மொத்த உலகமும் அலறும்.. ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கினாலும் சீனாவுக்கு வரி போடாதது ஏன்? பின்னணி
வாஷிங்டன்: ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்தியாவுக்கு மட்டும் வரி விதித்தது ஏன்? சீனாவுக்கு ஏன் வரி விதிக்கப்படவில்லை? என்பது பற்றி அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ கூறியுள்ளார். அதோடு சீனாவுக்கு வரி விதித்தால் அது உலகளாவிய கச்சா எண்ணெய் சந்தையை சீர்க்குலைத்து மொத்த நாடுகளுக்கும் பிரச்சனையை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார். அப்படி என்ன நடக்கும்? வாங்க பார்க்கலாம்.
ரஷ்யாவிடம் இருந்து நம் நாடு கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. ரஷ்யாவுடன் நாம் நெருங்கிய நட்பை வைத்துள்ளோம். உக்ரைன் போரால் ரஷ்யா மீது அமெரிக்கா உள்பட மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இதனால் நம் நாட்டுக்கு ரஷ்யா சலுகை விலையில் கச்சா எண்ணெயை வழங்கி வருகிறது.

இதனை அமெரிக்க அதிபர் டிரம்பால் பொறுத்து கொள்ள முடியவில்லை. ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ரைன் போருக்கு இந்தியா உதவுகிறது என்று டிரம்ப் கூறினார். அதுமட்டுமின்றி ரஷ்யா உடனான வர்த்தகத்தால் இந்தியாவுக்கு அபராதம், வரி என்று 25 சதவீதத்தை கடந்த 1ம் தேதி அறிவித்தார். அதன்பிறகு நேற்று இன்னொரு 25 சதவீத வரியை அறிவித்தார். இதன்மூலம் மொத்தம் நம் நாட்டுக்கு 50 சதவீத வரி போடப்பட்டுள்ளது.
இதில் முதற்கட்டமாக கடந்த 7 ம் தேதி 25 சதவீத வரி அமலுக்கு வந்துவிட்டது. அடுத்தக்கட்டமாக 25 சதவீத வரி ஆகஸ்ட் 27 ம் தேதிக்கு பிறகு நடைமுறைக்கு வரும் என்று டிரம்ப் அறிவித்துள்ளார். இதற்கிடையே தான் அனைவரிடமும் ஒரு கேள்வி எழுந்தது. ரஷ்யாவிடம் நம் நாட்டை போலவே சீனாவும் கச்சா எண்ணெயை வாங்கி வருகிறது. இன்னும் சொல்லப்போனால் ரஷ்யாவிடம் இருந்து நம் நாட்டை விட சீனா தான் அதிகமாக கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது.
இப்படியான சூழலில் சீனாவை விட்டு விட்டு இந்தியாவை மட்டும் டிரம்ப் குறிவைத்து வரி போட்டு இருப்பது ஏன்? என்ற கேள்வி எழுந்தது. குறிப்பாக சீனாவில் இருந்து அரிய வகை கனிமங்கள் அமெரிக்காவுக்கு அதிகம் செல்கிறது. வரி போட்டால் அதனை சீனா நிறுத்தும் என்ற அச்சத்தில் டிரம்ப் அந்த நாட்டை சீண்டவில்லை என்ற தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் தான் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கினாலும் கூட டொனால்ட் டிரம்ப் சீனாவுக்கு வரி விதிக்காததன் பின்னணி குறித்து அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கே ரூபியோ விளக்கமளித்துள்ளார். Fox News நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில் இதுபற்றி பேசி உள்ளார். இதுபற்றி மார்கோ ரூபியோ கூறியதாவது:
ரஷ்யாவிடம் சீனா கச்சா எண்ணெய் வாங்குகிறது. இதற்காக சீனாவுக்கு இரண்டாம் நிலை வரி அல்லது பொருளாதார தடைகளை விதிக்கும்போது அந்த நாடு ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் கச்சா எண்ணெயை சுத்திகரித்து உலக சந்தைக்கு அனுப்பும். இந்த எண்ணையை வாங்குவோரும் அதிக விலை கொடுக்க நேரிடும். மாறாக சீனாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கிடைக்காவிட்டால் பிற நாடுகள் மாற்று ஆதாரங்களை தேட வேண்டியிருக்கும். இது உலகளாவிய கச்சா எண்ணெய் சந்தையை சீர்க்குலைக்கும். விலையேற்றத்தை ஏற்படுத்தும். இதனால் பல நாடுகளுக்கு பிரச்சனையை ஏற்படுத்தும்.
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் விவகாரத்தில் சீனா, இந்தியா மீது 100 சதவீத வரியை விதிக்கும் மசோதாவை கொண்டு வருவது பற்றி நாங்கள் விவாதித்தோம். ஆனால் பல ஐரோப்பிய நாடுகள் அதிருப்தியடைந்தன. இந்தியாவிற்கு மிகப்பெரிய அளவில் எரிசக்தி தேவைகள் உள்ளன. அதில் எண்ணெய், நிலக்கரி, எரிவாயு உள்ளிட்டவை அடங்கும். ரஷ்யாவிலிருந்து அதை வாங்குகிறது. ஏனெனில் ரஷ்ய எண்ணெய் மலிவாக கிடைக்கிறது. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை இந்தியா தொடர்ந்து வாங்குவது உக்ரைன் போரை தொடர வழிவகுக்கும் முயற்சியாக நாங்கள் பார்க்கிறோம். இது எங்களை எரிச்சலூட்டுகிறது. ஆனால் இந்தியா மீதான நடவடிக்கைக்கு இது மட்டுமே காரணம் இல்லை'' என்றார்.












Click it and Unblock the Notifications