சத்தமே இல்லாமல் பூமியை தாக்கிய.. சூரிய புயல்! ஆபத்து தொலைவில் இல்லை என எச்சரிக்கும் விஞ்ஞானிகள்
வாஷிங்டன்: சூரியனிலிருந்து வெளியாகும் மின்காந்த அலைகள்தான் சூரிய புயல்கள் என்று அழைக்கப்படுகிறது. இந்த அலைகள், பூமியை தாக்கும்போது மின்னணு கருவிகள் அனைத்தும் செயலிழந்துவிடும். இது பேராபத்தை ஏற்படுத்தும். எனவே இந்த புயல்களை விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இப்படி இருக்கையில், இந்த கண்காணிப்பையும் மீறி சூரிய புயல் ஒன்று பூமியை தாக்கியிருக்கிறது.
நவ.20ம் தேதி இந்த சம்பவம் நடந்திருப்பதாக நாசா விஞ்ஞானிகள் கூறுகின்றனர். எந்தவித முன்னெச்சரிக்கையும் இன்றி இது நிகழ்ந்ததால், விஞ்ஞானிகளால் இதை கணிக்க முடியவில்லை. இந்த புயல்களை 'ஸ்டெல்த் சூரிய புயல்கள்' என்று சொல்வார்கள். ஸ்டெல்த் எனில் மறைந்திருந்து தாக்குவது என்று பொருள்.

நல்வாய்ப்பாக இந்த புயல் வீரியமாக இல்லை. எனவே பூமியில் பெரிய பாதிப்புகள் ஏற்படவில்லை. இருப்பினும் மத்திய அட்சரேகை பகுதிகளில் அரோராக்களை உருவாக்க உதவியிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். துருவ பகுதிகளில் வானத்தில் பச்சை நிறத்தில் அலை போன்ற ஒளி தோன்றுவதைதான் அரோரா என்று சொல்லப்படுகிறது. இதனால் எந்த பாதிப்புகளும் ஏற்படாது.
சூரிய புயல்களை முன்கூட்டியே நம்மால் கண்டுபிடிக்க முடியும். சூரியனின் மேற்பரபில் 'கரோனல் மாஸ் எஜெக்ஷன்கள்' எனும் நிகழ்வு நடக்கும். அதாவது சூரிய வெடிப்பு நடக்கும். இதன் பின்னர் புயல்கள் வெளிவரும். ஆனால் ஸ்டெல்த் சூரிய புயல்கள் விஷயத்தில் நமக்கு எந்த முன்னெச்சரிக்கையும் கிடைக்காது. எந்த தடயத்தையும் இந்த புயல்கள் விட்டு செல்லாது. தற்போது வந்த ஸ்டெல்த் சூரியப் புயல் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால் மனித குலத்திற்கு எதிரியாக இந்த புயல்கள் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்திருக்கின்றனர்.
யோசித்து பாருங்கள் நாம் இன்று பயன்படுத்தும் அனைத்துமே மின்னணு பொருட்கள்தான். அனைத்து மின்னணு பொருட்களையும் சூரிய புயல்கள் செயலிழக்க வைத்துவிடும். வானில் உள்ள செயற்கைக்கோள்கள் தொடங்கி, அணு உலைகளை கட்டுப்படுத்துவது வரை மின்னணு பொருட்களின் உதவி தேவை. இவை செயலிழந்தால் பேராபத்து ஏற்படும். புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய மாதக்கணக்கில் கூட ஆகலாம் என்று சொல்லப்படுகிறது. எனவே சூரிய புயல் விஷயத்தில் விஞ்ஞானிகள் விழிப்புடன் இருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications