கலிஃபோர்னியாவில்.. இந்தியர் கடையில் திருட்டு! கையும் களவுமாக சிக்கிய 'அமெரிக்க' பெண்!
வாஷிங்டன்: கலிபோர்னியா மாகாணத்தில், சாக்ரமெண்டோ நகரில் இந்தியரின் சூப்பர் மார்க்கெட் கடையில், திருட்டில் ஈடுபட்ட அமெரிக்க பெண் கையும் களவுமாக சிக்கியிருக்கிறார். இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகி வருகிறது.
இந்த கடை இந்தியரால் நடத்தப்பட்டு வந்தது. கடையை கவனித்துக்கொள்ள உள்ளூர் அமெரிக்க பெண் ஒருவர் பணியில் அமர்த்தப்பட்டிருந்தார். ஆனால் அப்பெண் ரூ.80 லட்சம் வரை திருடி இருக்கிறார். சமீப காலமாக அமெரிக்காவில் இந்திய பெண்கள் திருட்டில் ஈடுபட்டதாக கூறப்படும் சம்பவங்கள் குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், இந்த வீடியோ வெளியாகி மேலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோவை இதுவரை 9 லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள். வசமாக சிக்கிய அப்பெண் தன்னை ஜெயிலுக்கு அனுப்ப வேண்டாம் என்று கெஞ்சுவது பதிவாகியிருக்கிறது. இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. வீடியோவில், கடையின் இந்திய மேனேஜர் அந்தப் பெண்ணை நேருக்கு நேர் வைத்து சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து திருட்டில் ஈடுபட்டதற்காக அப்பெண்ணை திட்டுகிறார். "நான் என் கடையின் சாவியை உன்னிடம் கொடுத்தேன். நீ மீண்டும் மீண்டும் என்னிடம் திருடினாய்" என்று மேனேஜர் பேசுவது வீடியோவில் பதிவாகியிருக்கிறது.
திருட்டுக்கான ஆதாரங்களைத் தான் சேகரித்துள்ளதாகவும், அவற்றை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப் போவதாகவும் மேனேஜர் கூறுகிறார். ஆரம்பத்தில் குற்றச்சாட்டுகளை மறுத்த அந்தப் பெண், ஆதாரங்கள் பற்றி சொன்னதும், கருணை காட்டுமாறு கெஞ்சத் தொடங்குகிறார். "தயவுசெய்து என்னைச் சிறைக்கு அனுப்ப வேண்டாம். எனக்கு 5 மற்றும் 7 வயதில் இரண்டு மகள் இருக்கின்றனர். எனக்கு வேறு யாருமில்லை. என்னைச் சிறைக்கு அனுப்பாமல் இதை நாம் தீர்க்க முடியும். நான் திருடியதாக எனக்குத் தோன்றவில்லை" என்று அப்பெண் வாதிடுகிறார்.
This video won't go viral because the thief ain't an Indian this time pic.twitter.com/NTjurwx5g1
— Diksha Kandpal🇮🇳 (@DikshaKandpal8) October 28, 2025

இந்தச் சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில், குறிப்பாக X தளத்தில், பெரும் விவாதம் நடைபெற்று வருகிறது. "பூர்வீக நிலங்களை செவ்விந்தியர்களிடமிருந்து திருடியது தொடங்கி, அவர்கள் செய்த கொள்ளைகள் வரை வெள்ளைக்காரர்கள் இதைச் செய்யும்போது அது வழக்கமாக வெளிவருவதில்லை. இதே இந்தியப் பெண்ணாக இருந்திருந்தால், அனைத்து இந்தியர்களையும் மோசடி செய்பவர்கள் என்று கூறி நூற்றுக்கணக்கான ட்வீட்கள் 1 லட்சம் லைக்குகளுடன் வந்திருக்கும்" என்று கமெண்ட் செய்திருக்கின்றனர்.
சமீப காலமாக அமெரிக்காவில் உள்ள கடைகளில் இந்தியப் பெண்கள் திருட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சம்பவங்கள் குறித்த தொடர் வீடியோக்கள் வெளியாகி வருகின்றன. கடந்த செப்டம்பரில், ஒரு இந்தியப் பெண் கடையில் திருடியதற்காக காவல்துறையினரால் விசாரிக்கப்பட்டபோது அழுது, மூச்சுத்திணறலுக்கு உள்ளாகியிருந்தார்.
கடந்த ஜூலையில், இல்லினாய்ஸில் உள்ள ஒரு கடையில் ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள பொருட்களை திருடியதாக மற்றொரு இந்தியப் பெண் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications