நிலவில் மோதும் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்.. நமக்கு என்ன பாதிப்பு ஏற்படும்? நாசா முக்கிய தகவல்.. பின்னணி!
வாஷிங்டன்: கடந்த 2015ஆம் ஆண்டு ஏவப்பட்ட ராக்கெட் ஒன்று தற்போது நிலவில் மோத உள்ளது. ஆனால், இதைக் கண்டு யாரும் அச்சப்படத் தேவையில்லை, ஏனென்றால் இப்படி நடப்பது இது முதல்முறையும் இல்லை.
உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார். அப்படி அவர் நடத்தும் நிறுவனங்களில் முக்கியமானது ஸ்பேஸ் எக்ஸ்.
கடந்த 2002ஆம் தொடங்கப்பட்ட இந்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்வெளி சாட்டிலைட் உள்ளிட்டவற்றை எடுத்துச் செல்ல பல வகையான ராக்கெட்களை உற்பத்தி செய்து வருகிறது.

ஸ்பேஸ் எக்ஸ்
அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையான நாசா கூட ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் தங்கள் சாட்டிலைட்களை எடுத்துச் செல்ல ஒப்பந்தம் போட்டுள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தால் குறைந்த செலவில் சாட்டிலைட்களை விண்வெளிக்கு அனுப்ப முடிவதால் பலரும் அந்நிறுவனத்தை விரும்புகின்றனர். சாட்டிலைட்களை எடுத்துச் செல்லும் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்கள் தனது பணியை முடித்ததும் பூமிக்குத் திரும்பிவிடும். இதன் மூலம் மீண்டும் மீண்டும் அந்த ராக்கெட்களை பயன்படுத்த முடியும். இதனால் செலவு 40% வரை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்குக் குறைந்தது.

2015 ராக்கெட்
இதனால் விண்வெளி போக்குவரத்தில் மிகவும் வெற்றிகரமான நிறுவனங்களில் ஒன்றாக ஸ்பேஸ் எக்ஸ் இருந்து வருகிறது. இப்படித் தான் கடந்த 2015இல் ஏவப்பட்ட ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட், சாட்டிலைட்டை குறிப்பிட்ட இடத்தில் விடுவித்ததுடன் அங்கிருந்து பூமிக்குத் திரும்பி இருக்க வேண்டும். இருப்பினும், அதில் போதுமான எரிபொருள் இல்லாமல் போனது, அந்த ராக்கெட் பூமிக்குத் திரும்பவில்லை. இதனால் அந்த ராக்கெட்டின் மேற்பகுதி விண்வெளியிலேயே சுற்றி வந்து கொண்டிருக்கிறது.

4 டன்
இந்நிலையில், சுமார் 4 டன் எடை கொண்ட இந்த ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் வரும் மார்ச் 4ஆம் தேதி நிலவில் மோத உள்ளதாக இதன் பாதையைத் தொடர்ந்து கணித்து வந்த பில் கிரே தெரிவித்துள்ளார். ராக்கெட்டின் இந்த பகுதி தள்ளாட்டத்துடன் பயணிக்கிறது. எனவே, அது நிலவில் எந்த இடத்தில் மோதும், எப்போது மோதும் என்பதைத் துல்லியமாகக் கணிக்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த நிகழ்வைப் பூமியிலிருந்து நம்மால் பார்க்க முடியாது. பெரும்பாலான வானியலாளர்கள் இதைப் பெரிய விஷயம் இல்லை என்றே குறிப்பிடுகின்றனர். இந்த மோதல் நிலவில் மற்றொரு பள்ளத்தை ஏற்படுத்தும்.

முதல்முறை இல்லை
கடந்த காலங்களில் பல சமயங்களில் ராக்கெட்கள் நிலவில் மோதியுள்ளது. சில சமயங்களில் எதிர்பாராத விதமாகவும் பல சமயங்களில் விண்கலத்தின் பணி முடியும் சமயத்தில் திட்டமிட்டும் அவை நிலவில் மோதியுள்ளன. முதல்முறையாகக் கடந்த 1959இல் சோவியத் லூனா 2 என்ற செயற்கைக்கோள் முதன் நிலவில் மோதியது. அதேபோல கடந்த 2019ஆம் ஆண்டு இஸ்ரேல் அனுப்பிய லேண்டர் ஒன்றும் நிலவின் மீது மோதியது.

அச்சம் வேண்டாம்
இப்படி நிலவில் மோதி அங்கே இருக்கும் சாட்டிலைட் பாகங்கள் அங்கேயே சிதைந்தது கிடக்கின்றன. கடந்த காலங்களில் மோதிய விண்கலங்கள் உடன் ஒப்பிடுகையில் இந்த Falcon 9 ராக்கெட் சற்று பெரியதாக உள்ளன. அதேபோல சற்று வேகமாகவும் சென்று கொண்டிருக்கிறது. இந்த Falcon 9 ராக்கெட் நிலவில் மோதுவதால், பூமிக்குச் சுற்றுச்சூழல் பாதிப்புகள் எதுவும் ஏற்படாது என்றும் இதனால் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றே நாசா ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

ஆய்வு
இது தொடர்பாக நாசா செய்தித்தொடர்பாளர் கூறுகையில், "தற்போது நிலவைச் சுற்றி வரும் நாசாவின் Lunar Reconnaissance Orbiterஆல் இதை பதிவு செய்ய முடியாது. ஏனென்றால் மோதல் நடக்கும் போது அந்த குறிப்பிட்ட இடத்தில் எல்ஆர்ஓ இருக்காது. இருப்பினும், மோதலுக்கு முன் மற்றும் மோதலுக்குப் பின் ஏற்படும் நிகழ்வுகளை நம்மால் ஒப்பிட்டுப் பார்க்க முடியும். இது நிலவின் ஆய்வுக்கு முக்கியமான வாய்ப்பை ஏற்படுத்துகிறது" என்று குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications