"அமெரிக்காவுக்கே பேராபத்து.." டிரம்ப் சொன்ன பாயிண்ட்.. ரெசிப்ரோகல் வரி மீதான தடை ஒரே நாளில் நீக்கம்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் உலக நாடுகள் மீது கடந்த ஏப்ரல் மாதம் ரெசிப்ரோக்கல் வரியை விதித்திருந்தார். அந்த ரெசிப்ரோக்கல் வரிக்கு எதிரான வழக்கில் வரிகளுக்குத் தடை விதித்து அமெரிக்க வணிக நீதிமன்றம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தீர்ப்பளித்து இருந்தது. அதற்கு எதிராக டிரம்ப் நிர்வாகம் மேல்முறையீடு செய்த நிலையில், அதை ஏற்று டிரம்ப் வரிகள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபரான டிரம்ப் பொருளாதாரத்தை மேம்படுத்துகிறேன் எனச் சொல்லி இஷ்டத்திற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அவர் கடந்த ஏப்ரல் மாதம் உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு ரெசிப்ரோக்கல் வரியை அறிவித்தார். அதாவது ஒரு நாடு அமெரிக்கா மீது எவ்வளவு வரி விதிக்குமோ.. அதே அளவுக்கு அந்த நாட்டின் மீதும் வரிகளை விதிப்பதே ரெசிப்ரோக்கல் வரியாகும்.

ரெசிப்ரோக்கல் வரி
இந்தியா உட்பட அனைத்து நாடுகளுக்கு எதிராகவும் ரெசிப்ரோக்கல் வரியை அறிவித்தார். இருப்பினும், அவரே சில நாட்களில் அந்த வரியை 90 நாட்கள் நிறுத்தி வைப்பதாகவும் அறிவித்தார். ஆனால், அதை அவர் முழுமையாக ரத்து செய்யவில்லை. 90 நாள் என்றால் ஜூன் இறுதி வரை மட்டுமே, அது நிறுத்தி வைக்கப்படுகிறது. பிறகு மீண்டும் ரெசிப்ரோக்கல் வரி பஞ்சாயத்து வந்துவிடும்.
இதற்கிடையே டிரம்ப்பின் ரெசிப்ரோக்கல் வரிக்கு எதிராக வர்த்தக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் டிரம்ப் தனது அதிகாரத்தை மீறிச் செயல்பட்டதாகக் கூறி நீதிமன்றம் தடை விதித்தது. இதற்கு எதிராக டிரம்ப் நிர்வாகம் பெடரல் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த நீதிமன்றம் டிரம்பின் பெரும்பாலான வரி உத்தரவுகள் மீதான தடையை நீக்கியுள்ளது.
தடை நீக்கம்
வரிகள் விவகாரம் தேசிய பாதுகாப்பிற்குத் தொடர்புடையது என டிரம்ப் நிர்வாகம் மேல்முறையீடு செய்த நிலையில், அந்த மேல்முறையீட்டு மனுவில் தான் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக ஜூன் 5ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு வரிகளுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தோருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல டிரம்ப் நிர்வாகமும் ஜூன் 9க்குள் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. கீழமை நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால்.. டிரம்ப் அறிவித்த வரிகள் மீண்டும் அமலுக்கு வருகிறது.
டிரம்ப் தரப்பு வாதம்
முன்னதாக கீழமை நீதிமன்றம் டிரம்ப் வரிகளை நிறுத்தி வைக்க உத்தரவிட்டபோது அதிபர் டிரம்ப் அதற்கு மிகக் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தார். வர்த்தக நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகவும் தவறானது அரசியல் பக்கச்சார்பு கொண்டது எனக் கண்டனம் தெரிவித்தார். அதேநேரம் உச்ச நீதிமன்றம் இந்த நாட்டை பாதுகாக்க உரிய முடிவை எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
விரைவில் வர்த்தக ஒப்பந்தங்கள்
ரெசிப்ரோக்கல் வரி வேண்டாம் என நினைக்கும் உலக நாடுகள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வர்த்தக ஒப்பந்தங்களைப் போடும் என்பதே டிரம்பின் எண்ணம். அதற்கேற்ப பிரிட்டன் முதல் நாடாக வர்த்தக ஒப்பந்தங்களைப் போட்டுள்ளன. வேறு சில நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. அடுத்த ஓரிரு வாரங்களில் பல முக்கிய வர்த்தக ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்படும் என்றே வெள்ளை மாளிகையின் பொருளாதார ஆலோசகர் கெவின் ஹாசெட் தெரிவித்துள்ளார்.
விரைவில் 3 முக்கிய நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என அவர் குறிப்பிட்டார். இருப்பினும், எந்த நாடுகள் என்பதை அவர் குறிப்பிடவில்லை. மேலும், எப்போது வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும்.. எந்த முக்கிய தலைவர் அமெரிக்காவுக்கு வருகிறார் என்பது போன்ற கேள்விகளுக்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.












Click it and Unblock the Notifications