"அமைதியை தவிர.. எதை வேண்டுமானாலும் தாருங்கள்!" கலங்கிய ஜெலன்ஸ்கி! உலக நாடுகளுக்கு உருக்கமான கோரிக்கை
வாஷிங்டன்: கிராமி விருது நிகழ்ச்சியில் பேசிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, உலக நாடுகளிடம் உருக்கமான கோரிக்கை ஒன்றை முன் வைத்துள்ளார்.
உக்ரைன் மீது கடந்த பிப். மாதம் இறுதியில் ரஷ்யா முழு வீச்சிலான போரை ஆரம்பித்தது. இந்தப் போர் ஒரு மாதத்திற்கு மேலாகத் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உக்ரைன் மக்கள் இதில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம் துருக்கியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இரு தரப்பிற்கும் இடையே உடன்பாடு ஏற்பட்ட பின்னர், தாக்குதல் குறைந்துள்ளது. இருந்த போதிலும், போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை.

உக்ரைன் போர்
இந்தப் போர் தொடங்குவதற்கு முன்னர் உலகின் பல்வேறு நாடுகளும் உக்ரைனைக்கு ஆதரவாக இருப்பது போலக் காட்டிக் கொண்டன. இருப்பினும், போர் தொடங்கிய பின்னர், உலக நாடுகள் இந்தப் போர் தொடர்பாகப் பெரிய நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. நேட்டோ அமைப்பிடம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பல்வேறு கோரிக்கைகளை வைத்திருந்தார். இருப்பினும், நேட்டோ அமைப்பு ஏற்கவில்லை. போர் தொடங்கிய பின்னர், உலக நாடுகளின் அணுகுமுறை உக்ரைன் மக்களுக்கு கடும் ஏமாற்றத்தை அளிப்பதாகவே இருந்தது.

அதிபர் ஜெலன்ஸ்கி
இந்தச் சூழலில் அமெரிக்காவில் நேற்று நடைபெற்ற கிராமி விருது வழங்கும் விழாவில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி காணொலி வழியாகப் பங்கேற்றார். அப்போது பேசிய ஜெலன்ஸ்கி, "இசைக்கு எதிரானது எது தெரியுமா? மவுனம் தான். அழிக்கப்பட்ட நகரங்கள். இன்று எங்களின் இசைக் கலைஞர்கள் இசைக்கான உடைகள் அணிவதற்குப் பதிலாகக் கவச உடை அணிந்து போரில் சண்டையிட்டு வருகின்றனர். எங்கள் இசைக்கலைஞர்களில் சிலர் காயமடைந்து மருத்துவமனைகளில் இருக்கும் மக்களுக்காகப் பாடுகின்றனர்.

இசை
மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நபர்களால் இசை கேட்க முடியாமல் இருக்கலாம். இருப்பினும், எப்படியும் அவர்களின் உள்ளே இசை ஊடுருவி விடும். நாங்கள் இப்போது எங்கள் சுதந்திரத்திற்காகப் போராடுகிறோம். எங்கள் ஒட்டுமொத்த தேசமே இப்போது ரஷ்யாவுக்கு எதிராகப் போராடிக் கொண்டு வருகிறோம். இந்தப் போரில் உலக நாடுகள் எங்களுக்கு அமைதியைத் தவிர எந்தவிதமான ஆதரவைக் கொடுத்தாலும் சரி தான்!

தாக்குதல்
இப்போது எங்கள் நகரங்களை அவர்கள் குண்டுகளால் தாக்கி வருகின்றனர். இதனால் நகரில் மயான அமைதி ஏற்பட்டுள்ளது. அந்த அமைதியை நீங்கள் தான் உங்கள் இசையால் நிரப்ப வேண்டும். உங்கள் இசையைக் கொண்டு எங்கள் துயரங்களை சொல்லுங்கள். உக்ரைனில் நடந்து வரும் தாக்குதல் தொடர்பாகத் தொடர்பான தகவல்களைச் சமூகவலைத்தளங்களிலும் சொல்லுங்கள்" என்று மிகவும் உருக்கமாகப் பேசினார்.












Click it and Unblock the Notifications