அமெரிக்கா ஜனநாயக கட்சியின் மாநாடு.. கமலா ஹாரிஸ்க்கு இன்று முக்கியமான நாள்! கூட்டத்தில் ஒரே பரபரப்பு
வாஷிங்டன்: அமெரிக்கா அதிபர் தேர்தல் களம் அனல் பறக்கும் நிலையில் ஜனநாயக கட்சியின் மாநாடு தொடங்கியுள்ளது. இந்தக் கூட்டத்தில் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் முறைப்படி அறிவிக்கப்பட இருக்கிறார். கூட்டம் நடைபெற்று கொண்டிருக்கும் போதே நூற்றுக்கணக்கான காசா ஆதரவாளர்கள் திடீரென உள்ளே நுழைய முயன்றது சிறிது பரபரப்பை ஏற்படுத்தியது.
அமெரிக்காவில் வரும் நவம்பர் 5 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் குடியரசுக்கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பும் ஜனநாயக கட்சி சார்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும் தற்போதைய துணை அதிபருமான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் முதலில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் போட்டியிடுவதாக இருந்தது.

டொனால்டு டிரம்ப் உடனான பிரசாரத்தில் தடுமாறியது உள்ளிட்ட காரணங்களால் அவர் போட்டியிட எதிர்ப்புகள் வலுத்தன. இதையடுத்து திடீரென அதிபர் ரேசில் இருந்து விலகுவதாக அறிவித்த ஜோ பைடன், கமலா ஹாரிசுக்கு வழிவிட்டார். இந்த நிலையில், அமெரிக்காவில் ஜனநாயக கட்சியின் 4 நாள் மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்தக் கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்படுகிறார். இந்தக் கூட்டத்தில் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கிறார்கள். குடியரசு கட்சியினர் மில்வாக்கியில் தங்கள் மாநாட்டை நடத்தியது. இந்த மாநாடு முடிந்த பிறகு சுமார் , ஒரு மாதத்திற்கு பிறகு ஜனநாயக கட்சியின் மாநாடு கூடியுள்ளது. இந்தக் கூட்டத்தில் அமெரிக்க முன்னாள் அதிபர்களான பராக் ஒபாமா, பில் கிளிண்டன் ஆகியோரும் பேச உள்ளனர்.
தற்போதைய அதிபராக இருக்கும் ஜோ பைடன் தனது ஃபேர்வேல் உரையை நிகழ்த்துகிறார். அமெரிக்க முன்னாள் வெளியுறவு செயலர் ஹிலாரி கிளிண்டன் பேசினார். அப்போது, அடுத்த 78 நாட்கள் நாம் கடுமையாக உழைக்க வேண்டும். நமது நாட்டின் சட்டத்திற்கும் வாழ்க்கை முறைக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது கூட்டாளிகளை வீழ்த்த வேண்டும்" என்றார்.
இந்தக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டு இருந்த போதே காசா ஆதரவாளர்கள் கூட்டம் நடைபெற்ற வளாகத்திற்குள் நுழைந்தனர். மாநாடு நடைபெறும் அரங்கிற்கு வெளியே பாதுகாப்புக்கு வைக்கப்பட்டு இருந்த தடுப்புகளை தள்ளிக்கொண்டு சுமார் 100 பேர் ஊடுருவ முற்பட்டனர். அவர்களை அங்கிருந்த பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தினர்.
அமெரிக்கன் பேஸ்கட் பால் பயிற்சியாளர் ஸ்டீவ் கிர் உள்பட பல பிரபலங்கள் கமலா ஹாரிசுக்கு தங்கள் ஆதரவை அளித்து பேசினர். இந்தக் கூட்டத்தில் பேசிய கமலா ஹாரிஸ், நாட்டில் உள்ள அனைவரும் நவம்பர் மாதத்தில் நாம் முன்னேறுகிறோம் என்ற ஒரே குரலில் பேச வேண்டும்" என்றார். சற்று நேரத்தில் ஜோ பைடன் உரையாற்ற உள்ளார்.
முன்னதாக சமீபத்தில் நடைபெற்ற கருத்துக்கணிப்பில் கமலா ஹாரிஸ்கே அதிக ஆதரவு இருந்தது தெரியவந்தது. கமலா ஹாரிஸ்க்கு 49 சதவிகிதமும் டிரம்புக்கு 45 சதவிகிதமும் ஆதரவு இருப்பதாக கருத்துக்கணிப்பு கூறியது. கடந்த மாதம் பென்சில்வேனியாவில் நடந்த தேர்தல் பிரசார பேரணியில் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அப்போது அவருக்கு ஆதரவு பெருகியது. ஆனால், கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு நிலைமை மாறியுள்ளது. வெற்றியை நிர்ணயிக்கும் 7 மாகாணங்களிலும் கமலா ஹாரிஸ்க்கே ஆதரவு அதிகம் இருப்பதாக சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications