சமாதானமாகும் ரஷ்யா - அமெரிக்கா? புதின் வாழ்த்துக்கு டிரம்ப் கூறிய பதில்! விரைவில் பேச்சுவார்த்தை?
வாஷிங்டன்: அமெரிக்கா, ரஷ்யா இடையே கடும் மோதல் போக்கு உள்ளது. இதற்கிடையே அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்ற டொனால்ட் டிரம்புக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் திடீரென்று வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் பேச்சுவார்த்தைக்கும் தயார் என்று கூறியுள்ளார். இதற்கு டொனால்ட் டிரம்ப் வரவேற்கும் வகையில் பதிலளித்துள்ளார். இதனால் உலக அரசியலில் ரஷ்யா - அமெரிக்கா நாடுகள் மோதலை கைவிட்டு சமாதானம் அடைகிறதா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட துணை அதிபர் கமலா ஹாரிசை முன்னாள் அதிபரும், குடியரசு கட்சியின் வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். 2025 ஜனவரியில் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக தனது பணியை தொடங்க உள்ளார்.

டொனால்ட் டிரம்புக்கு பிரதமர் மோடி உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல் டொனால்ட் டிரம்புக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வாழ்த்து தெரிவிப்பாரா? என்ற பெரிய கேள்வி எழுந்தது. ஏனென்றால் ரஷ்யா மற்றும் அமெரிக்கா இடையே கடும் மோதல் போக்கு உள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போருக்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதேபோல் ரஷ்யாவை சமாளிக்க உக்ரைனுக்கு அமெரிக்கா தான் உதவி வருகிறது. இதுதவிர போர் நடவடிக்கையால் ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இந்த செயல்கள் அனைத்து ஜோ பைடன் அதிபராக இருக்கும்போது அமல்படுத்தப்பட்ட உத்தரவுகள். இது இன்று வரை தொடர்ந்து வருகிறது.
இத்தகைய சூழலில் தான் ஜோ பைடனின் ஜனநாயக கட்சியின் கமலா ஹாரிசை தோற்கடித்து டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். இதனால் ரஷ்யா - அமெரிக்கா இடையேயான மோதல் போக்கு என்பது முடிவுக்கு வருமா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது. இதுபற்றி நேற்று முன்தினம் ரஷ்யாவின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவிடம் அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்ற டொனால்ட் டிரம்புக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வாழ்த்து தெரிவிப்பாரா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர், வாழ்த்து சொல்லும் மனநிலையில் புதின் இல்லை என்று கூறியிருந்தார்.
இதற்கிடையே தான் தற்போது புதின் மனமாற்றம் அடைந்துள்ளார். அதாவது விளாடிமிர் புதின், டொனால்ட் டிரம்புக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதாவது நேற்று ரஷ்யாவின் தெற்கு நகரமான சோச்சியில் வால்டாய் மன்றத்தில் நடந்த நிகழ்ச்சியில் விளாடிமிர் புதின் பேசினார். அப்போது அவர் டொனால்ட் டிரம்பின் பெயரை கூறாமல் ‛‛அவரை வாழ்த்துவதற்கு நான் இந்த வாய்ப்பை பயன்படுத்துகிறேன்’’ என்றார். இந்த வேளையில் அவரிடம் ‛‛டொனால்ட் டிரம்பிடம் பேச்சுவார்த்தைக்கு நடத்த தயாராக உள்ளீர்களா?’’ என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு புதின் ‛‛தயார்’’ என்று கூறினார்.
இது தற்போது உலக அளவில் பெரும் பேசும் பொருளாகி உள்ளது. அதேபோல் டொனால்ட் டிரம்ப் எம்பிசி செய்தி நிறுவனத்திடம் பேட்டியளித்தார். அப்போது அவரிடம் விளாடிமிர் புதினிடம் பேசுவீர்களா? என்று கேட்கப்பட்டது. அதற்கு, ‛‛நாங்கள் பேசுவோம் என்று நினைக்கிறேன். நான் புதன்கிழமை முதல் அநேகமாக 70 உலக தலைவர்களுடன் பேசியுள்ளேன். ஆனால் புதினுடன் இப்போது வரை பேசவில்லை. அவர் கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தார்’’ என்று கூறி சிரித்தார்.
இருப்பினும் விளாடிமிர் புதின் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று கூறியுள்ளது உலகளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஜோ பைடன் அதிபராக இருக்கும்போது டொனால்ட் டிரம்பும், விளாடிமிர் புதினும் 7 முறை வரை பேசியிருக்கலாம் என்று அமெரிக்க புலனாய்வு பத்திரிகையாளர் பாப் உட்வார்ட் தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் டொனால்ட் டிரம்ப் முதல் முறையாக 2016ல் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டபோது அவரை எதிர்த்து ஜனநாயக கட்சியின் ஹிலாரி கிளிண்டன் போட்டியிட்டார். அப்போது டொனால்ட் டிரம்புக்கு ஆதரவாக ரஷ்யா தலையீடு செய்ததாக கூறப்பட்டது. ஆனால் ரஷ்யா முற்றிலுமாக மறுத்தது.
மேலும் டொனால்ட் டிரம்பை விளாடிமிர் புதின் பாராட்டியிருந்தார். அமெரிக்க தேர்தல் பிரசாரத்தில் டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். இதுபற்றி புதின் தற்போது, ‛‛அவர் (டொனால்ட் டிரம்ப்) தைரியமான நபர். அசாதாரண சூழலை அவர் கையாண்ட விதம் கவர்ந்துள்ளது’’ என்று பாராட்டியிருந்தார். இதனால் தான் டொனால்ட் டிரம்ப் - விளாடிமிர் புதின் ஆகியோரால் ரஷ்யா - அமெரிக்கா இடையேயான மோதல் போக்கு பேச்சுவார்த்தை மூலம் குறைய உள்ளதா? என்ற பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications