குண்டுகளுக்குப் பதில் 'எண்ணெய்' அஸ்திரம்! ஈரானின் ஆயில் கதையை முடிக்க போகும் டிரம்ப்! மாஸ்டர் பிளான்
வாஷிங்டன்: அமெரிக்கா ஈரான் இடையேயான நேரடியாக மோதல் இல்லை என்றாலும் போர் நிறுத்தம் தொடர்பாக டீல் எதுவும் ஏற்படவில்லை. இதற்கிடையே போர் நிறுத்தத்தை திடீரென டிரம்ப் நீடித்துள்ள நிலையில், இதற்காக டிரம்ப்பை பலரும் விமர்சித்து வருகிறார்கள். இருப்பினும், டிரம்பின் திட்டம் வேறு விதமானது என்கிறார்கள் வல்லுநர்கள்!
அமெரிக்காவின் 'ஆபரேஷன் எபிக் ஃபியூரி' இப்போது ஒரு புதிய வடிவத்தை எடுத்துள்ளது. ஈரான் மீதான போர்நிறுத்தத்தை நீட்டிக்க முடியாது என நேற்று வரை வாய் விட்டுக் கொண்டிருந்த டிரம்ப், நள்ளிரவில் திடீரென போர் நிறுத்தத்தை நீட்டிப்பதாக அறிவித்துவிட்டார்.. வழக்கம் போலப் பலரும் ட்ரம்ப் பின்வாங்கிவிட்டார், அதாவது TACO - Trump Always Chickens Out என்று நக்கலடிக்க ஆரம்பித்துவிட்டனர்.

டிரம்ப் திட்டம்
இருப்பினும், டிரம்பின் இந்த முடிவுக்குப் பின்னால் இருக்கும் ஒரு 'பக்கா' பொருளாதார வியூகம் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது ராணுவத் தாக்குதலை விட ஈரானுக்குக் கூடுதல் வலியைத் தரக்கூடியது. அதாவது அமெரிக்க நிதித்துறை செயலாளர் ஸ்காட் பெசன்ட் வெளியிட்ட ஒரு பதிவு, இந்த வியூகத்தை உடைத்துக் காட்டியுள்ளது. போர் நிறுத்தத்தை நீடித்தாலும் கூட ஈரான் மீதான கடல்சார் முற்றுகையை அமெரிக்கா இன்னும் நீக்கவில்லை. ஈரானால் தனது கச்சா எண்ணெய்யை ஏற்றுமதி செய்ய முடியாத சூழலில், அதன் முக்கிய எண்ணெய் முனையமான கார்க் தீவில் உள்ள சேமிப்புக் கிடங்குகள் இன்னும் சில நாட்களில் முழுமையாக நிரம்பிவிடும்.
ஏன் பாதிப்பு
ஒருமுறை சேமிப்புக் கிடங்குகள் நிரம்பிவிட்டால், ஈரானால் மேற்கொண்டு எண்ணெய் உற்பத்தி செய்ய முடியாது. வேறு வழியின்றி எண்ணெய் கிணறுகளை மூட வேண்டிய கட்டாயம் ஏற்படும். அப்படி ஈரான் தனது எண்ணெய் கிடங்குகளை மூடினால் அது ஈரானுக்கு நினைத்துக் கூட பார்க்க முடியாத மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இதுதான் ட்ரம்ப் விரித்துள்ள பொருளாதார வலை!
எண்ணெய் கிணறுகளை மூடுவது என்பது சாதாரண குடிநீர்க் குழாயை மூடுவது போல எளிதான காரியம் அல்ல..கிணறுகளை நிறுத்தும்போது நிலத்தடி அழுத்தம் குறைந்து, உள்ளே தண்ணீர் புகுந்துவிடும். இதனால் மீண்டும் அதை ஆபரேட் செய்ய ஆரம்பிப்பது மிகவும் சவாலான காரியமாக மாறும். மேலும், உலகின் பல பகுதிகளிலும் கச்சா எண்ணெய் கிடைத்தாலும் அவை ஒரே மாதிரி இருக்காது. ஈரானில் கிடைக்கும் கச்சா எண்ணெய் அடர்த்தியானது. குழாய்களில் எண்ணெய் தேங்கி நின்றால், அது அப்படியே உறைந்து ரத்த நாளங்களில் ஏற்படும் கட்டியைப் போல அடைப்பை ஏற்படுத்திவிடும்.
மிக மோசமான இழப்பு
ஈரானிடம் இருப்பது பெரும்பாலும் பழைய எண்ணெய் கிணறுகள் என்பதால், ஒருமுறை இவை மூடப்பட்டால் மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வருவது மிகக் கடினம். சில கிணறுகள் நிரந்தரமாகவே பாழாகக்கூடும். இதன் காரணமாக ஈரானின் தினசரி எண்ணெய் உற்பத்தியில் சுமார் 3 முதல் 5 லட்சம் பேரல்கள் குறைய வாய்ப்புள்ளது. இதன் மூலம் ஈரானுக்கு ஆண்டுக்குச் சுமார் 15 பில்லியன் டாலர், அதாவது சுமார் ரூ.1.25 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என நிபுணர்கள் கணிக்கின்றனர். ஈரானின் பொருளாதார முதுகெலும்பையே உடைக்கும் முயற்சி இது.
முக்கியம்
ஈரான் மீது குண்டுகளை வீசுவது உலக நாடுகளின் கண்டனத்தைப் பெறும்.. மேலும், அமெரிக்காவுக்கும் இதனால் பல ஆயிரம் கோடி செலவாகும். மேலும், இது தேவையில்லாமல் அண்டை நாடுகளைப் பாதித்து, போரை இன்னும் தீவிரமாக்கும் என்பதையும் ட்ரம்ப் உணர்ந்துள்ளார். அதற்குப் பதிலாக ஈரான் தனது வாழ்வாதாரமான எண்ணெய் உற்பத்தியைத் தானே நிறுத்த வைப்பதன் மூலம், ஈரானைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்து வர வைக்க முடியும் என்று டிரம்ப் நம்புகிறார்.
குண்டுகளை விடப் பொருளாதாரத் தடைகள் வலிமையானவை என்பதை ட்ரம்ப் மீண்டும் நிரூபிக்கப் பார்க்கிறார். இந்த மாத இறுதிக்குள் ஈரானின் கச்சா எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை வைத்து கேம் ஆடுவதே டிரம்பின் திட்டமாக உள்ளது. எனவே, அடுத்த சில நாட்கள் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் ரொம்பவே முக்கியமானதாக இருக்கிறது. குண்டுகள் வெடிக்கவில்லை என்றாலும் வளைகுடா மோதல் உச்சக்கட்டத்திற்குப் பறக்கிறது!












Click it and Unblock the Notifications