அமெரிக்காவில் எனக்கு பிறகு அதிபராக சரியான ஆள் இவர்தான்.. டிரம்ப் கை காட்டிய நபர் யாரு தெரியுமா?
வாஷிங்டன்: அமெரிக்க துணை அதிபராக உள்ள ஜேடி வான்ஸ் தனக்கு பிறகு அதிபர் பதவிக்கு சரியான தேர்வாக இருப்பார் என்று டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். அதேபோல தற்போது வெளியுறவுத்துறை அமைச்சராக இருக்க கூடிய மார்கோ ரூபியோ துணை அதிபராகலாம் என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் இரண்டாவது முறையாக இந்த ஆண்டு துவக்கத்தில் பதவியேற்றார். அமெரிக்க விதிப்படி ஒருவர் இரண்டு முறை மட்டுமே அதிபராக பதவி வகிக்க முடியும். எனினும், இந்த விதிகளை மாற்றி டிரம்ப் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடக்கூடும் என்ற பேச்சு எழுந்தது.

அடுத்த அமெரிக்க அதிபர் யார்?
இந்த நிலையில்தான் 2028 ஆம் ஆண்டு நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் தான் போட்டியிட வாய்ப்பு இல்லை என்று டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். அது மட்டும் இன்றி தனக்கு பிறகு அமெரிக்க அதிபராக பொருத்தமான நபராக ஜேடி வான்ஸ்தான் இருப்பார் எனவும் டிரம்ப் கூறியுள்ளார். ஜேடி வான்ஸ் தற்போது அமெரிக்க துணை அதிபராக உள்ள நிலையில், குடியரசுக் கட்சியின் சார்பாக அடுத்ததாக ஜேடி வான்ஸே அதிபர் ரேஸில் இறங்குவார் என்பதை டிரம்ப் தற்போதே சூசகமாக குறிப்பிட்டுள்ளார்.
விரும்பப்படும் நபர் அவர் தான்
செய்தி நிறுவனம் ஒன்றிற்கு டிரம்ப் பேட்டி அளிக்கையில், செய்தியாளர்கள் ஜேடி வான்ஸ்தான் குடியரசுக்கட்சியில் அடுத்த அதிபர் வேட்பாளரா? என்ற ரீதியில் கேட்டனர். இதற்கு பதிலளித்த டிரம்ப், பெரும்பாலும் அவராகத்தான் இருக்கும். நியாயமாகச் சொல்வது என்றால் ஜேடி வான்ஸ் தற்போது துணை அதிபராக உள்ளார். தற்போது பல சிறப்பான நபர்கள் இருக்கிறார்கள். ஆனால் நிச்சயமாக ஜேடி வான்ஸ் சிறப்பான பணிகளை செய்துள்ளார். தற்போதைய நிலையில் அவர்தான் விரும்பப்படும் நபர்" என்றார்.
ஜேடி வான்ஸ்க்கு ஆதரவாக டிரம்ப் பேச்சு
முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பாக டிரம்ப் அளித்த பேட்டியில், "ஜேடி வான்ஸை டிரம்ப் புகழ்ந்து பேசியிருந்தாலும் கூட 2028 தேர்தல் பற்றி அதிகாரப்பூர்வமாக பேச மறுத்து இருந்த நிலையில் தற்போது ஜேடி வான்ஸ்க்கு ஆதரவாக பேசியிருக்கிறார். முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அளித்த பேட்டி ஒன்றில் டிரம்ப், மூன்றாவது முறையாகவும் அதிபர் தேர்தலில் தானே போட்டியிட ஆர்வம் காட்டும் வகையில் பேசியிருந்தார்.
2028 ஆம் ஆண்டு தேர்தலிலும் நானே வேட்பாளராக நிற்க வேண்டும் என்று கட்சியில் இருந்து கோரிக்கை வருவதாகவும், 3-வது முறையாக போட்டியிடும் விவகாரத்தில் விதிகளில் சில ஓட்டைகள் இருப்பதாகவும், நான் ஜோக் அடிக்கவில்லை எனவும் பேசியிருந்தார். அமெரிக்க வராலாற்றில் இதுவரை எந்த ஒரு அதிபருமே 2 முறைக்கு மேல் அதாவது மூன்றாவது முறையாக அதிபராக இருந்தது இல்லை என்பதால் டிரம்பின் இந்த கருத்து அரசியல் சாசன நிபுணர்கள் மத்தியில் கவனம் பெற்று பேசுபொருளாகியிருந்தது.
ஜேடி வான்சின் மனைவி இந்திய வம்சாவளி
இந்த நிலையில்தான், தனது நிலைப்பாட்டில் இருந்து மாறி ஜேடி வான்ஸ்க்கு ஆதரவாக தற்போது டிரம்ப் பேசியுள்ளார். அமெரிக்க துணை அதிபராக உள்ள ஜேடி வான்ஸ்சின் மனைவி இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஆவார். அவரது மனைவியின் பெயர் உஷா சிலிக்குரி. உஷா சிலிக்குரி ஆந்திராவின் கோதாவரி மாவட்டத்தில் உள்ள வட்லூரு கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர். உஷாவின் தாத்தா பெயர் ராமசாஸ்திரி சிலிகுரி இவர் சென்னை ஐஐடியில் பணியாற்றினார்.
3 குழந்தைகள் உள்ளனர்
1959ல் ஐஐடி தொடங்கிய கால கட்டத்தில் அங்கு பணி செய்த ராமசாஸ்திரி சிலிகுரி இதற்காக ஆந்திராவின் வட்லூருவை விட்டு அவர் சென்னைக்கு குடிபெயர்ந்தார். 1970 காலக்கட்டத்தில் உஷாவின் பெற்றோர் சென்னையில் அமெரிக்காவின் சான்டியாகோவில் செட்டில் ஆகினர். உஷா சிலிகுரி பெற்றோர் இந்தியாவில் பிறந்து வளர்ந்தாலும் கூட அவர் அமெரிக்காவில் தான் பிறந்து வளர்ந்தார். அமெரிக்காவில் சட்டப்படிப்பை படித்த போது, ஜேடி வான்ஸ் உடன் அவருக்கு நட்பு ஏற்பட்டது. அதன்பிறகு இருவரும் கடந்த 2014 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர். 3 குழந்தைகள் உள்ளனர்.












Click it and Unblock the Notifications