அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு சிக்கல்.. "பிறப்புரிமை குடியுரிமை நிச்சயம் இல்லை.." மீண்டும் குடைச்சல் தரும் டிரம்ப்
வாஷிங்டன்: அமெரிக்காவில் பிறக்கும் எல்லாக் குழந்தைகளும் தானாகவே அமெரிக்கக் குடிமக்களாகக் கருதப்படும் என்ற விதி இருக்கிறது. இதற்கு எதிராக டிரம்ப் பிறப்பித்த உத்தரவுக்கு அந்நாட்டு நீதிமன்றம் தடை விதித்திருந்தார். இதற்கிடையே இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டிற்கு சென்றுள்ள டிரம்ப் தரப்பு, சில முக்கிய கோரிக்கைகளை வைத்துள்ளது.
இந்தாண்டு தொடக்கத்தில் அதிபரான உடனேயே டிரம்ப் அதிரடியாகப் பல உத்தரவுகளைப் பிறப்பித்தார். அதில் பல உத்தரவுகள் சர்ச்சையைக் கிளப்பியது. அதில் ஒன்று தான் birthright citizenship எனப்படும் பிறப்பு அடிப்படையில் குடியுரிமை வழங்குவது. அதாவது அமெரிக்கச் சட்டப்படி அமெரிக்க மண்ணில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் குடியுரிமை வழங்கப்படும்.

பிறப்புரிமை குடியுரிமை
பெற்றோர் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு வந்திருந்தாலும் சரி, சட்டப்பூர்வமாக அமெரிக்கா வந்திருந்தாலும் சரி, குழந்தைகள் அமெரிக்காவில் பிறந்தால் அது தானாகவே அமெரிக்கக் குடியுரிமை பெற்றதாகிவிடும். இது தொடர்பான டிரம்ப் உத்தரவு நடைமுறைக்கு வருவதற்கு முன்பே அங்குப் பலரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அங்குள்ள பல கீழமை நீதிமன்றங்கள் டிரம்ப் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது.
இதற்கிடையே இந்த விவகாரத்தில் டிரம்ப் தரப்பு இப்போது மேல்முறையீடு செய்துள்ளது. பிறப்பு அடிப்படையிலான குடியுரிமை விவகாரத்தில் தனது நிர்வாக உத்தரவின் சட்டப்பூர்வத்தன்மையை உறுதி செய்யுமாறு டிரம்ப் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. டிரம்ப் தனது இரண்டாவது பதவிக் காலத்தின் முதல் நாளிலேயே இந்த நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
டிரம்ப் தரப்பு
டிரம்ப் தரப்பு இந்த வழக்கில், "கீழமை நீதிமன்றத்தின் முடிவுகள் அதிபர் டிரம்ப்பின் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கொள்கையை ரத்து செய்தன. இது எங்கள் எல்லைப் பாதுகாப்பை அச்சுறுத்துகிறது. கீழமை நீதிமன்ற முடிவுகளில் சட்டப்பூர்வமான தன்மை இல்லை. இதன் மூலம் பல லட்சம் தகுதியற்றவர்கள் அமெரிக்கக் குடியுரிமை பெறும் சூழல் உருவாகிறது" என்று தெரிவிக்கப்பட்டது. அதாவது அமெரிக்காவைச் சேராதவர்களின் குழந்தைகள் அமெரிக்காவில் பிறக்கும்போது, அவர்களை அமெரிக்கக் குடிமக்களாகக் கருதக்கூடாது என்பதே டிரம்ப் தரப்பின் வாதமாக இருக்கிறது.
கடும் எதிர்ப்பு
அதேநேரம் பல்வேறு சிவில் அமைப்புகளும் டிரம்ப்பின் இந்த நிர்வாக உத்தரவைக் கடுமையாக எதிர்த்துள்ளது. இந்த உத்தரவு வெளிப்படையாக அரசியலமைப்புக்கு விரோதமானது என்றும், அமெரிக்காவில் பிறந்த குழந்தைகளிடமிருந்து நியாயமற்ற முறையில் குடியுரிமையைப் பறிக்கும் என்றும் கூறுகின்றனர். டிரம்ப்பிற்கு எதிராக ஆஜரான வழக்கறிஞர்கள், "இந்த நிர்வாக உத்தரவு சட்டவிரோதமானது, இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. டிரம்ப் சூழ்ச்சியை அனுமதிக்க முடியாது. இந்தக் கொடூரமான மற்றும் அர்த்தமற்ற உத்தரவால் எந்தவொரு குழந்தையின் குடியுரிமையும் பாதிக்கப்படக்கூடாது" என்றார்.
முக்கிய பாயிண்டு
இந்த மேல்முறையீட்டில் டிரம்ப் தரப்பு முன்வைத்துள்ள ஒரு பாயிண்டு முக்கியமானது. அதாவது வழக்கு விசாரணையில் இருக்கும்போது உத்தரவுக்குத் தடை விதிக்கக்கூடாது எனக் கோரிக்கை வைத்துள்ளார். அதாவது கீழமை நீதிமன்றங்கள் இடைக்காலத் தடை விதித்துள்ள நிலையில், அதை நீக்கவே கோரிக்கை வைத்திருக்கிறார். இருப்பினும், இடைக்காலத் தடை நீக்கப்பட்டால் அது பெரிய சிக்கலாகும்.
ஏனென்றால் இந்த மேல்முறையீட்டு மனு இன்னும் விசாரணைக்குப் பட்டியலிடப்படக் கூட இல்லை. அதன் பிறகு வாதங்கள் முடிந்து, ஒரு முடிவெடுக்கப் பல மாதங்கள் ஆகும். இது குடியுரிமை விவகாரத்தில் பெரிய சிக்கலாக மாறும் என்றும் அஞ்சப்படுகிறது. குறிப்பாக அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டினர் உட்பட இந்தியர்களுக்கு இது மிகப் பெரிய சிக்கலாக மாறலாம்.












Click it and Unblock the Notifications