"ப்ராஜெக்ட் 2025.." சர்வாதிகார நாடாக மாறும் அமெரிக்கா? டிரம்ப் போடும் பிளான்.. பகீர் குற்றச்சாட்டு
வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபரும், குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப், ஜனநாயக நாடான அமெரிக்காவைச் சர்வாதிகார நாடாக மாற்றுவார் என்று அமெரிக்கா துணை அதிபர் கமலா ஹாரிஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். இதற்காக ப்ராஜெக்ட் 2025 என்று ஒன்றை டிரம்ப் உருவாக்கி வருவதாகவும் அது அமெரிக்க ஜனநாயகத்தை நாசம் செய்யும் என்றும் பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் மிகத் தீவிரமாக நடந்து வருகிறது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் பைடனும், குடியரசு கட்சி சார்பில் டிரம்பும் போட்டியிடுவது கிட்டதட்ட உறுதியானது.

அங்கே இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடக்கும் நிலையில், பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இதற்கிடையே டிரம்ப் மீது அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் சில பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
கமலா ஹாரிஸ்: அமெரிக்காவில் வாழும் ஆசியாவை பூர்வீகமாகக் கொண்டவர்களுக்கு மத்தியில் நடந்த நிகழ்ச்சியில் அவர் இந்த பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "டொனால்ட் டிரம்ப் நமது ஜனநாயகத்தை ஒரு சர்வாதிகாரமாக மாற்ற விரும்புகிறார். உலகின் பழம்பெரும் ஜனநாயகத்தை அழிக்கவே அவர் இப்படிச் செய்கிறார்.
டிரம்ப் ஆலோசகர்கள் 900 பக்க ப்ளூ பிரிண்ட் ஒன்றை உருவாக்கியுள்ளனர். அதன் பெயர் ப்ராஜெக்ட் 2025.. டிரம்ப் 2ஆவது முறையாக அதிபராகும் போது என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை விளக்கியுள்ளனர். குறிப்பாக நமது உழைக்கும் வர்க்கத்தினரின் சமூகப் பாதுகாப்பு திட்டத்தை நிறுத்த திட்டமிட்டுள்ளனர். இன்சுலின் மருந்திற்கு விதிக்கப்பட்ட விலை கட்டுப்பாட்டை நீக்கவும் முடிவு செய்துள்ளனர். மேலும் கல்வித் துறை அமைச்சகத்தை மொத்தமாக மூடிவிடவும் முடிவு செய்துள்ளனர்.
பெண்கள் மீதான தாக்குதல்: மேலும், அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் அல்லது அனுமதி இல்லாமல் கருத்தடை செய்வதைத் தடுக்கும் சட்டத்தையும் கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். இத்திட்டம் நமது சட்டம் வழங்கியுள்ள சுதந்திரத்தைப் பறிக்கும் செயல் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை.
நான் மீண்டும் சொல்கிறேன்.. டிரம்பிற்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்தால் நாடு முழுக்க கருக்கலைப்பைத் தடை செய்யும் சட்டத்தைக் கொண்டு வந்துவிடுவார். ஆனால், நாம் அதை நடக்க விடக்கூடாது. தங்களுக்கு என்ன தேவை என்பதைத் தேர்வு செய்யும் உரிமை பெண்களுக்கு இருக்கிறது. அதை அரசு சொல்லத் தேவையில்லை. இதை நடக்க நாம் விடவே கூடாது.
அம்மா: எனது அம்மா தனது 19 வயதில் இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு வந்தார். அவர்கள் அப்போது சிவில் உரிமைகள் குறித்து தீவிரமாகப் போராட்டங்களில் பங்கேற்று வந்தனர். நான் கை குழந்தையாக இருந்த போதே இதுபோன்ற போராட்டங்களுக்கு என்னை அழைத்துச் சென்றுள்ளனர்.
என் அம்மாவுக்குத் தனது வாழ்க்கையில் இரண்டு லட்சியம் இருந்தன. ஒன்று என்னையும் எனது சகோதரியையும் நல்லபடியாக வளர்க்க வேண்டும்.. இரண்டாவது மார்பக புற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவருவது. அவர் மார்பக புற்றுநோய் குறித்து தீவிரமாக ஆய்வு செய்து வந்தார். அப்போது அவர் யாரிடமும் தனது கனவுகளைத் தொடர அனுமதி கேட்கவில்லை. எனது அப்பாவிடமும் கேட்கவில்லை.
எனது தாயார் ஐந்தடி உயரம் தான். ஆனால், நீங்கள் அவளைச் சந்தித்திருந்தால், பிரமித்துப் போவீர்கள்.. அவருடைய மன உறுதியே என்னை இங்குத் துணை அதிபராக நிறுத்தி இருக்கிறது.
முக்கியமான தேர்தல்: இது நமது வாழ்நாளின் மிக முக்கியமான தேர்தல்.. இன்னும் சுமார் 120 நாட்களில் தேர்தல் நடக்கப் போகிறது. அமெரிக்க மக்களின் வரலாற்றில் இது மிக முக்கியமான தேர்தல். இந்த தேர்தலில் போட்டி கடுமையாக இருக்கிறது. அமெரிக்காவைக் காப்பாற்ற அமெரிக்க மக்களைக் காப்பாற்றச் சரியான நபருக்கு வாக்களிப்பீர்கள் என நினைக்கிறேன்" என்றார்.












Click it and Unblock the Notifications