இந்தியாவுக்கு பெர்மிஷன் ஏன்? ரஷ்ய ஆயில் பற்றி டிரம்ப் சொன்ன வார்த்தை.. உற்று பார்க்கும் உலக நாடுகள்
டெல்லி: ஈரான் போர் காரணமாக சர்வதேச கச்சா எண்ணெய் சந்தைகள் கொந்தளித்துள்ள நிலையில், எரிபொருள் விலை உயர்வு குறித்து தனக்குக் கவலையில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். மேலும், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அனுமதி கொடுத்துள்ளது தொடர்பான கேள்விக்கும் டிரம்ப் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
இஸ்ரேல் ஈரான் இடையேயான போர் இரண்டாவது வாரமாகத் தொடர்கிறது. இரு தரப்பும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் பிராந்திய போர் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த போர் காரணமாக உலக எரிசக்தி விநியோகத்தின் முக்கிய வழித்தடங்களில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தி முடங்கியுள்ளது. வெகு சில எண்ணெய் கப்பல்கள் மட்டுமே இப்போது ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கிறது. இதன் காரணமாகக் கச்சா எண்ணெய் விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர ஆரம்பித்துள்ளன.

டிரம்ப்
இதற்கிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் இது தொடர்பாக சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார். அதாவது போர் காரணமாகக் கச்சா எண்ணெய் விலை உயர்ந்த நிலையில், அது குறித்து தனக்குக் கவலையில்லை என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதற்கு அமெரிக்கா சலுகை அளிப்பது குறித்தும், உலக எரிசக்திச் சந்தையில் உள்ள அழுத்தத்தைக் குறைக்க வேறு ஏதேனும் நடவடிக்கைகள் எடுக்க அமெரிக்கா தயாராக இருக்கிறதா என டிரம்பிடம் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த டிரம்ப், தேவைப்பட்டால் அமெரிக்க நிர்வாகம் செயல்படத் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டார்.
முடிந்ததை செய்வேன்
அவர் மேலும், "என்னால் செய்ய முடிவதை செய்வேன். எங்கள் நடவடிக்கையால் சிறிதளவு அழுத்தம் தணிந்தாலும், நான் அதைச் செய்வேன்.. அதேநேரம் எமர்ஜென்சி காலங்களில் பயன்படுத்த வேண்டிய கையிருப்பைப் பயன்படுத்தும் தேவை இருக்காது. நம்மிடம் நிறைய எண்ணெய் இருக்கிறது. அபரிமிதமான எண்ணெய் கையிருப்பு இருக்கிறது. எனவே, எமர்ஜென்சி எண்ணெய் பயன்படுத்தும் சூழல் உருவாகவில்லை. நிலைமை விரைவில் சீராகும்" என்றார்.
3 பாயிண்டு
அதாவது டிரம்ப் சொல்வது 3 முக்கிய பாயிண்டுகள் தான். முதலில் போர் காரணமாகக் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும் தனக்குக் கவலை இல்லை.. அடுத்து இப்போதைய சூழலில் எமர்ஜென்சி காலங்களில் பயன்படுத்த வைத்திருக்கும் கையிருப்பைப் பயன்படுத்தும் சூழல் உருவாகவில்லை. மேலும், சர்வதேச சந்தையில் ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்கவே ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இது தான் இப்போதைய சூழலில் டிரம்ப் சொல்லும் முக்கிய கருத்துகளாகும்.
பின்னணி
கடந்த ஆண்டு, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கியதற்காக இந்தியா மீது டிரம்ப் 25% வரி விதித்திருந்தார். இது உக்ரைன் போருக்கு ரஷ்யாவுக்கு நிதியளிப்பதாக டிரம்ப் நிர்வாகம் குற்றம் சாட்டியது. இந்தச் சூழலில் தான் கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட இந்தியா- அமெரிக்கா இடையே இடைக்கால ஒப்பந்தம் இறுதியானது. அதில் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதல்களைக் குறைக்க இந்தியா ஒப்புக்கொண்டதாக அமெரிக்கா கூறியது. இதனால் டிரம்ப் நிர்வாகம் வரியைக் குறைத்தது.
கடந்த சனிக்கிழமை அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானின் மீது நடத்திய தாக்குதல்களை அடுத்து, மத்திய கிழக்கு பிராந்தியம் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது. கச்சா எண்ணெய் விலையும் உச்சத்திற்குப் பறந்த நிலையில், அதைக் கட்டுப்படுத்தவே இப்போது ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதலுக்கு அமெரிக்கா பெர்மிஷன் கொடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications