ஈரான் பொருளாதாரமே முடங்கும்.. செக் வைத்த அமெரிக்கா.. சம்பந்தமே இல்லாமல் சிக்கிய இந்திய நிறுவனங்கள்
வாஷிங்டன்: ஈரானின் நடவடிக்கைகள் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே ஈரான் பொருளாதாரத்திற்கு மிகப் பெரிய செக் வைக்கும் வகையில் அமெரிக்கா மிக முக்கிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால் இந்தியாவைச் சேர்ந்த இரு நிறுவனங்களும் பாதிக்கப்படும் சூழலும் ஏற்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் பதற்றம் தொடர்ந்தே வருகிறது. அங்கு ஒரு பக்கம் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் தொடர்கிறது. ஹிஸ்புல்லா உடன் அமைதி ஒப்பந்தம் வந்த போதிலும் இஸ்ரேல் அவ்வப்போது தாக்குதலைத் தொடர்ந்து நடத்துகிறது.

மற்றொரு புறம் ஈரான் உடனும் மோதல் போக்கையே இஸ்ரேல் கொண்டு இருக்கிறது. இந்தச் சூழலில் ஈரானின் பொருளாதாரத்திற்கு செக் வைக்கும் நடவடிக்கையை அமெரிக்கா எடுத்துள்ளது.
அமெரிக்கா ஈரான்: கடந்த பல ஆண்டுகளாகவே ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நல்லுறவு இருந்ததே இல்லை.. இரு தரப்பிற்கும் இடையே மோதல் போக்கே நிலவி வருகிறது. இதனால் ஈரான் மீது ஏற்கனவே அமெரிக்கா ஏகப்பட்ட பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இந்த தடைகள் ஈரான் பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதித்துள்ளது. இதற்கிடையே இப்போது ஈரானுக்கு மற்றொரு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அதாவது என்ன தான் ஈரான் கச்சா எண்ணெய் வளம் கொண்ட நாடாக இருந்தாலும் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளால் கச்சா எண்ணெய்யைப் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடிவதில்லை. சில நிறுவனங்கள் மூலமாக மட்டுமே கச்சா எண்ணெய்யை வெளிநாடுகளுக்கு விற்று வருகிறது. இந்தச் சூழலில் தான் இப்போது ஈரான் மீது அமெரிக்கா கூடுதலாக சில பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
இதுதான் இஸ்ரேல் ஸ்டைல்.. ஏவுகணை கூட தேவையில்லை.. வெறும் ஸ்பீக்கரை வைத்து நடத்தும் "உளவியல்" போர்!
பொருளாதாரத் தடைகள்: ஈரானின் கச்சா எண்ணெய்யை மற்ற நாடுகளுக்குக் கொண்டு செல்லும் 35 நிறுவனங்கள் மீது இந்த பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இரண்டு இந்திய நிறுவனங்களும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. ஈரானின் பொருளாதாரம் ஏற்கனவே மிகவும் பலவீனமாக இருக்கும் நிலையில், அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால் ஈரான் திவாலாகும் சூழல் கூட ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது.
இந்திய நிறுவனங்கள்: கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் டிரஷரி துறை இந்த 35 நிறுவனங்கள் மற்றும் கப்பல்கள் மீது பொருளாதாரத் தடைகள் விதித்தன. அமெரிக்காவின் இந்த தடை பட்டியலில் இந்திய நிறுவனங்களான விஷன் ஷிப் மேனேஜ்மென்ட் மற்றும் டைட்ஷிப் ஷிப்பிங் நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளன. இந்த இரு நிறுவனங்களுமே ஈரான் நாட்டில் இருந்து கச்சா எண்ணெய்யை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதாகச் சொல்லப்படுகிறது.
கடந்த அக். 1ம் தேதி இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்திய நிலையில், அதற்குப் பதிலடியாகவே அமெரிக்கா ஈரானின் பெட்ரோலிய துறைகள் மீது இந்த புதிய தடைகளை விதித்துள்ளது. மேலும், ஈரான் தனது அணு ஆயுதங்களை உருவாக்கி வருவதாகச் சொல்லப்படும் நிலையில், அதைத் தடுக்கும் வகையிலும் இந்த நடவடிக்கையை அமெரிக்கா எடுத்துள்ளது.
அமெரிக்கா சொல்வது என்ன: ஏனென்றால் இதுபோன்ற கச்சா எண்ணெய் விற்பனையில் இருந்து வரும் வருமானத்தைக் கொண்டே ஈரான் தனது அணு சக்தி திட்டங்களுக்கு நிதியளித்து வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை உருவாக்கவும் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா உள்ளிட்ட அமைப்புகளுக்கு நிதியளிக்கும் ஈரான் இந்த நிதியைத் தான் பயன்படுத்தி வருவதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவே ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை அமெரிக்கா டார்கெட் செய்துள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க டிரஷரி துறை துணை செயலாளர் பிராட்லி டி ஸ்மித் கூறுகையில், "ஈரான் தனது கச்சா எண்ணெய் ஏற்றுமதி மூலம் கிடைக்கும் வருமானத்தையே தனது அணுசக்தி திட்டம், பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் டிரோன் தொழில்நுட்பம் மற்றும் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு அளிப்பது ஆகியவற்றுக்கு பயன்படுத்துகிறது. அதைத் தடுக்கும் நோக்கில் இப்போது சில நிறுவனங்கள் மற்றும் கப்பல்களுக்குத் தடை விதிக்கிறோம்" என்றார். அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால் ஈரானுக்கு கூடுதல் அழுத்தம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications