இந்தியாவுக்கு தான் ஆபத்து.. "250% வரி" விதிப்பாம்.." டிரம்ப் சொன்ன அந்த வார்த்தை ரொம்ப ரிஸ்க் ஆச்சே
வாஷிங்டன்: இந்திய மருத்துவ நிறுவனங்களுக்கு அமெரிக்கா மிக முக்கிய மார்கெட்டாக கொண்டிருக்கிறது. இப்போது மருத்துவ துறைக்கு டிரம்ப் நிர்வாகம் வரிகளில் இருந்து விலக்கு அளித்தாலும் சில வாரங்களில் அதற்கும் வரியை அறிமுகப்படுத்த டிரம்ப் திட்டமிட்டுள்ளார். இது இந்திய மருத்துவ நிறுவனங்களுக்கு மிகப் பெரிய சிக்கலாக இருக்கும் என அஞ்சப்படுகிறது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் இப்போது உலக நாடுகள் மீது இஷ்டத்திற்கு வரிகளை அறிவித்து வருகிறார். அமெரிக்கா உடன் வர்த்தக ஒப்பந்தம் எட்டாத நாடுகள் மீது வரிகளை அறிவிப்பேன் என டிரம்ப் கூறியிருந்தார். இந்தியாவுக்கு ஏற்கனவே அவர் 50% வரிகளை அறிவித்துவிட்டார். அதில் 25% வரி ஏற்கனவே நடைமுறைக்கு வந்துவிட்ட நிலையில், மீதமுள்ள 25% வரி இந்த மாத இறுதியில் அமலுக்கு வருகிறது.

மருந்து துறை
டிரம்பின் இந்த முதற்கட்ட வரி விதிப்பில் மருந்து நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. மருந்துகள் அமெரிக்க ஹெல்த்கேர் துறையில் முக்கிய அங்கம் வகிக்கிறது. இதனால் திடீரென வரி விதித்து அதன் இறக்குமதி பாதிக்கப்பட்டால் அது அமெரிக்க மக்களுக்கே பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் மருந்துகளுக்கு வரிகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே இது தொடர்பாக முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது மருந்துப் பொருட்கள் இறக்குமதி விதிப்பது தொடர்பாகவும் துறை வாரியாக வரி விதிப்பது தொடர்பாகவும் டிரம்ப் அரசு ஆலோசித்து வருகிறதாம். டிரம்ப் இப்போது அலாஸ்காவில் புதின் உடனான மீட்டிங்கிற்கு ரெடியாகி வரும் சூழலில், அதன் பிறகே இதில் கவனம் செலுத்தவுள்ளதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தத் தாமதம் இந்தியாவுக்கு நல்ல செய்தியாக இருந்தாலும் இது எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது தெளிவாக தெரியவில்லை.
இந்திய நிறுவனங்கள்
அமெரிக்க மருந்து சந்தையைப் பொறுத்தவரை அதில் இந்திய நிறுவனங்களுக்கு மிக முக்கிய பங்கு இருக்கிறது. ஜெனரிக் மருந்து துறையில் கிட்டத்தட்ட 40% இந்திய நிறுவனங்கள் வசமே இருக்கிறது. சன் பார்மா, டாக்டர் ரெட்டி, சிப்லா என பல நிறுவனங்களுக்கு அமெரிக்கா பிரதான மார்கெட்டாக இருக்கிறது. இந்தச் சூழலில் வரும் வாரங்களில் டிரம்ப் அரசு இந்தத் துறையில் வரி விதித்தால் அது இந்திய நிறுவனங்களுக்குப் பெரிய பாதிப்பாகவே இருக்கும்.
முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட் லட்னிக் சில முக்கிய கருத்துகளைக் கூறியிருந்தார். அதாவது வெளிநாட்டு மருந்து உற்பத்தி நிறுவனங்களைச் சார்ந்திருப்பது அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து ரிப்போர்ட்டை சமர்ப்பிக்கவுள்ளதாகக் கூறியிருந்தார். அந்த ரிப்போர்ட்டை பொறுத்தே டிரம்ப் அரசு முடிவுவெடுக்கும் என்பதால் அதன் முடிவுகள் முக்கியத்துவம் பெறுகிறது.
250% வரி
மருந்து துறைக்கான வரியில் டிரம்ப் கூறியுள்ள விஷயங்கள் தான் பகீர் கிளப்புவதாக இருக்கிறது. அதாவது மருந்து துறைகளுக்கு ஆரம்பத்தில் குறைவான வரி விதிக்கப்பட்டாலும் இது 250% வரை உயரக்கூடும் என டிரம்ப் எச்சரித்திருந்தார். மருந்து நிறுவனங்கள் அமெரிக்காவில் உற்பத்தியை அதிகரிக்கக் கால அவகாசம் கொடுக்கப்படும் என்ற டிரம்ப், வெளிநாட்டில் இருந்து மருந்துகளை இறக்குமதி செய்வதைக் குறைக்க வரிகள் உயர்த்தப்படும் என கூறியிருந்தார்.
இருப்பினும், இந்த வரிகள் அமலுக்கு வரச் சில வாரங்களாவது ஆகும் என்று வெள்ளை மாளிகை செயல்பாடுகள் குறித்து அறிந்த ஒரு ஐரோப்பிய அரசின் அதிகாரி தெரிவித்தார். முன்பே குறிப்பிட்டது போல வெளிநாடுகளை மருந்துகளுக்கு நம்பி இருப்பது அமெரிக்க தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்தானதா என்பது குறித்து டிரம்ப் அரசு விசாரித்து வருகிறது. இந்த விசாரணை முடிய இன்னும் சில வாரங்கள் ஆகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதுவரை மருந்துத் துறைக்கு டிரம்ப் வரிகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு சிக்கல்
செமி கண்டெக்டர் குறித்தும் இதுபோல விசாரணை நடக்கும் நிலையில், அதன் ரிப்போர்ட் முதலில் வெளியாகும். அதைத் தொடர்ந்து மருந்துத் துறைக்கான ரிப்போர்ட் வெளியாகும். அதை வைத்து டிரம்ப் நிர்வாகம் அதிக வரிகளை விதித்தால் அது இந்திய நிறுவனங்களுக்குப் பெரிய இழப்பாகவே இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.












Click it and Unblock the Notifications