மீண்டும் ஆரம்பிக்கும் டிரம்ப்? இந்தியாவுக்கு ரெசிப்ரோக்கல் வரி எவ்வளவு? சொன்ன முக்கியமான பாயிண்டு!
வாஷிங்டன்: ரெசிப்ரோக்கல் வரி நடைமுறைக்கு வருவதற்கு முன்பு அமெரிக்கா உடன் வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யும் முயற்சியில் உலக நாடுகள் இறங்கியுள்ளன. அதன்படி இந்திய அதிகாரிகளும் அமெரிக்காவில் தீவிரப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் சில விவகாரத்தில் உள்ள சிக்கல் பேசி சரி செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் ரெசிப்ரோக்கல் வரி விவகாரத்தை கையில் எடுத்திருக்கிறார். இடையில் மத்தியக் கிழக்கில் மோதல் தீவிரமாக இருந்த போது ரெசிப்ரோக்கல் வரி குறித்துப் பேசாமல் இருந்தார். அந்தப் பிரச்சனை முடிந்தவுடன் அவர் மீண்டும் ரெசிப்ரோக்கல் வரி விவகாரத்தை கையில் எடுத்திருக்கிறார். ஆகஸ்ட் 1ம் தேதி முதல் இறக்குமதி வரி நடைமுறைக்கு வரும் என்பதை அவர் அறிவித்துள்ளார்.

ரெசிப்ரோக்கல் வரி
இது தொடர்பாக உலகின் பல நாடுகளுக்கு ஏற்கனவே அவர் கடிதங்களையும் அனுப்ப ஆரம்பித்துவிட்டார். இறக்குமதி வரி நடைமுறைக்கு வருவதற்குள் அமெரிக்கா உடன் வர்த்தக ஒப்பந்தம் போடும் முயற்சியில் உலக நாடுகள் இறங்கியுள்ளன. குறிப்பாக இந்திய அதிகாரிகள் கடந்த சில வாரங்களாகவே இது தொடர்பாக அமெரிக்காவில் தீவிரப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
இந்தியா உடனான ஒப்பந்தம்
இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப் இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாகச் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் பஹ்ரைன் பட்டத்து இளவரசர் மற்றும் பிரதமர் சல்மான் பின் ஹமத் அல் கலீஃபாவை சந்தித்தபோது டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் இறுதியாக உள்ளதாகத் தெரிவித்தார். மேலும், சில விவகாரங்களில் சிக்கல் உள்ள போதிலும் அது பேசி சரி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
பேச்சுவார்த்தை நடக்கிறது
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "நாங்கள் இந்தியாவுடன் ஒரு ஒப்பந்தத்தைச் சீக்கிரமே போட இருக்கிறோம். அமெரிக்க நிறுவனங்களுக்கு இந்திய மார்கெட் திறக்கப்பட உள்ளது" என்றார். ரியல் அமெரிக்கா வாய்ஸ் என்ற செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் டிரம்ப் இதை குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், "பல நாடுகளுடன் ஒப்பந்தங்களைச் செய்துள்ளோம். இந்தியாவுடனான ஒப்பந்தம் சீக்கிரமே வர இருக்கிறது. பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. நான் ஒரு கடிதம் அனுப்பினால் ஒப்பந்தம் இறுதியாகும்" என்றார்.
முன்னதாக வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயலும் இந்த ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாகக் கூறியிருந்தார். அதேநேரம் எந்தவொரு அழுத்தம் காரணமாகவும் இந்தியா ஒப்புக்கொள்ளாது என்றும் நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு மட்டுமே வர்த்தக ஒப்பந்தம் போடப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்தோனேசியா
கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்கா- இந்தோனேசியா வர்த்தக ஒப்பந்தம் இறுதியானது. அதன் பிறகு அனைத்து இந்தோனேசிய இறக்குமதிகளுக்குமான வரி 19%ஆக குறைக்கப்படுவதாக டிரம்ப் அறிவித்தார். டிரம்ப் முன்பு 32% வரியை இந்தோனேசியா மீது வித்திருந்த நிலையில், அது இப்போது குறைக்கப்பட்டுள்ளது. இந்தியா உடன் வர்த்தக ஒப்பந்தம் இறுதியான பிறகு, இந்தியாவுக்கும் கிட்டத்தட்ட இதே அளவு வரி விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம் என்ன தான் மற்ற நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் போட்டாலும் அமெரிக்காவுக்குச் சீனா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜப்பானுடன் வர்த்தக ஒப்பந்தம் போடுவது முக்கியம். அப்போது தான் அது முழுமை பெறும். அதேநேரம் இவை பேச்சுவார்த்தை நடத்தி வந்தாலும் அது இறுதியாகும் சூழல் ஏற்படுவது போலத் தெரியவில்லை.












Click it and Unblock the Notifications