சீனாவுக்கு அருகே செல்லும்போது.. அடுத்தடுத்து சரிந்த அமெரிக்க போர் விமானங்கள்.. உச்சக்கட்ட பதற்றம்!
வாஷிங்டன்: அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே மோதல் நிலவி வருவது எல்லாருக்கும் தெரியும். இரு நாடுகளும் ஆயுதத்தை எடுத்து சண்டை போடவில்லை என்றாலும் கடுமையான பொருளாதார மோதல் இருந்தே வருகிறது. இதற்கிடையே இந்தத் தென்கிழக்கு சீனக் கடலில் அடுத்தடுத்து இரு அமெரிக்கப் போர் விமானங்கள் விபத்தில் சிக்கியுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
உலகின் பெரும்பகுதி தண்ணீரால் ஆனது என்பதால்.. பல்வேறு நாடுகளைச் சுற்றியும் கடலே இருக்கிறது. தனது நாட்டின் அருகே கடல் இருப்பதாலேயே அந்த ஒட்டுமொத்தக் கடலையும் எந்தவொரு நாடும் உரிமை கோர முடியாது. சர்வதேச விதிகளின்படியே கடலில் எந்தளவுக்கு உரிமை இருக்கிறது என்பதை ஒரு நாடு கோர முடியும்.

அடுத்தடுத்து விபத்து
இருப்பினும், தென் சீனக் கடல் முழுவதும் தனக்கே சொந்தம் சீனா தான் உரிமை கோரி வருகிறது. இதற்கிடையே இந்த தென் சீனக் கடலில் அடுத்தடுத்து இரு அமெரிக்கப் பாதுகாப்புப் படை விமானங்கள் விபத்தில் சிக்கியுள்ளது. அமெரிக்கக் கடற்படையின் யு.எஸ்.எஸ் நிமிட்ஸ் விமானம் தாங்கி கப்பலில் இருந்து புறப்பட்ட ஒரு போர் விமானமும், ஒரு ஹெலிகாப்டரும் அடுத்தடுத்து விபத்தில் சிக்கியுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இந்த விபத்து நடந்துள்ளது. 30 நிமிட இடைவெளியில் விமானமும், ஹெலிகாப்டரும் விபத்துக்குள்ளானதாக அமெரிக்கக் கடற்படை தெரிவித்துள்ளது.
அமெரிக்கக் கடற்படை
விபத்தில் சிக்கிய MH-60R சீ ஹாக் ஹெலிகாப்டரில் இருந்த மூன்று அமெரிக்கக் கடற்படை வீரர்கள், F/A-18F சூப்பர் ஹார்னெட் போர் விமானத்தில் இருந்த இரண்டு விமானிகள் என ஐந்து பேரும் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர்கள் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அமெரிக்கக் கடற்படை கூறியுள்ளது.
அடுத்தடுத்து 30 நிமிட இடைவெளியில் இரு விபத்துகள் நடக்க என்ன காரணம் என்பது குறித்துத் தெளிவாகத் தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக அமெரிக்கக் கடற்படை கூறியுள்ளது.
மத்திய கிழக்கு
மத்தியக் கிழக்கில் மோதல் நிலவி வந்த நிலையில், கடந்தாண்டு முதலே ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அங்கு அடாவடி செய்து வந்தனர். அந்த வழியாகச் செல்லும் வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வந்தனர். அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா தனது நிமிட்ஸ் விமானம் தாங்கி போர்க் கப்பலை அங்கு அனுப்பி இருந்தது. பல மாதங்கள் நிமிட்ஸ் போர் கப்பல் அங்கேயே நின்று ரோந்துப் பணிகளை மேற்கொண்டது.
இப்போது மத்திய கிழக்கில் போர் முடிந்துவிட்ட நிலையில், அங்கு அமைதி திரும்பி வருகிறது. இதையடுத்து நிமிட்ஸ் போர் கப்பல் அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள கிட்சாப் கடற்படைத் தளத்திற்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது. துறைமுகத்திற்குத் திரும்பிய பிறகு அந்தக் கப்பலுக்கு நிரந்தரமாக ஓய்வு பெற உள்ளது. இந்தச் சூழலில் தான் தென் சீன கடலில் அசம்பாவிதங்கள் நடந்துள்ளன.
தொடரும் விபத்துகள்
முன்னதாக மற்றொரு விமானம் தாங்கி கப்பலான யு.எஸ்.எஸ் ஹாரி எஸ். ட்ரூமன் கப்பல் சமீபத்தில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பப்பட்டபோது, அங்கு அது தொடர்ச்சியாக விபத்துக்களைச் சந்தித்தது. கடந்த டிசம்பரில், முதலில் ஒரு சிறு விபத்து நடந்தது. பிறகு கடந்த ஏப்ரலில் விமானம் தாங்கி போர் கப்பலில் நிறுத்தப்பட்ட F/A-18 போர் விமானம் செங்கடலில் விழுந்தது.
அதேபோல கடந்த மே மாதம் F/A போர் விமானம் தரையிறங்கும் போது, வேகத்தைக் குறைக்க முடியாததால் அதுவும் செங்கடலில் விழுந்தது. இந்தச் சம்பவங்களில் யாரும் உயிரிழக்கவில்லை என்றாலும் அமெரிக்கக் கடற்படைகளில் தொடரும் இதுபோன்ற விபத்துகள் கவலையை ஏற்படுத்துவதாக இருக்கிறது. இந்த விபத்துகள் குறித்து துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டுள்ள போதிலும், அவை இன்னும் வெளியிடப்படவில்லை.












Click it and Unblock the Notifications