ChatGPT எல்லாம் இனி காலி.. கோதாவில் குதிக்கும் கூகுள்.. அதிரடியாக கொண்டு வந்த சுந்தர் பிச்சை
சாட் ஜிபிடிக்கு போட்டியாக புதிய ஏஐ சாதனத்தை கூகுள் நிறுவனம் கொண்டு வந்துள்ளது.
வாஷிங்டன்: ஒட்டுமொத்த இணைய உலகமே இப்போது சாட் ஜிபிடி குறித்தே பேசி வருகிறது. இதற்கிடையே சாட் ஜிபிடிக்கு போட்டியாகக் கூகுள் நிறுவனம் அதிரடியாக புதிய ஏஐ கருவியைக் கொண்டு வந்துள்ளது.
கடந்த சில காலமாகவே ஒட்டுமொத்த நெட்டிசன்களும் ChatGPT குறித்தே பேசிக் கொண்டிருக்கிறார்கள்.. ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இந்க ChatGPT இயங்குகிறது.
இதற்கு முன்பும் கூட பல ஏஐ கருவிகள் சந்தைக்கு வந்திருந்தாலும் இந்தளவுக்கு வலிமையான ஒன்றை யாருமே பார்த்தது இல்லை. இது நிச்சயம் தொழில்நுட்ப துறையில் மிகப் பெரிய புரட்சியை நிகழ்த்தும் என்றே வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

ஏஐ சாதனம்
அது நாம் கேட்கும் கேள்விகளுக்கு அனைத்திற்கும் அப்படியே ஒரு அறிவார்ந்த மனிதனைப் போல இது பதில் தருகிறது. இது மட்டுமின்றி எம்பிஏ மற்றும் சட்ட தேர்வுகளைக் கூட இது ஈஸியாக பாஸ் செய்வதாக வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர் இதன் திறனைக் கண்டு அனைவருமே வியந்துபோய் உள்ளனர். அதேநேரம் ஏஐ கருவிகளால் வரும் காலத்தில் பல லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயமும் உள்ளதாக வல்லுநர்கள் எச்சரிக்கை விடுக்கவும் தவறுவதில்லை.

கூகுள்
இந்த ChatGPT மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது தேடுபொறியில் இணைத்துள்ளது. பணம் கொட்டும் தேடுபொறி சந்தையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் கூகுளிடம் தனது இடத்தை மொத்தமாக இழந்து இருந்தது. இப்போது ChatGPT துணையுடன் விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் மைக்ரோசாப்ட் நிறுவனம் இறங்கியுள்ளது. இது கூகுள் நிறுவனத்திற்குப் பெரிய சிக்கலைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் கூகுளின் பெரும்பகுதி வருவாய் தேடுபொறியில் இருக்கும் விளம்பரங்களில் இருந்தே வருகிறது. விரைவில் அந்த நிலை மாறக்கூடும்.

பிராட்
இதற்கிடையே சாட் ஜிபிடிக்கு பதிலடி தரும் வகையில் கூகுள் நிறுவனமும் தனது புதிய ஏஐ தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஏஐ-க்கு அவர்கள் Bard என்று பெயர் வைத்துள்ளனர். முதலில் சோதனை அடிப்படையில் சில பயனாளர்களுக்கு மட்டும் இது சோதனை செய்யப்படும் என்றும் அதைத் தொடர்ந்து விரைவில் அனைவருக்கும் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது பயனாளர்கள் தரும் பதில்கள் மற்றும் இணையத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில் பயனாளர்களுக்குப் பதில்களைத் தரும்.

சாட் ஜிபிடி
பயனாளர்களின் டேட்டாக்களை தொடர்ந்து இது கலெக்ட் செய்யும். இதனால் அடுத்து வரும் காலத்தில் பயனாளர்கள் எழுப்பும் கேள்விக்குத் துல்லியமாக பதில் தர முடியும்.. இது நிச்சயம் சாட் ஜிபிடிக்கு போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது இணையத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் செயலியாக சாட் ஜிபிடி உள்ளது. டிக்டாக், இன்ஸ்டாகிராமை காட்டிலும் இதன் வளர்ச்சி மின்னல் வேகத்தில் உள்ளது. சாட் ஜிபிடி வெளியாகி இரண்டு மாதங்கள் ஆகும் நிலையில், ஏற்கனவே10 கோடி ஆக்டிவ் யூஸர்கள் இந்த செயலிக்கு வந்துவிட்டனர்.

என்னவெல்லாம் செய்யலாம்
இதுவரை நாம் பார்த்த ஏஐ-களில் சாட் ஜிபிடி மிகவும் வலுவான ஒன்றாக உள்ளது. நாம் கேட்டால் அது கட்டுரைகள், ஜோக்குகள் அவ்வளவு ஏன் கவிதைகளைக் கூட எழுதித் தருகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கிளை நிறுவனமான ஓபன்ஏஐ என்ற தனியார் நிறுவனம் இந்த ஏஐ கருவியைக் கடந்த நவம்பர் மாத இறுதியில் வெளியிட்டது. இதை யார் வேண்டுமென்றாலும் இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

கடும் போட்டி
சில கூடுதல் வசதிகளைக் கொண்ட சாட்பிஜிபி பிளஸ் அமெரிக்கப் பயனாளர்களுக்கு மட்டும் $20 (கிட்டத்தட்ட ரூ. 1,600) கட்டணத்தில் கிடைக்கிறது. கடந்த சில மாதங்களாக சாட் ஜிபிடி மட்டுமே இருந்த நிலையில், இப்போது அதற்குப் போட்டியாக பிராட்டை கூகுள் இறக்கியுள்ளது. இரு ஏஐகளுக்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என்று வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.. முன்கூட்டியே சந்தையில் நுழைந்த அட்வான்டேஜ் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு இருந்தாலும் கூட.. கூகுள் இதில் கடும் போட்டியைக் கொடுக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications