ஓனர் மேல் பாய்ந்த பிட்புல்.. 3 மாத பேத்தியும் கடித்து கொலை.. நாய்களை கொன்று உடலை மீட்ட போலீஸ்
வாஷிங்டன்: நாய்க்கடி பிரச்சினை என்பது இப்போது எல்லாப் பக்கமும் ஒரு மிகப் பெரிய பிரச்சினையாகவே மாறியிருக்கிறது. அப்படித் தான் பிட்புல் நாய்கள் கடித்ததில் 50 வயது நபர் மற்றும் அவரது 3 மாதப் பேத்தி கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளனர். போலீசார் அந்த நாய்களைக் கொன்ற பிறகே அவர்களின் உடலை மீட்டுள்ளனர். அந்தளவுக்கு நாய்கள் ஆக்ரோஷமாக இருந்துள்ளன.
நமது நாட்டில் பல்வேறு இடங்களிலும் நாய்க்கடி பிரச்சினை பெரிய தலைவலியாக மாறியுள்ளன. இதனால் தேவையில்லாத உயிரிழப்புகளும் கூட ஏற்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் கூட வழக்கு விசாரணையில் இருக்கிறது. அதேநேரம் இந்தியா என இல்லை.. உலகெங்கும் கூட இப்போது நாய்க்கடி பெரிய பிரச்சினையாகவே உருவெடுத்துள்ளது.

பிட்புல் தாக்குதல்
அப்படியொரு மோசமான சம்பவம் தான் அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் நடந்துள்ளது. அங்கு 50 வயதான ஜேம்ஸ் அலெக்சாண்டர் ஸ்மித் மற்றும் அவரது மூன்று மாதப் பேத்தி ஆகியோரை பிட்புல் நாய்கள் கடித்துக் கொன்றுள்ளன. அவர்கள் வீட்டிற்கு உள்ளேயே இருந்த நிலையில், ஏழு பிட்புல் நாய்கள் சேர்ந்து அவர்களைக் கடித்துக் கொன்றுள்ளன. அங்கு துல்லஹோமா என்ற பகுதியில் அமைந்துள்ள அவர்களது வீட்டில் புதன்கிழமை பிற்பகல் அவர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.
இந்த குடும்பத்தினர் தான் அந்த பிட்புல் நாய்களை வளர்ந்து வந்துள்ளனர். இருப்பினும், அவை எப்போதுமே ஆக்ரோஷமாகவே இருக்குமாம். அண்டை வீட்டாரும் இது தொடர்பாகப் பல முறை புகாரளித்துள்ளனர். ஆனால், இவர்கள் அது தொடர்பாகக் கண்டு கொள்ளாமலேயே இருந்துவிட்டனர். இந்தச் சூழலில் தான் அந்த நாயே அவர்கள் பக்கமே திரும்பிவிட்டன.
கடித்து குதறிய பிட்புல்
அந்த நாய்கள் தான் இவர்களைக் கடித்துக் குதறியுள்ளது. இது தொடர்பாகத் தகவல் கிடைத்தவுடன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அப்போது வீட்டிற்கு உள்ளேயே ஸ்மித் மயக்கமடைந்த நிலையில் இருந்துள்ளார். போலீசார் அங்குச் சென்ற போது பிட்புல் நாய்கள் குழந்தையைத் தொடர்ந்து கடித்துக் கொண்டு இருந்துள்ளது.. போலீசாரையும் கடிக்க வந்துள்ளது. இதனால் வேறு வழியில்லாமல் அந்த ஏழு நாய்களையும் போலீசார் சுட்டு கொன்றனர். இருப்பினும், அதற்குள் காயத்தால் குழந்தை உயிரிழந்தது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இது தொடர்பாக உள்ளூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
போலீஸ் சொல்வது என்ன
இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறுகையில், "எங்கள் அதிகாரிகள் பார்த்தது மிகவும் கொடூரமான ஒரு காட்சி. இதனால் அவர்களே மன ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தேவையான உதவிகளைப் பெற ஏற்பாடு செய்துள்ளோம். குழந்தையைக் காப்பாற்றத் தேவையான முயற்சிகள் எடுக்கப்பட்டது. ஆனால், அது முடியவில்லை" என்றார்.
என்ன நடந்தது!
இது தொடர்பாக அண்டை வீட்டில் வசிக்கும் பிரையன் கிர்பி கூறுகையில், "போலீசார் வருவதற்கு முன்பு ஒரே அலறல் சத்தமாக இருந்தது. போலீசார் வந்த பிறகே பிட்புல் நாய்களைக் கட்டுப்படுத்தினர். அந்த பிட்புல் நாய்கள் எப்போதுமே ஆக்ரோஷமாகவே இருக்கும். நான் பல முறை இது தொடர்பாகப் புகாரளித்துள்ளேன். 8 ஆண்டுகளாகவே இதற்காக அவர்களுடன் சண்டை போட்டுள்ளேன். அவை எனது பூனையைக் கூட கொன்றுள்ளன.
அதேநேரம் இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று அவர்கள் (நாய்களின் உரிமையாளர்கள்) நினைத்திருக்க மாட்டார்கள். ஏன் இப்படி நடந்தது எனத் தெரியவில்லை. நாய்களை வளர்த்தது ஓகே.. ஆனால், அதைச் சரியாகக் கட்டுப்படுத்த வேண்டும்.. அசம்பாவிதம் நடந்த பிறகு நாய்களைக் குறை சொல்லி எந்தவொரு பயனும் இல்லை" என்று அவர் கூறினார்.


Click it and Unblock the Notifications
