இந்தியர்களுக்கு தான் பெரிய சிக்கல்.. "இனி நோ லாட்டரி.." H-1B விசா ரூல்ஸை மொத்தமாக மாற்றும் டிரம்ப்
வாஷிங்டன்: அமெரிக்காவில் இப்போது ஹெச்-1பி விசாக்களுக்கு புதிய விதிமுறைகள் முன்மொழியப்பட்டுள்ளன. இதற்கு முன்பு ஹெச்-1பி விசா நடைமுறையில் லாட்டரி சிஸ்டம் கடைப்பிடிக்கப்பட்டு வந்த நிலையில், இப்போது அது நீக்கப்பட்டுள்ளது. லாட்டரிக்கு பதிலாகச் சம்பள அடிப்படையில் ஹெச்-1பி விசாவை கொடுக்கும் வகையில் அமெரிக்கா புதிய ரூல்ஸை உருவாக்கியுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் H-1B விசா கட்டணத்தை உயர்த்தி இருந்தார். அதாவது ஹெச்-1பி விசா கட்டணம் 4,500 டாலரில் (ரூ.3.7 லட்சம்) இருந்து 100,000 டாலராக உயர்த்தப்பட்டது. இது 2,122% உயர்வாகும். இந்த அறிவிப்பு வெளியாகி சில நாட்களில் இப்போது அமெரிக்காவில் H-1B விசா திட்டத்தின் விதிமுறைகளை மாற்றியமைக்க ஒரு புதிய திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.

விசா ரூல்ஸ் மாற்றம்
இப்போது நடைமுறையில் இருக்கும் திட்டத்தில் லாட்டரி முறை பின்பற்றப்படுகிறது. அதாவது ஒவ்வொரு ஆண்டும் 85,000 ஹெச்-1பி விசா வழங்கப்படும். ஆனால், இந்த எண்ணிக்கை தாண்டி அதிகப் பேர் விசா கோரி விண்ணப்பிப்பார்கள். அதுபோன்ற சூழல்களில் கம்பியூட்டர் அடிப்படையிலான லாட்டரி முறையில் விசா வழங்கப்படும். இந்த லாட்டரி முறையை டிரம்ப் கடுமையாக எதிர்த்து வந்தார்.
இந்தச் சூழலில் தான் புதிய விசா திட்டத்தில் தற்போதுள்ள லாட்டரி முறை நீக்கப்பட்டுள்ளது. மேலும், சம்பளத்தின் அடிப்படையில் விசா வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அதிகச் சம்பளம் வாங்குவோருக்கு முன்னுரிமை அளித்து ஹெச்-1பி விசா வழங்கப்படுமாம். இதன் மூலம் உயர் திறன்கொண்ட மற்றும் அதிக ஊதியம் பெறும் வெளிநாட்டவர்களுக்கு எளிதாக H-1B விசாக்கள் கிடைக்கும்.
லாட்டரி முறை நீக்கம்
புதிய திட்டத்தின்படி, லாட்டரி முறை நீக்கப்படும். விசா விண்ணப்பதாரர்கள் அவர்கள் பெறும் சம்பள அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஆண்டுக்கு $162,528 அல்லது அதற்கு மேல் அதிகச் சம்பளம் பெறும் ஊழியர்கள், விசா தேர்வுப் பட்டியலில் நான்கு முறை சேர்க்கப்படுவார்கள். ஆனால் குறைந்த ஊதியம் பெறுபவர்கள் ஒருமுறை மட்டுமே சேர்க்கப்படுவார்கள். இதன் மூலம் அதிகச் சம்பளம் பெறுவோருக்கு அதிக வாய்ப்பு கிடைக்கும்.
டிரம்ப் தரப்பு விளக்கம்
இது தொடர்பாக வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் டெய்லர் ரோஜர்ஸ் பேசுகையில், "அமெரிக்க ஊழியர்களுக்கே முன்னுரிமை அளிக்கப் போகிறோம் எனத் தேர்தல் சமயத்தில் டிரம்ப் வாக்குறுதி அளித்திருந்தார். அதன்படியே இப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஹெச்-1பி விசா விதிமுறைகளைச் சில நிறுவனங்கள் தவறாகப் பயன்படுத்தி வந்த நிலையில், அதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் உயர்திறன் கொண்ட ஊழியர்களை அமெரிக்காவிற்குக் கொண்டு வர விரும்பும் நிறுவனங்களுக்கு இந்த புதிய திட்டம் நிம்மதியையே கொடுக்கும். ஏனென்றால் சில நிறுவனங்கள் ஹெச்-1பி விசா திட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தின. இதனால் உண்மையாகவே திறமையான ஊழியர்களைக் கொண்டு வர முயலும் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன. அதை இப்போது நாங்கள் சரி செய்துள்ளோம். அமெரிக்க ஊழியர்களுக்கு அதிகளவில் வேலை கிடைப்பதை உறுதி செய்வதே எங்கள் நோக்கம்" என்றார்.
இந்தியாவுக்குச் சிக்கல்!
டிரம்ப்பின் இந்த நடவடிக்கைகள் இந்தியர்கள் அதிகம் பாதிக்கலாம். ஏனென்றால் இதுவரை ஹெச்-1பி விசாக்களில் சுமார் 71%ஐ இந்தியர்களே பெற்று வந்தனர். டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ உள்ளிட்ட பல ஐடி நிறுவனங்கள் இந்த H-1B விசாக்களை பெரிதும் நம்பியுள்ளன. அப்படியிருக்கும்போது டிரம்ப் அரசு அறிவித்த இந்த திடீர் ரூல்ஸ் இந்திய நிறுவனங்களுக்குப் பல பில்லியன் டாலர் கூடுதலாகச் செலவு வைக்கும்.












Click it and Unblock the Notifications