்பு, உள்நாட்டு யுத்தம், மனித உரிமை மீறல் என அத்தனை குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. ஆனால் சிங்கள இனமக்கள் வாழும் பகுதிகளில் இத்தகைய குற்றச்சாட்டுகளுக்குள்ளாகிற தலைவர்தான் அமோக ஆதரவை பெற்றவராக திகழ்கிறார். நம் காலத்தில் இதற்கு மகிந்த ராஜபக்சேவை உதாரணமாக சொல்லலாம்.

மகிந்த ராஜ்ஜபக்சே
அதிபர் தேர்தலோ நாடாளுமன்ற தேர்தலோ, மகிந்த ராஜபக்சே களத்தில் நிற்கும் போதெல்லாம் சிங்கள இனமக்களின் தாயகப் பரப்பான தென்னிலங்கை அவருக்கு கண்மூடித்தனமான ஆதரவை காட்டுகிறது. ஈழத் தமிழரின் தாயக நிலப்பரப்பான வடக்கு கிழக்கின் மக்கள் மகிந்த ராஜபக்சேவை முற்று முழுதாக நிராகரித்துவிடுகின்றனர். மகிந்த ராஜபக்சே மீது முன்வைக்கப்படுகிற அத்தனை விமர்சனங்களும் இன்னொரு வகையில் அவருக்கு ஆதரவாக சிங்களர் வாக்குகளை ஒருமுகப்படுத்தி அவருக்கு மிகப் பெரும் வெற்றியை கொடுத்துக் கொண்டே இருக்கிறது. இதனால்தான் இலங்கையில் சிங்கள பேரினவாதம் என்பது காலந்தோறும் வேர்பிடித்து கெட்டிப்படுத்தப்பட்டிருக்கிறது.

அமெரிக்காவில் மையம்
கிட்டதட்ட இதேபோன்ற போக்கை நோக்கி அல்லது இதேபோன்ற ஒரு போக்குதான் அமெரிக்காவில் மையம் கொண்டிருக்கிறதோ என்பதையே டொனால்ட் டிரம்ப்-க்கு கிடைத்திருக்கும் அமோக வாக்குகள் சுட்டிக்காட்டுகின்றன. இலங்கையைப் போல் அமெரிக்காவில் சிங்களர்- தமிழர் என்ற இரு தனித் தேசிய இனமக்கள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் இதற்கு இணையாக பூர்வீக அமெரிக்கர்கள் அதாவது வெள்ளையின மக்கள்- குடியேறிகள் அல்லது கறுப்பின மக்கள் என்கிற பிரிவினை நிலைத்து இருக்கிறது.

அமெரிக்காவும் பேரினவாத தேசம்
டொனால்ட் டிரம்ப்புக்கான செல்வாக்கானது வெள்ளை இனமக்களிடத்தில் ஒரு பேரினவாத போக்கு சிந்தனையை- அதாவது நாங்கள் ஒன்றுபட்டு நிற்கிறோம்... இது எங்களது மண்... உங்கள் மீதான ஒடுக்குமுறைகளை ஆதரிக்கிறோம்; ஆகையால் டிரம்ப்பை கொண்டாடுகிறோம் என்கிற போக்ககை அப்பட்டமாக காட்டி நிற்கிறது. இது நிச்சயம் அமெரிக்காவை இலங்கையைப் போல முழுமையான ஒரு வெள்ளைப் பேரினவாத நாடாக்கிவிடும் என்பதில் சந்தேகம் இல்லை.












Click it and Unblock the Notifications