US Tariff: இந்தியாவுக்கான வரி விதிப்பால் கடும் கோபம்.. டிரம்பை எச்சரித்த அமெரிக்கா நாடாளுமன்ற வெளியுறவு குழு
வாஷிங்டன்: இந்தியா மீது 50 சதவீத வரிகளை விதிக்கும் டிரம்பின் முடிவுக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் வெளியுறவு குழுவில் இடம்பெற்றிருப்பவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்தியாவை சீண்ட வேண்டாம். இந்தியாவுடனான உறவை சீர்க்குலைக்க வேண்டாம் என்று டிரம்புக்கு தெரிவித்துள்ளனர். இது டிரம்புக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து நம் நாடு கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. இதனால் கோபமான டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரிகளை விதித்துள்ளார். இதில் 25 சதவீத வரி நடைமுறைக்கு வந்துள்ளது. அடுத்த 25 சதவீத வரி இன்னும் 19 நாட்கள் கழித்து அமலுக்கு வர உள்ளது. டிரம்பின் இந்த வரி விதிப்பு நம் நாட்டுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்து.

இதனால் இந்த வரி விதிப்பை நம் நாடு கடுமையாக எதிர்த்துள்ளது. இருப்பினும் டிரம்பின் முடிவு இதுதான் என்றால் தேச நலன்களுக்கான பணிகளை தொடர்ந்து முன்னெடுப்போம். எத்தகைய சவால்களையும் சந்திக்க தயார் என்று மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இருப்பினும் டிரம்ப் திருந்தவில்லை. இன்னும் கூட தொடர்ந்து 2ம் கட்ட தடைகள் விதிக்கப்படும். வரும் நாட்களில் இதுபற்றி அறிவிப்பு வெளியிடப்படும் என்று நம் நாட்டை மிரட்டி உள்ளார்.
இந்தியா உறவை சீர்க்குலைக்காதீங்க
இந்நிலையில் தான் தற்போது டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு அமெரிக்காவில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. டிரம்பின் ஆளும் கட்சியான குடியரசு கட்சி மற்றும் எதிர்க்கட்சியான ஜோ பைடனின் ஜனநாயக கட்சிகளை சேர்ந்த பல எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக தான் அமெரிக்க நாடாளுமன்றத்தின் வெளியுறவு குழுவில் உள்ளவர்கள் டொனால்ட் டிரம்ப்பின் வரி விதிப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்த வெளியுறவு குழு தான் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை மற்றும் சர்வதேச உறவுகளை மேற்பார்வையிட்டு வரும் நிலையில் அதில் இருப்பவர்கள் இந்தியாவுக்கான வரி விதிப்பை எதிர்த்துள்ளன. அதோடு இந்தியா உடனான உறவு முக்கியம். அதனை சீர்குலைக்க வேண்டாம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
என்ன சொல்கிறார்கள்?
இதுபற்றி அவர்கள், ‛‛இந்தியாவுக்கான வரி விதிப்பு சரியானதாக தெரியவில்லை. இது இந்தியாவை சீனாவை நோக்கி தள்ளிவிடும். கடந்த 20 ஆண்டுகளாக இந்தியா - அமெரிக்கா உறவு வளர்ந்து வருகிறது. அது சீர்குலைந்து விடும். அதுமட்டுமின்றி ஆசியா உடனான வளர்ந்து வரும் அமெரிக்க பொருளாதாரத்துக்கு ஆபத்தை விளைவிக்கலாம். இந்தியா என்பது வருங்காலத்தில் உலகின் முக்கியமான நாடாக மாறும். இப்படியான நேரத்தில் அமெரிக்கா - இந்தியா இடையேயான விரிசல் சரியானதாக இருக்காது'' என்றும் கூறியுள்ளனர்.
ஜனநாயக கட்சி எம்பி கேள்வி
இதுதொடர்பாக அந்த குழுவில் உள்ள ஜனநாயக கட்சி (ஜோபைடன் கட்சி) எம்பி கிரிகோரி மீக்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். இவர் 1998 முதல் நியூயார்க்கைச் சேர்ந்த ஜனநாயகக் கட்சியின் எம்பியாக இருக்கும் நிலையில் அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛டிரம்பின் சமீபத்திய வரி வெறி, வலுவான அமெரிக்க-இந்தியா கூட்டாண்மையை உருவாக்க பல ஆண்டுகளாக மேற்கொண்டு வரும் உழைப்புக்கு அபாயத்தை ஏற்படுத்துகிறது.இருநாடுகள் இடையேயான ஆழமான தூதரக, பொருளாதார மற்றும் மக்களுக்கு இடையேயான உறவுகள் உள்ளன. நமது ஜனநாயக மதிப்புகளுக்கு இணங்க பரஸ்பர மரியாதைக்குரிய முறையில் பிரச்சனைகளை தீர்க்கப்பட வேண்டும்" என்று கூறியுள்ளார்.
டிரம்ப் கட்சியினர் எதிர்ப்பு
அதேபோல் குடியரசு கட்சியை(டிரம்ப் கட்சி) சேர்ந்த முன்னாள் அமெரிக்க தூதரும், ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான மைக்கேல் மெக்ஃபால், ‛‛"இந்தியா ரஷ்ய எண்ணெயை இறக்குமதி செய்வதால் டிரம்ப் இந்தியப் பொருட்களுக்கு கூடுதலாக 25% வரியை விதிப்பது ஏன்? சீனா ரஷ்ய கச்சா எண்ணெயை அதிகமாக வாங்குகிறது. சீனப் பொருட்களுக்கு டிரம்ப் வரி விதிக்காதது ஏன்? டிரம்ப் நிர்வாகத்தில் உள்ள யாரிடமாவது விளக்கம் கேட்க முடியுமா?'' என கேள்வி எழுப்பி சீண்டி உள்ளார்.
நிக்கி ஹேலே கருத்து
முன்னதாக குடியரசு கட்சியின் சீனியர் தலைவர்களில் ஒருவரும், டிரம்புக்கு பதில் தங்கள் கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிட முயன்றவருமான நிக்கி ஹேலே, ‛‛ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்க கூடாது. ஆனால் சீனா ரஷ்யா மற்றும் ஈரானிடம் (அமெரிக்காவின் இன்னொரு எதிரி நாடு..
ஈரான் மீதும் அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது) இருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் வாங்குகிறது. ஆனால் சீனா மீதான வரி விதிப்பு 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விஷயத்தில் சீனாவுக்கு அனுமதி கொடுத்துவிட்டு இந்தியா போன்ற நம்முடன் நல்ல நட்பில் உள்ள நாட்டின் உறவை தீயிட்டு எரிக்க வேண்டாம்'' என்று விமர்சனம் செய்திருந்தார்.
அமெரிக்காவை எடுத்து கொண்டால் ஜனநாயக கட்சி, குடியரசு கட்சி தலைவர்கள் எப்போது தனிதனிப்பாதைகளில் பயணிப்பார்கள். ஆனால் தற்போது டிரம்பின் வரி விதிப்பு என்பது இருகட்சி தலைவர்களை ஒன்று சேர வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications