ரெடியான லிஸ்ட்.. டிரம்ப் பதவியேற்றதும் பல ஆயிரம் அமெரிக்க வாழ் இந்தியர்கள் நாடு கடத்தப்படும் அபாயம்!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்றுள்ள டிரம்ப், அடுத்த மாதம் அதிபராகப் பதவியேற்கிறார். இந்த முறை அவர் சட்ட விரோதமாகக் குடியேறியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பார் என்றே தெரிகிறது. இதற்கிடையே 15 லட்சம் பேரைக் கொண்ட சட்டவிரோத குடியேற்ற லிஸ்ட் ரெடியாகி இருப்பதாகவும் அதில் பல ஆயிரம் இந்தியர்கள் பெயர்கள் இடம்பெற்று இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபராக அடுத்தாண்டு ஜன. 20ம் தேதி டிரம்ப் பதவியேற்க உள்ள நிலையில், அந்நாட்டின் வரலாற்றிலேயே மிகப் பெரிய நாடுகடத்தலை மேற்கொள்ளப் போவதாக டிரம்ப் உறுதியளித்துள்ளார்.

சட்ட விரோதமாகத் தங்கியிருப்போரால் தான் அமெரிக்கர்களுக்கு வேலை கிடைப்பதில்லை என டிரம்ப் தொடர்ந்து சொல்லி வரும் நிலையில், முறைகேடாகக் குடியிருக்கும் அனைவரையும் டிரம்ப் நாடு கடத்தவுள்ளார்.
இந்தியாவுக்கு நாடு கடத்தப்படலாம்: அதற்குத் தயாராகும் வகையில் அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத் துறை (ICE) சுமார் 15 லட்சம் பேரை கொண்ட லிஸ்ட்டை தயார் செய்துள்ளது. இவர்கள் அனைவருமே சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்கள் ஆவர். குறிப்பாக இந்த லிஸ்டில் சுமார் 18,000 இந்தியர்கள் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் அனைவரும் மீண்டும் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்படும் அபாயத்தில் உள்ளனர்.
கடந்த நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தலுக்குப் பிறகு வெளியான இந்த தகவல்களின்படி, 18 ஆயிரம் இந்தியர்கள் உட்பட சுமார் 15 லட்சம் பேர் அங்குச் சட்டவிரோதமாகத் தங்கியுள்ளனர். துல்லியமாகச் சொல்ல வேண்டும் என்றால் 17,940 இந்தியர்கள் அந்த லிஸ்டில் உள்ளனர்.
இந்தியர்கள்: அதேநேரம் அங்கு உண்மையில் சட்ட விரோதமாகத் தங்கியிருப்போர் எண்ணிக்கை இதை விடப் பல மடங்கு அதிகம் என்கிறார்கள் வல்லுநர்கள். அங்குள்ள ப்யூ ஆராய்ச்சி மையத்தின் ஆய்வின்படி சுமார் 7.25 லட்சம் இந்தியர்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. மெக்சிகோ மற்றும் எல் சால்வடார் நாடுகளைச் சேர்ந்தவர்களுக்குப் பிறகு இந்தியர்களே அங்குச் சட்டவிரோதமாக அதிகம் தங்கி இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த அக். மாதம் தான் அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியிருந்த இந்தியர்கள் தனி விமானம் மூலம் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர். கடந்த அக்டோபர் 22ஆம் தேதி அந்த விமானம் 100+ இந்தியர்களுடன் வந்து இறங்கியது. அமெரிக்கா மற்றும் மத்திய அரசு இணைந்து இந்த நடவடிக்கையை எடுத்து இருந்ததாக அப்போது தெரிவிக்கப்பட்டு இருந்தது.
கைது: அமெரிக்காவுக்குச் செல்ல உரிய அனுமதி பெற இந்தியர்கள் ஏற்கனவே போராடி வருகிறார்கள். இதன் காரணமாகவே பல நூறு இந்தியர்கள் அங்குச் சட்ட விரோதமாகச் செல்கிறார்கள். கடந்த மூன்று ஆண்டுகளில் சராசரியாக 90,000 இந்தியர்கள் ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைய முயன்று கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸில் இருந்து அதிகபட்சமாக 261,651 பேர் சட்டவிரோதமாக நுழைய முயன்று கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து குவாத்தமாலா, மெக்சிகோ மற்றும் எல் சால்வடார் நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
அமெரிக்க அரசு: இது ஒரு பக்கம் இருக்க அமெரிக்க குடிவர துறை அதிகாரிகள் இந்தியாவை ஒத்துழைக்காத நாடு என்று வகைப்படுத்தியுள்ளது. அதாவது சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்பதைக் கண்டறியச் சம்பந்தப்பட்ட நாடுகளை அமெரிக்கா தொடர்பு கொள்ளும். அமெரிக்காவில் பிடிக்கப்பட்ட நபர்கள் தங்கள் நாட்டை சேர்ந்தவர்கள் தானா என்பதை அந்த நாடுகள் உறுதி செய்ய வேண்டும். இதில் தான் இந்தியா தாமதம் செய்வதாக அமெரிக்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அமெரிக்க அதிபராக அடுத்த மாதம் டிரம்ப் பதவியேற்கும் நிலையில், உடனடியாக சட்ட விரோதமாகக் குடியேறியவர்களை நாடு கடத்தும் நடவடிக்கையை எடுப்பார். இதனால் இந்தியர்கள் அதிகளவில் பாதிக்கப்படலாம் என்று அஞ்சப்படுகிறது.












Click it and Unblock the Notifications