டிரம்ப் உடன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்திப்பு.. வெள்ளை மாளிகையில் கூடிய ஐரோப்பிய யூனியன் தலைவர்கள்
வாஷிங்டன்: அமெரிக்காவில் வெள்ளை மாளிகையில் அதிபர் டொனால்ட் டிரம்ப்பை இன்று சந்திக்க உள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை நிறுத்தி அமைதியை கொண்டுவரும் வலிமை அமெரிக்க அதிபர் டிரம்புக்கு உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் - ரஷ்யா இடையே 3 ஆண்டுகளைக் கடந்து இன்னும் போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சித்து வருகிறார். அந்த வகையில் கடந்த 15 ஆம் தேதி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் - ரஷ்ய அதிபர் புதின் சந்திப்பு நடைபெற்றது.

அமெரிக்காவின் அலாஸ்காவில் நடந்த இந்த சந்திப்பின்போது உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். ஆனாலும், போர் நிறுத்தம் தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. புதினை சந்தித்த பின் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுடன் டொனால்டு டிரம்ப் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதேபோல், டிரம்ப்பை சந்தித்த பின் இந்திய பிரதமர் மோடி உள்பட பல்வேறு தலைவர்களுடன் ரஷ்ய அதிபர் புதின் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இன்று சந்திக்கிறார். அமெரிக்காவில் வெள்ளை மாளிகையில் இன்று இந்த சந்திப்பு நடைபெறுகிறது.
இந்திய நேரப்படி இன்று இரவு 10.30 மணியளவில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது. டிரம்ப் - ஜெலன்ஸ்கி சந்திப்பின்போது ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த தலைவர்களும், நேட்டோ நாடுகளின் தலைவர்களும் பங்கேற்கின்றனர். இதற்காக ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் வெள்ளை மாளிகையில் கூடியுள்ளனர்.
இந்தச் சந்திப்பின்போது உக்ரைன் போரை நிறுத்துவது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முக்கிய அறிவிப்பை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், போரை நிறுத்துவது தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் கருத்தும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
டிரம்ப்பை சந்திப்பதற்கு முன்பாக வாஷிங்டன்னில் செய்தியாளர்களை சந்தித்த உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி, உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை நிறுத்தி அமைதியை கொண்டுவரும் வலிமை அமெரிக்க அதிபர் டிரம்புக்கு உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications