செக் லிஸ்ட்டில் மேலும் 7 நாடுகள்.. வரி அறிவிப்பை வெளியிட்ட டிரம்ப்! இதெல்லாம் இப்போ தேவையா?
வாஷிங்டன்: கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அமெரிக்க டாலரின் மதிப்பு தற்போது சரிந்திருக்கிறது. இதற்கு காரணம் டிரம்பின் வரி விதிப்பு நடைமுறைதான் என்று சொல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில், மீண்டும் 7 நாடுகளுக்கு வரியை விதிப்பதாக டிரம்ப் அறிவித்திருக்கிறார்.
சில நாட்களுக்கு முன்னர் 14 நாடுகளுக்கு டிரம்ப் வரி தொடர்பாக கடிதத்தை அனுப்பியிருந்தார். அதில், ஆகஸ்ட் 1 முதல் பரஸ்பர வரிகள் அமலுக்கு வரும் என்றும், இதற்கு பின்னர் எந்த கால நீட்டிப்பும் செய்யப்படாது என்றும் கூறியிருந்தார். ஜப்பான் மற்றும் தென்கொரியாவுக்கு அனுப்பப்பட்ட கடிதங்களில், ஆகஸ்ட் 1 முதல் 25 சதவிகித வரி விதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

தாய்லாந்து மற்றும் கம்போடியா தலா 36 சதவிகித வரியை எதிர்கொள்ளும். வங்காளதேசம் மற்றும் செர்பியா தலா 35 சதவிகித வரியைச் சந்திக்கும் என்றும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், "மலேசியா மற்றும் கஜகஸ்தான் தலா 25 சதவிகித வரியை சந்திக்கும். மியான்மர் மற்றும் லாவோஸ் ஆகிய நாடுகளில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 40 சதவிகித வரி விதிக்கப்படும். இந்தோனேசியா 32 சதவிகித வரியை எதிர்கொள்ளும். தென்னாப்பிரிக்கா மற்றும் போஸ்னியா-ஹெர்சகோவினாவில் இருந்து வரும் பொருட்கள் 30 சதவிகித இறக்குமதி வரியை சந்திக்கும்" என்று கடிதங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இப்படி இருக்கையில், இந்த பட்டியலில் மேலும் 7 நாடுகள் இணைக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்திருக்கிறார். இந்த வரி அறிவிப்பு மேலோட்டமாக பார்த்தால் சரி என்பதை போலத்தான் தெரியும். ஆனால், இந்த வரியால் மற்ற நாடுகள் மட்டுமல்லாது அமெரிக்காவே கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக புள்ளிவிரவங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவும் கூட இந்த வரியால் மறைமுறைமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. சீனாவுக்கு வரியை போட்டதால், சீனாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் அரிய காந்தங்கள் மற்றும் அரிய கனிமங்கள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இதையே நம்பியிருந்த இந்திய ஆட்டோமொபைல் துறைக்கு இது மிகப்பெரிய அடி. அநேகமாக இந்த மாதம் இறுதிக்குள் இந்திய ஆட்டோமொபைல் துறை உற்பத்தியை நிறுத்திவிடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இப்படியான பாதிப்பை சரி செய்ய வேண்டும் எனில், வரி அச்சுறுத்தல் இருக்கக்கூடாது. சமீபத்தில் பிரேசிலில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் கூட இந்த விவகாரம் தொடர்பாக விரிவாக பேசப்பட்டிருக்கிறது. இதற்கான பிரகடனத்தில் இந்தியாவும் கையெழுத்திட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பரஸ்பர வரி என்றால் என்ன?
இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு செல்லும் பொருட்களுக்கு இறக்குமதி வரி விதிக்கப்படும். இந்த வரி உயர்த்தப்பட்டால் அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் இந்திய பொருட்களின் விலை உயரும். இதனால் விற்பனை பாதிக்கப்படும். இந்திய ரூபாயின் மதிப்பும், அமெரிக்க டாலரின் மதிப்பும் சரி சமாக கிடையாது. எனவே இதனை ஈடு செய்ய அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிக வரியை விதிக்கிறது. இது இயல்பானதுதான். ஆனால் அமெரிக்காவும் இப்படி அதிகரி வரியை போடுவோம் என்று சொல்வதுதான் பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்த காரணமாக இருக்கிறது.
இந்த வரிக்கு எதிராக தற்போது பிரிக்ஸ் நாடுகள், தனி கரன்சியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றன. அதாவது பிரிக்ஸ் கரன்சி மூலம் டாலர் மதிப்பு வீழ்ச்சியடைந்தால், என்ன வரி போட்டாலும் உலக நாடுகள் அதைப்பற்றி கவலைப்பட தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications