இந்தியா மீது மட்டும்தான் வன்மம்... ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க ஹங்கேரிக்கு அனுமதி தந்த டிரம்ப்
வாஷிங்டன்: ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதாக கூறி நம் நாட்டுக்கு டிரம்ப் 25 சதவீத வரிகளை விதித்தார். ஆனால் ஹங்கேரி நாடு தொடர்ந்து ரஷ்யாவின் கச்சா எண்ணெய், கியாஸை வாங்கி பயன்படுத்தலாம். அமெரிக்காவின் தடையில் இருந்து ஹங்கேரிக்கு விலக்கு அளிக்கப்படுகிறது என்று டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இது டிரம்பின் இந்திய மீதான வன்மத்தை காட்டும் வகையில் அமைந்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகையில் அதிபர் டொனால்ட் டிரம்பை, ஹங்கேரி நாட்டின் பிரதமர் விக்டர் ஓர்பன் சந்தித்து பேசினார். அப்போது இருநாடுகளுக்கு இடையேயான உறவு பற்றி விவாதிக்கப்பட்டது.
இந்த நாடும், நம் நாட்டை போல் ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் வாங்கி பயன்படுத்தி வருகிறது. கச்சா எண்ணெய் மட்டுமின்றி கியாசும் வாங்கி வருகிறது.

ரஷ்யாவிடம் வாங்கினால் தண்டனை
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை பொறுத்தவரை உக்ரைன் போருக்கு ரஷ்யா தனது கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் கிடைக்கும் பணத்தை தான் பயன்படுத்துகிறது என்ற நிலைப்பாட்டில் உள்ளது.
இதனால் ரஷ்யாவிடம் எந்த நாடுகளும் கச்சா எண்ணெய் வாங்க கூடாது என்று கூறி வருகிறது. மேலும் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளை தண்டித்து வருகிறார். அந்த வகையில் நம் நாட்டின் மீது டிரம்ப் 50 சதவீத வரிகளை விதித்தார். இதில் 25 சதவீத வரி என்பது ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை சுட்டிக்காட்டி அவர் விதித்திருந்தார்.
ரஷ்யாவுக்கு கூடுதல் அழுத்தம்
அதேவேளையில் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் சீனாவை அவர் தண்டிக்கவில்லை. இதனால் இந்தியா மீதான வன்மத்தை தான் டிரம்ப் காட்டுவதாக நிபுணர்கள் கூறியிருந்தனர். மேலும் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை டிரம்ப் அதிகரித்தார். அதுமட்டுமின்றி ரஷ்யாவின் முக்கிய கச்சா எண்ணெய் நிறுவனங்களான ரோஸ்நெஃப்ட் மற்றும் லுகோயில் உள்ளிட்ட நிறுவனங்கள் மீது பொருளாதார தடைகளை விதித்தார்.
இதனால் அந்த நிறுவனங்களில் இருந்து கச்சா எண்ணெய் வாங்க முடியாத நிலை உருவாகி உள்ளது. மீறி வாங்கினால் அமெரிக்காவின் பொருளாதாத தடைகளை எதிர்கொள்ள நேரிடும். இது பல நாடுகளுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
ஹங்கேரிக்கு விலக்கு
இப்படியான சூழலில் தான் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் ஹங்கேரிக்கு டிரம்ப் ஆதரவு தெரிவித்துள்ளார். அதோடு ஹங்கேரி தொடர்ந்து ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய், கியாஸ் வாங்கி கொள்ளலாம். ஹங்கேரிக்கு எந்த தண்டனையும் வழங்கப்படாது என்று அவர் கூறியுள்ளார்.
வெள்ளை மாளிகையில் டிரம்ப் மற்றும் ஹங்கேரி பிரதமர் விக்டர் ஓர்பன் சந்தித்தனர். அதன்பிறகு டிரம்ப் இதனை உறுதி செய்தார். இதுபற்றி டிரம்ப் கூறுகையில், ‛‛ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் கியாஸ் வாங்கும் நாடுகள் மீதான தடைகளில் இருந்து ஹங்கேரிக்கு நாங்கள் விலக்கு அளிக்கிறோம்.
ஹங்கேரியின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இதனை செய்கிறோம். ஐரோப்பிய நாடுகளில் கடல் உள்ளது. இதனால் கியாஸ் கடல் வழியாக செல்கிறது. ஆனால் ஹங்கேரிக்கு அப்படியான வசதிகள் இல்லை. இதனால் ஹங்கேரிக்கு விலக்கு அளிக்கப்படுகிறது'' என்று கூறினார்.
இந்தியா மீது மட்டும் வன்மம்
ஏற்கனவே ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் சீனாவை டிரம்ப் சீண்டவில்லை. இப்போது ஹங்கேரிக்கு அனுமதி வழங்கி உள்ளார். ஆனால் நம் நாட்டுக்கு மட்டும் 25 சதவீத வரிகளை விதித்துள்ளார். இதனால் ரஷ்யா கச்சா எண்ணெய் விவகாரத்தில் டிரம்ப் நம் நாட்டை மட்டும் தான் குறிவைக்கிறார் என்று சர்வதேச அரசியல் வல்லுநர்கள் சொல்கின்றனர்.












Click it and Unblock the Notifications