"ஆடு தாண்டும் சின்ன இடம்".. கர்நாடகா - தமிழ்நாடு மோதுவது ஏன்? மேகதாது அணையின் பின்னணி

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: காவிரிக்கு குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடகா அரசு அணை கட்டுவதில் உறுதியாக உள்ளது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு உள்ளது. இந்நிலையில் தான் மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்தும், கர்நாடகா அரசு அணை கட்டும் முயற்சிக்கு மத்திய அரசு அனுமதி வழங்க கூடாது என்றும் தமிழக சட்டசபையில் முதல்வர் விஜய் இன்று தனி தீர்மானம் கொண்டு வந்து அனைத்து கட்சிகளின் ஆதரவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் மேகதாது அணை எங்கு அமைகிறது? அந்த அணை தமிழகம் - கர்நாடகா எல்லையில் எங்கு அமைகிறது? அதனால் தமிழகத்துக்கு ஏற்படும் பாதிப்பு பற்றி இங்கு முழுமையாக பார்க்கலாம்.

தமிழ்நாடு - கர்நாடகா இடையே நீண்டகாலமாக காவிரி நதி நீரை பங்கீட்டு கொள்வதில் பிரச்சனை இருந்து வருகிறது. நீண்டகாலமாக சட்டபோராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2018 ம் ஆண்டில் உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பு வழங்கியது. அதில் கர்நாடகா, காவிரியில் தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீரை வழங்க வேண்டும் என்று தெரிவித்தது.

what-is-mekedatu-dam-why-did-karnataka-and-tamil-nadu-clashes-for-this-full-details-here

ஆனால் கர்நாடகா அரசு இந்த தண்ணீரை குறிப்பிட்ட காலத்துக்குள் திறந்து விடுவது இல்லை. வறட்சி, மழையின்மை, குடிநீர் தட்டுப்பாடு உள்ளிட்டவற்றை காரணம் காட்டி தண்ணீர் திறப்பதை முறையாக செயல்படுத்துவது இல்லை. இது தமிழக விவசாயிகளையும், அரசியல் கட்சிகளையும் கோபப்படுத்தி உள்ளது.

மேகதாது அணை திட்டம்

இதற்கிடையே தான் காவிரிக்கு குறுக்கே கர்நாடகா அரசு மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட திட்டமிட்டுள்ளது. கன்னடத்தில் 'மேக்கே' என்றால் ஆடு. 'தாட்டு' என்றால் தாண்டும் இடம். ஆடு தாண்டும் இடம் என்பது தான் இதன் பொருள். அதாவது குடகு மாவட்டத்தில் பிறக்கும் காவிரி பறந்து விரிந்து தமிழகத்தை நோக்கி ஓடிவருகிறது.

ஆனால் இந்த ஒரு இடத்தில் மட்டும் குறுகலாக காவிரி பாய்கிறது. இதன் ஒரு கரையில் இருந்து இன்னொரு கரைக்கு ஆட்டுக்குட்டிகளால் எளிதாக தாண்ட முடியும். ஆடு தாண்டும் இடம் என்பதால் தான் இதற்கு பெயர் 'மேக்கே தாட்டு' என்று பெயர் வந்தது. இது தற்போது மறுவி மேகதாது என அழைக்கப்படுகிறது. இங்கு அணை கட்டப்படுவதால் தான் மேகதாது அணை என அழைக்கப்படுகிறது.

what-is-mekedatu-dam-why-did-karnataka-and-tamil-nadu-clashes-for-this-full-details-here

இங்கு அணை கட்டும் திட்டத்தை கர்நாடகா அரசு 2013-2014ம் ஆண்டில் அறிவித்தது. அப்போது கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடந்தது. முதல்வராக சித்தராமையா இருந்தார். கர்நாடக அரசு மேகதாது பகுதியில் சுமார் 67.16 டிஎம்சி தண்ணீரை தேக்கும் அளவுக்கு அணை கட்ட திட்டமிட்டுள்ளது. இந்த அணையானத 99 மீட்டர் உயரத்தில் 736 மீட்டர் நீளத்தில் கட்டப்பட உள்ளது. இந்த அணையின் மூலம் பெங்களூர், மைசூர், சாம்ராஜ்நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வசிக்கும் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய இந்த திட்டம் முக்கியம் என்றும், கோடை காலத்தில் அணையில் தண்ணீரை சேமித்து வைத்து தமிழகத்துக்கு வழங்கப்படும் என்றும் கர்நாடகா அரசு தெரிவித்தது. அதுமட்டுமின்றி மேகதாது அணையில் இருந்து 400 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு எதிர்ப்பது ஏன்?

இந்த அணை தமிழக எல்லைக்கு மிக அருகே அமைய உள்ளது. கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்குள் காவிரி நீர் நுழையும் எல்லையான பிலிகுண்டுலு மேகதாது அணை அமையும் இடம் சில கிலோமீட்டர் தொலைவு தான். இதனால் இங்கு அணை கட்டப்பட்டால் கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய உபரி நீர் முற்றிலுமாக தடுத்து நிறுத்தப்படும்.

உச்ச நீதிமன்றம் உத்தரவின்படி 177.25 டி.எம்.சி தண்ணீரைத் தமிழகத்திற்குத் தடையின்றி வழங்குவோம் என்று கர்நாடகா கூறினாலும், மேகதாதுவில் அணை வந்துவிட்டால் தமிழகத்தின் டெல்டா மாவட்டப் பாசனம் மற்றும் வாழ்வாதாரம் கர்நாடகாவின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் சென்றுவிடும் என்பதே தமிழகத்தின் அச்சமாக உள்ளது. இதனால் தான் மேகதாது அணை கட்ட கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

மேகதாது திட்டம் எந்த நிலையில் உள்ளது?

கடந்த 2018ம் ஆண்டு மத்திய நீர் ஆணையம் (CWC) இந்தத் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை (DPR) தயாரிக்க கர்நாடகாவிற்கு முதன்முதலில் நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி அளித்தது. இதையடுத்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தொடங்கியது. தற்போது விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.

what-is-mekedatu-dam-why-did-karnataka-and-tamil-nadu-clashes-for-this-full-details-here

2018-2019 காலக்கட்டத்தில் இந்த மேகதாது அணையின் திட்ட மதிப்பு ரூ.9,000 கோடி ஆகும். தற்போது வனப்பகுதிக்கு மாற்றாக நிலம் கையகப்படுத்துதல் மற்றும் பிற காரணங்களால் இந்த திட்ட மதிப்பு மேலும் அதிகரித்துள்ளது. கடந்த 2022-23 ஆம் ஆண்டு கர்நாடக மாநில பட்ஜெட்டில், மேகதாது அணை கட்டுமான பணிகளுக்காக முதற்கட்டமாக ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிதியை அப்போதைய பாஜக முதல்வர் பசவராஜ் பொம்மை சட்டசபை பட்ஜெட் தாக்கலின்போது அறிவித்தார்.

நீதிமன்ற வழக்குகள்

2025 நவம்பர் 13ம் தேதி மேகதாது அணை திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை (DPR), காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) மற்றும் காவிரி நீர் ஒழுங்குமுறைக்குழு (CWRC) ஆகிய நிபுணர் குழுக்களின் பரிசீலனையில் மட்டுமே உள்ளது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இதனை எதிர்த்து முன்கூட்டியே (Premature) தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவையும் (Review Petition) உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு சமீபத்தில் தள்ளுடி செய்தது.

அதேவேளையில் உச்சநீதிமன்றம் ''ஒரு மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்ட தண்ணீரை அம்மாநிலம் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது அந்த மாநிலத்தின் உரிமை. ஆனால், அது கீழ்மடை மாநிலமான தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதிக்க கூடாது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் இறுதி ஒப்புதலுக்குப் பிறகு, திட்ட அறிக்கை (DPR) அங்கீகரிக்கப்பட்டால் தமிழ்நாடு அரசு சட்டப்படி மீண்டும் நீதிமன்றத்தை நாட முழு சுதந்திரம் உண்டு" என உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. மேகதாதுவில் அணை கட்ட நீதிமன்றம் இடைக்கால தடையோ, நிரந்தர தடையோ தற்போது வரை விதிக்கவில்லை. அதேபோல் இறுதி அனுமதியும் கொடுக்கவில்லை. இதனால் மேகதாது அணை தொடர்பாக மீண்டும் தமிழ்நாடு - கர்நாடகா இடையே பிரச்சனை கிளம்பி உள்ளது.

டிகே சிவக்குமாருக்கு அதிக ஆர்வம் ஏன்?

மேகதாது என்ற இடம் கர்நாடகாவின் ராமநகர் மாவட்டம் கனகபுரா அருகே அமைந்துள்ளது. கனகபுரா சட்டசபை தொகுதியின் எம்எல்ஏவான டிகே சிவக்குமார் தான் தற்போது அம்மாநில முதல்வராக உள்ளார். இதனால் அணையை எப்படியாவது கட்டி விட வேண்டும் என்பதில் டிகே சிவக்குமார் உறுதியாக உள்ளார். இதனால் கர்நாடகா முதல்வர் என்பதை தாண்டி மேகதாது அணை திட்டம் தனது சொந்த மாவட்டம் மற்றும் சட்டசபை தொகுதிக்கான முக்கிய திட்டமாக டிகே சிவக்குமார் நினைக்கிறார். இதனால் தான் அவர் அணையை கட்டியே தீருவோம் என்று ஒற்றை காலில் நிற்கிறார்.

தமிழக தனி தீர்மானம் ஏன் முக்கியம்?

இந்நிலையில் தான் மேகதாதுவில் அணை கட்ட முயலும் கர்நாடகா அரசுக்கு அனுமதி வழங்க கூடாது என்று முதல்வர் விஜய் தலைமயைிலான தவெக அரசு இன்று சட்டசபையில் தனி தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றி உள்ளது. மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினால் அது மொத்த தமிழகத்தின் எதிர்ப்பையும் பிரதிபலிப்பதாக அமையும். இதனால் தான் முதல்வர் விஜய் இந்த தனி தீர்மானத்தை கொண்டு வந்து நிறைவேற்றி உள்ளார்.

கர்நாடகாவிலும் எதிர்ப்பு

மேகதாது அணைக்கு தமிழகத்தில் மட்டும் தான் எதிர்ப்பு உள்ளதா? என்றால் அதுதான் இல்லை. கர்நாடகாவிலும் கூட ஒரு தரப்பினர் இந்த அணை திட்டத்தை எதிர்த்து வருகின்றனர். ஏனென்றால் மேகதாது அணை அமையும் இடம் என்பது காவிரி வனவிலங்கு சரணாலய பகுதிக்குள் வருகிறது. இங்கு அணை கட்டும்போது சரணாலய பகுதிகள் அணைக்குள் மூழ்கும். இதனால் சுற்றுச்சூழல் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இருப்பினும் கர்நாடகா அரசு விடுவதாக வில்லை. மேகதாதுவில் அணை கட்டுவதில் உறுதியாக உள்ளது. இதனால் 12,600 ஏக்கர் வருவாய் நிலத்தை கண்டறிந்து வனத்துறையிடம் ஒப்படைக்க கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் 12,600 ஏக்கர் மாற்று நிலத்தை தேடும் பணியில் அரசு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் கர்நாடகா மக்களின் எதிர்ப்பை அம்மாநில அரசு எளிதில் சமாளித்துவிடும். ஆனால் தமிழ்நாட்டைசமாளிப்பது கடினம். இதனால் மேகதாது அணை திட்டம் என்னவாகும் என்பதை என்பது பற்றி அறிய நாம் இன்னும் சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+