எல்லாம் சரி ஆனா இதுதான் பிடிக்கல! இந்தியா மீது அமெரிக்கா அதிருப்தி... காரணம் என்ன?
வாஷிங்டன்: ‛‛இந்தியா பாதுகாப்பு துறை சார்ந்த தளவாட பொருட்களுக்கு ரஷ்யாவை சார்ந்து இருப்பதை நாங்கள் விரும்பவில்லை. மற்றபடி இந்தியாவுடனான உறவு தொடரும்'' என அமெரிக்காவின் பென்டகன் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி கூறியுள்ளார். இதன்மூலம் ரஷ்யாவுடனான உறவால் இந்தியா மீது அமெரிக்கா அதிருப்தியில் இருப்பது மீண்டும் ஒருமுறை தெளிவாகி உள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இதை கண்டித்து அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இதனால் ரஷ்யாவுக்கும், அந்நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.
ஆனால் உக்ரைன் போர் விவகாரத்தில் இந்தியா நடுநிலைமை வகிக்கிறது. இதற்கு காலம் காலமாக இந்தியாவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே நல்ல நட்பு உள்ளது.

இந்தியா நடுநிலை
மேலும் இந்தியாவின் ராணுவ தளவாடம், பாதுகாப்பு துறைகளுக்கான பெரும்பகுதியை ரஷ்யா தான் வழங்கி வருவதோடு, இந்தியாவுக்கு பிறநாடுகளுக்கு இடையேயான பிரச்சனைகளில் இந்தியாவுக்கு ரஷ்யா தான் பக்கபலமாக இருந்துள்ளது. இதனால் தான் ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டை இந்தியா எடுக்காமல் நடுநிலைமை வகிக்கிறது. இதன் காரணமாக இந்தியா மீது அமெரிக்கா கோபத்தில் உள்ளது. இதை அவ்வப்போது அமெரிக்க பிரதிநிதிகள் வெளிப்படுத்தி வருகின்றனர்.

விரும்பவில்லை
இந்நிலையில் தான் இந்தியா ரஷ்யா உறவு குறித்து அமெரிக்காவின் பென்டகன் செய்தி தொடர்பு செயலாளர் ஜான் கிர்பி பேசியுள்ளார். அவர் கூறியதாவது: "பாதுகாப்பு தேவைகளுக்காக இந்தியா, ரஷ்யாவை நம்பியிருப்பதை நாங்கள் விரும்பவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக இந்தியா உள்பட பிற நாடுகளிடம் தெளிவாக எடுத்து கூறியுள்ளோம். ரஷ்யா உடனான உறவை நாங்கள் ஊக்கப்படுத்தவில்லை.

இந்தியா உறவு தொடரும்
அதே நேரத்தில், நாங்கள் இந்தியாவுடன் வைத்திருக்கும் பாதுகாப்பு கூட்டாண்மையை மதிக்கிறோம். இந்தியா உடனான நல்லுறவு தொடரும். இந்தியா தனது பிராந்தியத்தில் பாதுகாப்பு வழங்கும் நாடாக உள்ளது. இதை நாங்கள் மதிக்கிறோம்'' என்றார். இதுபற்றி அமெரிக்க வெளியுறவுத்துறை ஆலோசகர் டெரெக் சோலெட் கூறுகையில், ‛‛பிடன் நிர்வாகம் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற மிகவும் ஆர்வமாக உள்ளது'' என்றார்.

எஸ் 400 ஏவுகணை
முன்னதாக ரஷ்யாவிடம் இருந்து எஸ் 400 ரக ஏவுகணைகளை ரஷ்யாவிடம் இருந்து வாங்க அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதை மீறிய துருக்கி மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதற்கிடையே தான் 2018ல் இந்தியா தனது வான்வெளி பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கில் எஸ்400 ஏவுகணை வாங்க ரஷ்யாவுடன் 5 பில்லியன் டாலர் அளவுக்கு ஒப்பந்தம் கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தமானது அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எதிர்ப்பை மீறி இந்தியா மேற்கொண்டது. அன்று முதல் இன்று வரை பாதுகாப்பு துறையில் ரஷ்யாவை நம்பி இருக்க வேண்டாம் என இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications