முடிவுக்கு வந்த வர்த்தக மோதல்.. சீன மீதான வரி குறைப்பு! டிரம்ப்- ஜின்பிங் சந்திப்பு வெற்றி
வாஷிங்டன்: அமெரிக்கா சீனா இடையே வர்த்தக மோதல் நடந்து வந்த நிலையில், டிரம்ப்- ஜி ஜின்பிங் இடையே இன்று சந்திப்பு நடைபெற்றது. அதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாகச் சீன பொருட்கள் மீதான வரியை அமெரிக்கா குறைத்துள்ளது. அதேபோல சீனாவும் அமெரிக்காவுக்கு ரேர் எர்த் மெடல் கொடுக்கவும் சோயாபீன்ஸ் கொள்முதலைத் தொடங்கவும் ஒப்புக்கொண்டுள்ளன.
அமெரிக்கா சீனா இடைய கடந்த சில மாதங்களாகவே வர்த்தக மோதல் போக்கு நிலவி வந்தது. இந்தாண்டு தொடக்கத்தில் டிரம்ப் வந்த பிறகு, அவர் இஷ்டத்திற்கு உலக நாடுகள் மீது வரிகளை விதித்தார். அதற்குச் சீனாவும் பதிலடியாக வரிகளை விதிக்கவே இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகப் போர் உருவாகும் சூழல் உருவானது. இதனால் இரு நாடுகள் மட்டுமின்றி, உலகெங்கும் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன.

சந்திப்பு
இந்தச் சூழலில் தான் அமெரிக்க அதிபர் டிரம்ப்- சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையேயான இன்று தென்கொரியாவில் ஆலோசனைக் கூட்டம் நடந்துள்ளது. தென் கொரியாவில் நடந்த இந்த மீட்டிங், சுமார் 2 மணி நேரம் நீடித்தது. இரு தலைவர்களும் சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தினர். சுங்க வரிகளில் 10% குறைப்பு, சோயாபீன்ஸ் கொள்முதல் மீண்டும் தொடங்குதல் மற்றும் ரேர் எர்த் மெடல் என சர்ச்சை இருந்த எல்லாத் துறைகளிலும் குறிப்பிட தகுந்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மிக முக்கியமான முடிவுகள்
இந்த மீட்டிங் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், அமெரிக்கா சீனா உறவுகளில் அற்புதமான புதிய தொடக்கமாக இது இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் பல முடிவுகள் எடுக்கப்பட்டன என்றும் மிக முக்கியமான விஷயங்கள் குறித்த ஆலோசிக்கப்பட்டன என்றும் அவர் தெரிவித்தார். மேலும், வரும் காலங்களில் இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக உறவுகள் வித்தியாசமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், "இந்தக் கூட்டத்தில் எல்லா விஷயங்கள் குறித்தும் நாங்கள் விவாதித்தோம். ஆனால், அது தொடர்பாக அனைத்துத் தகவல்களையும் இப்போது என்னால் பகிர முடியாது. ஆனால் இது ஒரு அற்புதமான சந்திப்பு... ஆற்புதமான தொடக்கம்..! சீனா சோயாபீன்ஸ் கொள்முதலை உடனடியாகத் தொடங்கும்.. மேலும், சீனாவுக்கான வரிகள் 57%லிருந்து 47% ஆக குறைக்கப்படும்" என்றார்.
முடிவுக்கு வரும் மோதல்
இரு நாடுகளுக்கும் இடையே மோதல் வெடிக்க ரேர் எர்த் மெடல்கள் மீதான சீனாவின் கட்டுப்பாடுகளே பிரதானக் காரணமாக இருந்தது. நவீனத் தொழில்நுட்பங்களில் பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்ய ரேர் எர்த் மெடல் அத்தியாவசியமானதாக உள்ளது. இந்த விவகாரத்திலும் இரு தரப்பிற்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. டிரம்ப் இது தொடர்பாக மேலும் கூறுகையில், "ரேர் எர்த் மெடல் பிரச்சனையும் தீர்க்கப்பட்டு விட்டது.. இனிமேல் ரேர் எர்த் மெடல்கள் அமெரிக்காவுக்கு வருவதில் எந்தவொரு பிரச்சனையும் இருக்காது" என்றார்.
ரேர் எர்த் மெடல்
இது தொடர்பாக இரு நாடுகளும் ஓராண்டுக்கு நீடிக்கும் ஒரு தற்காலிக ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தின் கீழ் அடுத்த ஓராண்டுக்கு ரேர் எர்த் மெடல் ஏற்றுமதியைத் தொடர இரு நாடுகளும் தொடர ஒப்புக்கொண்டது. இந்த ஒப்பந்தம் மேலும் நீட்டிக்கப்படும் என்று இரு தரப்பும் நம்பிக்கையும் தெரிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications