பயம் காட்டும் ஈரான்.. பந்தயம் கட்டும் டிரம்ப்! ஜெயிக்கப்போவது யார்? உண்மை இதுதான்!
வாஷிங்டன்: ஈரான் மீது ஏராளமான பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. அதேபோல, தாக்குதல் நடத்தப்பட்டு அந்நாட்டின் உச்ச தலைவர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். இப்போது ஹார்முஸ் நீரிணையை அமெரிக்கா முழுமையாக தனது கண்ட்ரோலில் எடுத்துக்கொண்டிருக்கிறது. இருந்தாலும், ஈரான் இன்னும் பணியவில்லை. இருப்பினும் டிரம்ப் இந்த விஷயத்தில் பந்தயம் கட்டியிருக்கிறார்.
ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியையும், அத்தியாவசியத் தேவைகளுக்கான இறக்குமதியையும் முழுமையாகத் தடுப்பதன் மூலம் அந்த நாட்டின் சமூகக் கட்டமைப்பை நிலைகுலையச் செய்யலாம் என்பது ட்ரம்ப்பின் திட்டம்.

ஈரானுக்கு அடி
இதன் மூலம் ஈரான் தனது அணுசக்தி திட்டத்தைக் கைவிட்டு, அமெரிக்காவின் நிபந்தனைகளுக்குப் பணியும் என்று வாஷிங்டன் நம்புகிறது. இப்படி நம்புவதற்கு நியாயமான காரணங்கள் இருக்கின்றன. ஏனெனில், அமெரிக்கா எடுத்த நடவடிக்கையால் ஈரானில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.
அமெரிக்காவின் இந்த அரசியல் ஆட்டத்தால், ஈரானில் சுமார் 10 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். உணவுப் பொருட்கள் மற்றும் இறைச்சி போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணைத் தொட்டுள்ளது. அரசு அலுவலகங்களில் மதியம் 1 மணிக்கு மேல் 70% மின்சாரப் பயன்பாட்டைக் குறைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆன்லைன் வணிகம் பாதிக்கப்படும் வகையில் இணையம் துண்டிக்கப்பட்டுள்ளது. ஆச்சரியம் என்னவெனில் இவ்வளவு அடி வாங்கியும், பேச்சுவார்த்தையில் ஈரான் கெத்தாக இருக்கிறது என்பதுதான்.
அமெரிக்காவுக்கும் அடி
மறுபுறம், ஈரானை முடக்க நினைக்கும் இந்த உத்தியால் அமெரிக்காவிற்கும் சில பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அமெரிக்காவில் ஒரு கேலன் பெட்ரோல் 4 டாலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. நவம்பரில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் பணவீக்கம் மற்றும் போர்ச் செலவுகள் குடியரசுக் கட்சியினருக்குப் பின்னடைவை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது. அதேபோல ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடியுள்ளதால் உலகளாவிய எரிசக்தி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடி, ஐரோப்பிய நாடுகளை அமெரிக்காவின் நட்பு வட்டாராத்திலிருந்து விளக்கியிருக்கிறது.
ஈரானின் பலம்
இப்படி இருக்கையில், வாஷிங்டனின் இந்த அமெரிக்க லாஜிக் மத்திய கிழக்கு நாடுகளில் வேலை செய்யுமா என்ற கேள்வி வருகிறது. ஈரான் கடந்த 47 ஆண்டுகளாக அமெரிக்கத் தடைகளைச் சந்தித்து வருகிறது. 1980-களில் ஈராக் உடனான போரில் 10 லட்சம் உயிர்களை இழந்தும் அந்த நாடு பணியவில்லை. மக்கள் போராட்டங்கள் வெடித்தாலும், ஈரானிய அரசு வன்முறை மூலம் அதை அடக்கி ஆட்சியைத் தக்கவைக்கக்கூடும்.
டிரம்ப் பந்தயம்
ஈரானின் தலைவர் அலி கமேனி கொல்லப்பட்டும், வான்வழித் தாக்குதல்கள் நடத்தியும் ஈரான் பணியாதபோது, பொருளாதார நெருக்கடி மட்டும் அவர்களைப் பணிய வைக்குமா என்பது சந்தேகமே என திரிதா பார்சி போன்ற ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால், ஈரான் விஷயத்தில் அமெரிக்கா வரலாறு படைக்கும் என்று டிரம்ப் பந்தயம் கட்டியிருக்கிறார்.
இதையெல்லாம் பார்க்கும்போது, வேலியில போற ஓணாணை எதுக்கு எடுத்து வேட்டியில விட்டுக்கணும்? என கேட்க தோன்றுவதாக நெட்டிசன்கள் கலாய்த்துள்ளனர்.












Click it and Unblock the Notifications