இந்தியா மீதான 25% வரியை குறைக்கும் டிரம்ப்.. அமெரிக்கா சொன்ன குட்நியூஸ்.. காரணம் இதுதான்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரியை விதித்துள்ளார். இந்நிலையில் தான் இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட வரியில் 25 சதவீதத்தை குறைக்க அமெரிக்கா பரிசீலனை செய்து வருவதாக டொனால்ட் டிரம்பின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள கருவூல துறை அமைச்சர் ஸ்காட் பெசன்ட் கூறியுள்ளார். இதன் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரியை விதித்துள்ளார். அமெரிக்காவுடனான வர்த்தக பற்றாக்குறையை சுட்டிக்காட்டி 25 சதவீதமும், அதன்பிறகு ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை சுட்டிக்காட்டி தனியாக 25 சதவீதம் என்று மொத்தம் 50 சதவீத வரியை விதித்தார்.
இதனால் இருநாடுகளுக்கும் இடையேயான உறவில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதோடு நம் நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நம் நாட்டின் வர்த்தகர்கள் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் தான் இந்தியா மீதான வரியை 25 சதவீதம் வரை குறைக்க பரிசீலனை செய்வதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அதிபர் டொனால்ட் டிரம்ப் அமைச்சரவையில் கருவூல துறை அமைச்சராக ஸ்காட் பெசன்ட் உள்ளார். இந்தியாவுக்கான வரி குறைப்பை அவர் உறுதி செய்துள்ளார். இதுபற்றி ஸ்காட் பெசன்ட் கூறியதாவது:
‛‛இந்தியா மீது அமெரிக்கா 2 கட்டங்களாக இந்த வரியை விதித்தது. வர்த்தக பற்றாக்குறைக்கு 25 சதவீதம், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால் 25 சதவீதம் என 50 சதவீத வரியை விதித்தார். இதில் 25 சதவீதத்தை குறைக்க அமெரிக்கா பரிசீலனை செய்து வருகிறது. சமீப மாதங்களாக இந்தியா, ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை கணிசமாக குறைத்துள்ளது. இதுதான் வரி குறைப்பு தொடர்பான பரிசீலனைக்கு முக்கிய காரணம்.
ரஷ்யா உடனான கச்சா எண்ணெய் வர்த்தகத்தை குறிவைத்து அமெரிக்கா போட்ட 25 சதவீத வரி பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இதனால் தான் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்துள்ளது. வரிகள் இன்னும் நடைமுறையில் உள்ளது. இப்போது அந்த 25 சதவீத வரியை முடிவுக்கு கொண்டு வர வழி பிறந்திருக்கிறது. ஏனென்றால் வரி குறைப்பு செய்வதற்கான சூழலை இந்தியா உருவாக்கி உள்ளது'' என்றார்.
இது சாத்தியமாகும் பட்சத்தில் அமெரிக்கா - இந்தியா இடையேயான வர்த்தகம் மீண்டும் அதிகரிக்கும். நம் நாட்டின் வர்த்தகர்களும் கூடுதல் பலன் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications