கண்கள் சிவந்த ரஷ்ய அதிபர் புதின்.. நேரடியாக டிரம்பிடம் சொன்ன வார்த்தை.! அப்போ உக்ரைன் கதி?
வாஷிங்டன்: ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதலால் புதின் கடும் கோபத்தில் இருக்கிறார். இந்தத் தாக்குதலுக்கு நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும் என்று புதின் நேரடியாகவே அமெரிக்க அதிபர் டிரம்பிடம் கூறியிருக்கிறார். இதனால் தற்போதைய சூழலில் உக்ரைன் ரஷ்யா உடையே போர் நிறுத்தம் வர வாய்ப்புகள் குறைவு என்றே கருதப்படுகிறது.
ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து வருகிறது. இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு ரஷ்யா மீது உக்ரைன் திடீரென மிகப் பெரிய டிரோன் தாக்குதலை நடத்தியது. இந்தளவுக்குப் பெரிய தாக்குதலை ரஷ்யா துளியும் எதிர்பார்க்கவில்லை. இதனால் ரஷ்யா ஒரு நொடி ஷாக் ஆகிவிட்டது என்பதே உண்மை.

டிரம்ப்
மேலும், பொதுவாக இதுபோன்ற பெரிய தாக்குதல் என்றால் அமெரிக்காவுக்குத் தகவல் தெரிவிக்கப்படும். ஆனால், டிரம்பிடம் எந்தவொரு தகவலும் தெரிவிக்காமலேயே உக்ரைன் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது. இதற்கிடையே உக்ரைனின் இந்த டிரோன் தாக்குதல் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் சில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக ரஷ்ய அதிபர் புதின் உடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சுமார் ஒரு மணி நேரம் தொலைப்பேசி வழியாக உரையாடினார். ரஷ்யாவிற்குள் வந்து உக்ரைன் நடத்திய இந்த ட்ரோன் தாக்குதலுக்கு ரஷ்யா நிச்சயம் பதிலடி கொடுக்கும் என புதின் கூறியதாக டிரம்ப் தெரிவித்தார். இதில் மிகவும் உறுதியாக இருப்பதாக புதின் தன்னிடம் சொன்னதாக அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
பதிலடி நிச்சயம்!
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "நான் இப்போது தான் தொலைப்பேசி மூலம் ரஷ்ய அதிபர் புதின் உடன் உரையாடினேன். இந்த அழைப்பு சுமார் ஒரு மணி நேரம் 15 நிமிடங்கள் நீடித்தது. ரஷ்யாவின் விமானங்கள் மீது உக்ரைன் நடத்திய தாக்குதல் குறித்தும் இரு தரப்பும் மாறி மாறி நடத்திய தாக்குதல்கள் குறித்து நாங்கள் விவாதித்தோம். இன்று நடந்த ஆலோசனை சிறப்பாகவே போனது. ஆனால், இதனால் உடனடியாக போர் நிறுத்தம் ஏற்படும் எனச் சொல்ல முடியாது. விமான தளங்கள் மீதான தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்க வேண்டும் என்பதில் புதின் உறுதியாக இருக்கிறார்" என்றார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ரஷ்யா மீது மிகப் பெரிய டிரோன் தாக்குதலை உக்ரைன் நடத்தியது. தனது டிரோன்களை லாரியில் மறைத்து ரஷ்யாவுக்குள் உக்ரைன் அனுப்பியது. முக்கியமான ராணுவ தளங்களுக்கு அருகே லாரி சென்றவுடன் அந்த டிரோன்களை ஏவியது. அந்த டிரோன்கள் ரஷ்யாவின் முக்கிய ராணுவ தளங்களைத் தாக்கியது. இதில் 5 ராணுவ தளங்களில் சுமார் 40 ரஷ்யப் போர் விமானங்கள் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.
ஈரான் விவகாரம்
டிரம்ப் மேலும், "ஈரான் பற்றியும், அணு ஆயுதங்கள் விவகாரத்தில் ஈரான் நேரம் கடந்து கொண்டிருப்பது குறித்தும் நான் புதினிடம் பேசினேன். இந்த விவகாரத்தில் நாம் விரைந்து செயல்பட வேண்டும் என்றேன். ஈரான் அணு ஆயுதம் வைத்திருக்க முடியாது என்றும் என்று புதினிடம் கூறினேன். இதற்கு அவரும் உடன்பட்டதாகவே நம்புகிறேன். ஈரானுடனான விவாதங்களில் பங்கேற்பேன் என்றும் இதை விரைவான முடிவுக்குக் கொண்டுவருவதில் உதவியாக இருப்பேன் என்றும் புதின் கூறினார்..
இந்த மிக முக்கியமான விஷயத்தில் (அணு ஆயுத விவகாரம்) ஈரான் தனது முடிவை மெதுவாக எடுத்து வருகிறது என்பது எனது கருத்து. இந்த விவகாரத்தில் விரைவான பதிலே எங்களுக்குத் தேவை" என்றார்.
ஈரான் அணு ஆயுதங்கள்
இப்போது ஈரானிடம் அணு ஆயுதங்கள் இல்லை. ஆனால், அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யத் தேவையான செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் அதிகமாக உற்பத்தி செய்து வருகிறது. இதனால் ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்ய முயல்வதாக மேற்குலக நாடுகள் குற்றஞ்சாட்டுகின்றன. இருப்பினும், இதை ஈரான் மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications