வந்த வேலை முடிந்தது.. 2-3 வாரத்தில் குட் நியூஸ்! ஈரான் குறித்து பேசிய டிரம்ப்! இந்தியா தப்பிக்குமா?
வாஷிங்டன்: அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்துக்கொண்டு சும்மா இருந்த ஈரான் மீது சரமாரியான தாக்குதலை நடத்தியிருந்தது. இந்த போர் இந்தியா உட்பட உலகம் முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், போர் எப்போது முடியும் என்பது குறித்து டிரம்ப் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
ஈரானுடனான போரை சில வாரங்களுக்குள் முடிவுக்குக் கொண்டுவர முடியும் என கூறியிருக்கிறார். ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "நாங்கள் மிக விரைவில் வெளியேறுவோம். இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் வெளியேற்றம் நடக்கும்" என்று கூறியிருக்கிறார்.

தற்போது ஈரான் போர் 5 வாரத்தில் இருக்கிறது. இந்த போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா தயாராகி வருவதன் தெளிவான அறிவிப்பு இது. டிரம்ப், ஈரானுடன் ஒப்பந்தம் ஏற்படுத்த நினைத்திருந்தார். ஆனால், தற்போது இப்படியான ஒப்பந்தம் ஏதும் அவசியமில்லை என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.
ஈரான் எந்த ஒப்பந்தத்தையும் செய்யத் தேவையில்லை. என கூறிய டிரம்ப், அணு ஆயுதம் தயாரிக்க முடியாதபடி ஈரானைக் கட்டுப்படுத்துவதே அமெரிக்காவின் நோக்கம், அது முடிந்ததும் படைகள் வெளியேறும் என்றும் விளக்கினார். அதே நேரம், உலகின் முக்கிய எண்ணெய் வழித்தடமான ஹார்முஸ் நீரிணையை பாதுகாக்கும் பொறுப்பை அமெரிக்கா ஏற்காது என டிரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
"நீரிணையை பாதுகாப்பது எங்கள் வேலை கிடையாது. அது பிரான்ஸ் அல்லது அந்த நீரிணையை பயன்படுத்துபவர்களுக்கானது. எனவே அதை பாதுகாக்க எங்களுக்கு எந்தக் காரணமும் இல்லை" என்றார். மட்டுமல்லாது இந்தை போரில், அமெரிக்காவின் நட்பு நாடுகள் அமெரிக்காவின் முயற்சிக்கு போதிய ஆதரவு அளிக்கவில்லை எனவும் டிரம்ப் விமர்சித்தார்.
இதற்கிடையில், இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறுகையில், "இத்தாக்குதல் ஈரானிய ஆட்சியை முறையாக நசுக்கி வருகிறது. இஸ்ரேல் பிராந்தியத்தின் முக்கியமான நாடுகளுடன் புதிய கூட்டணிகளை உருவாக்கி வருகிறது" என்றும் குறிப்பிட்டார்.
ஈரான் தனது இராணுவ லட்சியங்களுக்காக மிகப்பெரிய தொகை செலவிட்டும் பலனில்லை என நெதன்யாகு சுட்டிக்காட்டினார். ஈரான் முன்பு இருந்ததை விட இப்போது பலவீனமாக இருப்பதாகவும், இஸ்ரேல் வலுப்பெற்றுள்ளதாகவும் நெதன்யாகு கூறியிருக்கிறார். எனினும், போர் இன்னும் முடிவடையவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தியா தப்புமா?
அமெரிக்காவும், இஸ்ரேலும் தங்கள் நோக்கங்களுக்காக சண்டையிட்டனர். ஆனால், இதனால் இந்தியா உள்ளிட்ட மூன்றாம் நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. போர் காரணமாக இந்தியாவுக்கு எல்பிஜி விநியோகம் பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்த போர் டிரம்ப் சொல்வதை போல 2-3 வாரங்களில் முடிந்தாலும், ஈரான் வளைகுடா நாடுகள் மீது நடத்திய தாக்குதலின் தாக்கம் சரியாக நிச்சயம் 1-2 ஆண்டுகள் ஆகும். எனவே இந்தியாவும் எல்பிஜி தட்டுப்பாட்டிலிருந்து மீள காலம் எடுக்கும் என்று சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications