ஈரான் போரில் அமெரிக்காவின் 42 விமானங்கள் காலி.. கையை மீறிய செலவு! டிரம்ப் மொத்தமாக சொதப்பல்
வாஷிங்டன்: அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டுப் படைகள் கடந்த பிப்ரவரி மாதம் ஈரானுக்கு எதிராக 'ஆபரேஷன் எபிக் ஃபியூரி' தாக்குதலை தொடங்கின. இது ஈரான்-அமெரிக்கா போராக வெடித்தது. இதில் அமெரிக்கா மொத்தம் 42 விமானங்கள் மற்றும் ட்ரோன்கள் இழந்துள்ளதாக தற்போது தெரிய வந்திருக்கிறது.
சுமார் 40 நாட்கள் நீடித்த மோதல்களில் அமெரிக்க ராணுவ இழப்புகள் குறித்து, அந்நாட்டு நாடாளுமன்ற ஆராய்ச்சி சேவை அமைப்பு ஓர் அதிகாரபூர்வ அறிக்கையைச் சமர்ப்பித்தது. அமெரிக்கப் பாதுகாப்புத் துறை மற்றும் மத்திய கட்டளை அமைப்பு (CENTCOM) வழங்கிய தகவல்படி, மொத்தம் 42 விமானங்கள் சேதப்படுத்தப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எந்தெந்த விமானங்கள்?
- 24 MQ-9 ரீப்பர் (Reaper) ட்ரோன்கள்
- 1 MQ-4C ட்ரைடன் (Triton) கண்காணிப்பு ட்ரோன்
- 1 F-35A லைட்னிங் II (Lightning II) ஐந்தாம் தலைமுறை போர் விமானம்
- 4 F-15E ஸ்ட்ரைக் ஈகிள் (Strike Eagle) போர் விமானங்கள்
- 1 A-10 தண்டர்போல்ட் II (Thunderbolt II) தரைவழித் தாக்குதல் விமானம்
பலத்த சேதமடைந்த விமானங்கள்
ஆகியவற்றை அமெரிக்கா இழந்துள்ளது. மேலும், 7 KC-135 ஸ்ட்ராடோடேங்கர் எரிபொருள் நிரப்பும் விமானங்கள், 1 E-3 சென்ட்ரி (Sentry AWACS) வான்வழி முன்னெச்சரிக்கை ரேடார் விமானம், 2 MC-130J கமாண்டோ II சிறப்புப் படை விமானங்கள், மற்றும் 1 HH-60W ஜாலி கிரீன் II மீட்புப் படை ஹெலிகாப்டர் ஆகியவையும் பலத்த சேதங்களை சந்தித்திருக்கிறது.
கையை மீறிய செலவு
இது ஒருபுறம் எனில், மறுபுறம் செலவும் அதிகரித்திருக்கிறது. பென்டகனின் தற்காலிகக் கட்டுப்பாட்டாளர் ஜீல்ஸ் டபிள்யூ ஹெர்ஸ்ட், அமெரிக்க நாடாளுமன்றத்தின் நிதி ஒதுக்கீட்டுக் குழுக் கூட்டத்தில், ஈரானில் நடந்து வரும் ராணுவ நடவடிக்கைகளுக்கான அமெரிக்காவின் செலவு மதிப்பீடு சுமார் ₹2.4 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என்று கூறியிருக்கிறார்.
போரில் இழந்த சேதமடைந்த அதிநவீனப் போர் உபகரணங்களைப் பழுதுபார்ப்பு, மற்றும் புதிய விமானங்களை மாற்றுவது ஆகியவற்றின் காரணமாகவே இந்த பட்ஜெட் அதிகரிப்பு ஏற்பட்டது என அவர் கூறியுள்ளார்.
ஈரானின் சாதனை
இந்த அறிக்கை வெளியானதும், ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் செய்யது அப்பாஸ் அரக்சி தனது 'X' சமூக வலைதளப் பக்கத்தில் அமெரிக்காவை கடுமையாகச் சாடினார்.
"ஈரான் மீதான போர் தொடங்கி சில மாதங்களிலேயே, பில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்புள்ள பல விமானங்களை இழந்துள்ளதை அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது. உலகமே வியந்து பாராட்டும் அமெரிக்காவின் அதிநவீன F-35 போர் விமானத்தை வான்வெளியில் சுட்டு வீழ்த்திய முதல் நாடு என்ற பெருமையை ஈரானின் ஆயுதப்படை பெற்றுள்ளது" என்று அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போன்ற வல்லரசு நாடுகளின் கூட்டு வான்வழித் தாக்குதல் வியூகங்களையும் மீறி, ஈரான் தனது ஏவுகணைத் தடுப்பு ஆற்றலால் அமெரிக்காவின் மிக முக்கியப் போர் விமானங்களை வீழ்த்தியது சர்வதேச ராணுவ வட்டாரத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications