சொந்த மக்களுக்கு எதிராகவே.. சிரியா, ஈராக்கை விட அதிக ராணுவ வீரர்களை களமிறக்கிய டிரம்ப்! என்னாச்சு
வாஷிங்டன்: அமெரிக்காவில் டிரம்ப் அரசுக்கு எதிராக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் போராட்டம் வெடித்துள்ளது. நாளுக்கு நாள் போராட்டம் அதிகரித்து வரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்த டிரம்ப் நிர்வாகம் ராணுவத்தைக் களமிறக்கியுள்ளது. இதற்கிடையே ஈராக் மற்றும் சிரியாவுக்கு அனுப்பப்பட்டதை விட அதிக ராணுவ வீரர்களை டிரம்ப் நிர்வாகம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு அனுப்பியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் டிரம்ப் அதிபராகப் பதவியேற்ற உடனேயே குடியேற்ற விதிகளை மிகக் கடுமையாக அமல்படுத்தினார். சட்டவிரோதமாகக் குடியேறியவர்களைக் கைது செய்து நாடு கடத்தினர். நாடு கடத்தல் நடவடிக்கை இடையில் கொஞ்சம் குறைந்திருந்த நிலையில், இப்போது மீண்டும் அதிகரித்துவிட்டது. அங்கு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் எனச் சந்தேகப்படுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

போராட்டம்
இதற்கு எதிராக அங்கு மக்கள் போராட்டமும் வெடித்துள்ளது. ஆனால், டிரம்ப் விடுவதாக இல்லை. தொடர்ந்து அதிக ராணுவ வீரர்களை கலிபோர்னியாவில் குவித்தே வருகிறார். இதற்கிடையே ஈராக் மற்றும் சிரியாவில் அமெரிக்கா அனுப்பிய ராணுவ வீரர்களைக் காட்டிலும் அதிக வீரர்களை, கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் (LA) நகரத்திற்கு அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.
கைது நடவடிக்கை
டிரம்பின் கடுமையான குடியேற்றக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், அத்கு எதிராகவே இந்த போராட்டங்கள் வெடித்துள்ளன. சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருக்கும் புலம்பெயர்ந்தோரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை டிரம்ப் நிர்வாகத்தினர் திடீரென வேகப்படுத்தியுள்ள நிலையில், அதற்கு எதிராக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மிகப் பெரிய மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. அதை கட்டுப்படுத்த சுமார் 4,000 தேசிய காவல்படை வீரர்களும் 700க்கும் மேற்பட்ட ஆக்டிவ் மரைன் வீரர்களும் அமெரிக்காவில் களமிறக்கப்பட்டுள்ளனர்.
ஈராக், சிரியாவை விட அதிகம்
இது தொடர்பாக அமெரிக்காவின் பிரபல ஏபிசி செய்தி நிறுவனம் கூறுகையில், "ஈராக்கில் 2,500 வீரர்களையும் சிரியாவில் 1,500 வீரர்களையும் அமெரிக்கா களமிறக்கியுள்ளது. ஆனால், லாஸ் ஏஞ்சல்ஸ நகரில் அமெரிக்காவில் சுமார் 4,800 வீரர்களை அனுப்பியுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வெடித்துள்ள போராட்டத்தைக் கட்டுப்படுத்த வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ள நிலையில், இதனால் 2 மாதங்களில் 134 மில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் ரூ.1,145 செலவாவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணுவ நடவடிக்கை
அமெரிக்க குடிவரவு அதிகாரிகள் ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரைத் தடுத்து வைக்கத் தொடங்கிய உடன் ஜூன் 6ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் போராட்டம் வெடித்தது. ஜூன் 7ஆம் தேதி மாலை வரை சந்தேகத்தின் பேரில் டிரம்ப் நிர்வாகத்தினர் குறைந்தது 44 பேரைக் கைது செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கொந்தளித்த அமெரிக்க மக்கள் திடீரென போராட்டத்தை ஆரம்பித்தனர். அந்த போராட்டங்கள் திடீரென கலவரங்களாக மாறின. சுமார் 39 லட்சம் மக்கள் வசிக்கும் நகரத்தில் அமைதியின்மை ஏற்பட்டது. இதைக் கட்டுப்படுத்தவே டிரம்ப் அரசு தொடர்ச்சியாக ராணுவ நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கடும் விமர்சனம்
அதேநேரம் கலிபோர்னியா ஆளுநர் கவின் நியூசம், பெடரல் அரசு (அதாவது டிரம்ப் நிர்வாகம்) எடுத்த தேவையில்லாத நடவடிக்கைகளே இந்த கலவரங்களுக்குக் காரணம் எனச் சாடியுள்ளார். மேலும், டிரம்ப் நிர்வாகமே இந்த மோதலை அதிகரித்து வருவதாகவும் விமர்சித்திருந்தார். இது தொடர்பாக கலிபோர்னியா மாகாணம் சார்பில் டிரம்ப் நிர்வாகம் மீது வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
அரசியல் ஆதாயத்திற்காக டிரம்ப் மோதலை அதிகரிக்க முயல்வதாக ஆளுநர் நியூசம் சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "நம் கண்களுக்கு முன்பாகவே ஜனநாயகம் தாக்கப்படுகிறது. கலிபோர்னியாவில் இது ஆரம்பித்து இருக்கலாம். ஆனால் அது இங்கே முடிவடையாது என்பது தெளிவாகிறது" என்று சாடியிருந்தார்,












Click it and Unblock the Notifications