US Tariff: இந்தியாவுக்கு வரியை தீட்டுவது ஏன்? முழுக்காரணமும் ரஷ்யா தானாம்.. போட்டுடைத்த டிரம்ப் டீம்.. பின்னணி
வாஷிங்டன்: உக்ரைன் மீதான போரை ரஷ்யா முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காக தான் இந்தியாவுக்கு அதிகப்படியான வரிகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்தார் என்று வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கரோலின் லிவிட் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரி விதித்துள்ளார். இதில் 25 சதவீத வரி கடந்த 7 ம் தேதி அமலுக்கு வந்துவிட்டது. அடுத்தக்கட்டமாக 25 சதவீத வரி வரும் 27 ம் தேதி அமலுக்கு வரும் என்று அறிவித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்து வருகிறது. ரஷ்யாவிடம் அதிகளவில் கச்சா எண்ணெயை இந்தியா வாங்கி வருகிறது. இதன்மூலம் இந்தியா, ரஷ்யாவின் பொருளாதாரத்தை மேம்படுத்துகிறது. அதனை பயன்படுத்தி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்து வருகிறது என்று டிரம்ப் குற்றம்சாட்டி வரியை அதிரடியாக உயர்த்தினார்.
இந்நிலையில் தான் இந்தியாவுக்கு வரி விதிக்கப்பட்டது ஏன்? என்பது பற்றி வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லிவிட் விளக்கம் அளித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது உக்ரைன் மீதான போரை ரஷ்யா நிறுத்த வேண்டும். இந்த விஷயத்தில் ரஷ்யாவுக்கு மறைமுக அழுத்தம் கொடுப்பதற்காக தான் இந்தியாவின் மீது அதிக வரிகளை டிரம்ப் விதித்தார். இந்தியாவுக்கு முதலில் 25 சதவீதம் வரி விதிக்கப்பட்டது. அதன்பிறகு கூடுதலாக 25 சதவீத வரி விதிக்கப்பட்டது.
ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளை குறிவைத்து புதினுக்கு நெருக்கடி கொடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த வரி விதிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் - ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வருவதில் டொனால்ட் டிரம்ப் உறுதியாக உள்ளார். இதற்காக ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுத்துள்ளார். நீங்கள் பார்த்தது போலவே இந்தியா மீதான வரி விதிப்பு நடவடிக்கையை அவர் எடுத்துள்ளார்'' என்றார்.
இதையடுத்து போர் நிறுத்தம் தொடர்பாக டிரம்ப் - புதினின் அடுத்தக்கட்ட சந்திப்பு பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‛‛டிரம்ப் இந்த சந்திப்பை எதிர்நோக்குகிறார். இந்த போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வர விரும்புகிறார். நேட்டோ பொதுச்செயலாளர் உள்பட அனைத்து ஐரோப்பிய தலைவர்களும் வெள்ளை மாளிகையின் முடிவுக்கு ஒப்புக்கொள்கிறார்கள்'' என்றார்.
இந்த வேளையில்,‛‛டிரம்ப் அதிபராக இருந்திருந்தால் இந்த போர் வந்திருக்காது என்பதில் உடன்படுகிறீர்களா?'' என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‛‛நான் இந்த பதவியில் இருந்திருந்தால் போர் தொடங்கி இருக்காது என்று டிரம்ப் அடிக்கடி கூறுகிறார். அதனை புதினும் உறுதி செய்துள்ளார்'' என்றார்.












Click it and Unblock the Notifications