மீண்டும் வெடிக்கும் ஈரான் போர்? பேச்சுவார்த்தைக்கு கிளம்பாத ஜேடி வான்ஸ்! பாகிஸ்தான் முயற்சி தோல்வி
வாஷிங்டன்: அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. இந்நிலையில் தான் மீண்டும் போர் வெடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்க தொடங்கி உள்ளனர். பாகிஸ்தானில் திட்டமிடப்பட்ட அமெரிக்கா - ஈரான் இடையேயான 2வது கட்ட பேச்சுவார்த்தைக்கு ஈரான் மறுத்து வரும் நிலையில் அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் தனது பயணத்தை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளார். இதனால் போர் பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது.

ஈரான் - அமெரிக்கா இடையேயான 2 வார காலத்துக்கான போர் நிறுத்தம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. இதற்கிடையே தான் மீண்டும் இருநாடுகள் இடையே போர் பதற்றம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. போர் நிறுத்த காலத்தில் அமெரிக்கா, ஈரானிடம் 2 முக்கிய விஷயங்களை முன்வைத்தது.
ஒன்று ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பது. இன்னொன்று அணுஆயுதம் தயாரிப்பதை கைவிட்டு செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று 2 விஷயத்தை கூறியது. ஆனால் ஈரான் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.
பேச்சுவார்த்தைக்கு தயாராகாத ஈரான்
இதுதொடர்பாக பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா - ஈரான் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் 2வது கட்ட பேச்சுவார்த்தை இன்று பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா தயாராக உள்ளது. ஆனால் ஈரான் தயாராக இல்லை. இது அமெரிக்காவை கோபப்படுத்தி உள்ளது.
பயணத்தை ஒத்திவைத்த ஜேடி வான்ஸ்
இந்நிலையில் தான் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தும் அமெரிக்கா குழுவிற்கு துணை அதிபர் ஜேடி வான்ஸ் தலைமை வகித்து வருகிறார். தற்போது ஈரானின் பிடிவாதத்தால் ஜேடி வான்ஸ் தனது பாகிஸ்தான் பயணத்தை ஒத்திவைத்துள்ளார். ஈரான் குழுவினர் பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தானுக்கு செல்ல மறுப்பதால் ஜேடி வான்ஸ் இந்த முடிவை எடுத்துள்ளார்.
இருப்பினும் இந்த பயணம் தற்காலிகமான ஒத்திவைப்பு தான். ஈரான் பேச்சுவார்த்தை சம்மதிக்கும் பட்சத்தில் எப்போது வேண்டுமானாலும் அவர் பாகிஸ்தான் புறப்பட்டு செல்லலாம். ஆனால் தற்போதைய சூழலில் ஈரான் இறங்கி வர மறுப்பதால் பேச்சுவார்த்தை இன்று நடக்க வாய்ப்பில்லை என்கின்றனர் சர்வதேச அரசியல் நோக்கர்கள்.
ஈரான் தரப்பு சொல்வது என்ன?
இதனால் மீண்டும் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாவி (Esmail Baghaei) அரசு தொலைக்காட்சியில் பேசியபோது, ''பாகிஸ்தானுக்கு பேச்சுவார்த்தை குழுவை அனுப்புவதா இல்லையா என்பது இன்னும் முடிவு செய்யவில்லை. அமெரிக்காவின் சமீபத்திய நடவடிக்கையால் தான் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளது. ஈரானின் சரக்கு கப்பலை அமெரிக்கா கைப்பற்றி உள்ளது. இது கடல் வழி கொள்ளை மற்றும் அமெரிக்க அரசின் பயங்கரவாதம். இந்த நடவடிக்கை அமெரிக்காவின் நேர்மையை கேள்விக்குள்ளாக்குகிறது'' என்றார்.
டிரம்ப் கொடுத்த வார்னிங்
ஈரான் - அமெரிக்கா இடையேயான இந்த மோதல் தற்போது மீண்டும் போர் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், ஈரானுக்கு கடும் வார்னிங் செய்துள்ளார்.
இதுபற்றி அவர் ''ஈரான் மீது குண்டு வீச நான் தயாராக இருக்கிறேன். அதுதான் சிறப்பானதாக இருக்கும் என்று நினைக்கிறேன். ராணுவமும் ஆர்வமுடன் இருக்கிறது. ஏனென்றால் அமெரிக்காவுடனான 2வது கட்ட பேச்சுவார்த்தையில் ஈரான் ஒப்பந்தம் செய்ய வேண்டும்.
ஒருவேளை இதில் ஒப்பந்தம் செய்யாவிட்டால் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை எல்லாம் நடத்தமாட்டோம். எங்களிடம் அவ்வளவு காலம் இல்லை. இதனால் ஈரான் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். நாங்கள் சிறந்த ஒப்பந்தத்தை பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.
ஈரானுக்கு ஒப்பந்தம் செய்வதை தவிர வேறு வழியில்லை. இந்த ஒப்பந்தம் செய்தால் ஈரான் நல்ல நிலையை அடைய முடியும். அதேவேளையில் போர் நிறுத்தம் நிறைவு பெற்றால் ஈரானில் பல குண்டுகள் வெடிக்கும்'' என்று வார்னிங் செய்துள்ளார். இதுவும் இருநாடுகள் இடையேயான போர் பதற்றத்தை இன்னும் தீவிரமாக்கி உள்ளன.












Click it and Unblock the Notifications